(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அரசர்க்கழகு அறநெறி காத்தல்
“நாள்தொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தொறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்
நாள்தொறும் செல்வம் நரபதி குன்றுமே” பாடல் 239
அன்றாடம் அரசன் அவனுடைய நாட்டில் அற ஒழுக்கம் கெடாதிருக்கப் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி அவன் அன்றாடம் அவனுடைய நாட்டில் நீதி முறை சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்தறியத் தவறுவானேயானால், அவனுடைய நாடு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டழியும். அறியாமை எங்கும் மிகும். செல்வமும் செல்வாக்கும் நாளும் குறைய, அரசனும் அழிவான்.
“வேட நெறிநில்லார் வேடம்பூண்டு என்பயன்
வேட நெறிநிற்போர் வேடம் மெய்வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே” பாடல் 240
போட்டுக் கொண்டிருக்கும் வேடத்திற்கு ஏற்ற நெறிமுறைகளை மேற்கொண்டு, அதன்படி நடக்க இயலாதவர்கள், அந்த வேடம் போட்டுக் கொண்டிருப்பதால் என்ன பயன்? போட்டிருக்கும் வேடத்திற்கேற்ற விதி முறைகளை மேற்கொண்டொழுகுபவர்களே உண்மையான வேடம் தரித்தவர் ஆவார்கள். தாங்கிய வேடத்திற்கு ஏற்ற வழியில் செல்லாத கபட வேடதாரிகளை, வலிமை மிக்க அரசன் தண்டித்து, வேடத்திற்கேற்றபடி நடக்கச் செய்வது, அவனுக்கு வீடு பேற்றை வழங்கும்.
மூடம் போடும் பொய் வேடம்
“மூடம் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன்று இலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்(து)
ஆடம்பர நூல் சிகைஅறுத்தால் நன்றே” பாடல் 241
அறியாமையைப் போக்கிக் கொள்ளாமல் தலையில் குடுமியும், மார்பில் பூணூலும் அணிந்து கொண்டு, பொய் வேடம் போட்டிருக்கும் மனிதர் உண்மைத் தவ வேடர்களைப் போல நடிக்க முற்பட்டால், உலகம் துயரத்தில் வாடும். பெரு வாழ்வுடைய அரசனுடைய புகழ் பெருமை எல்லாம் இல்லாது அழியும். எனவே மீண்டும் இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்துப் பொய் வேடதாரிகள், வீண் பகட்டுக்காகக் கொண்டிருக்கும் பூணூலையும், குடுமியையும் அறுத்தெறிவது கூட நல்லதேயாகும்.
போலிகளைச் சோதித்துப் புத்தி புகட்டுக
“ஞானமி லாதார் கடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானம்உண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே” பாடல் 242
மெய்ஞ்ஞான அறிவில்லாதவர்கள், சடைமுடியும், முப்புரி நூலும் கொண்டு, ஞானிகள் போல நடிப்பார்கள். அவர்களை நாடாளும் அரசன் உண்மையான ஞானிகளைக் கொண்டே சோதனை செய்து, அவர்களுக்கு ஞானம் உண்டாகச் செய்தல் நாட்டிற்கு நல்லதாகும்.
காவலன் காக்கக் கடமைப் பட்டவை
“ஆவையும் பாவையும் மற்று அறவோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையுங்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே” பாடல் 243
நாடாளும் மன்னன் நாட்டில் உள்ள பசுக்களையும், பெண்களையும், அறநெறி உணர்ந்த சான்றோர்களையும், தேவர்களும் வணங்கித் தொழத்தக்க (போற்றும்) தவவேடம் பூண்ட ஞானிகளையும் காக்கக் கடமைப் பட்டவன். இவர்களைக் காக்காது அரசன் கைவிட்டு விடுவானானால், மறுபிறப்பிலும் மீண்டெழ முடியாத நரகத்தை அடைவான்.
ஆறில் ஒரு பங்கே அரசனுக்கு உரியது
“திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவையும்
அறைந்நிடில் வேந்தனுக்கு ஆறிவொன்று ஆமே” பாடல் 244
மறுமைக்கு மேன்மை தரும் பேரின்ப வீட்டையும், இம்மைக்குப் பெருமை சேர்க்கும் பொருட் செல்வத்தையும் அடைய வேண்டும் என்றால், தன்னை மறந்த நிலையிலேயும் அறச் செயல்களையே செய்ய வேண்டும். உயிர் வாழச் சிறந்ததான நீர் சூழ்ந்த இந்த உலகில் செய்யும் தொழில்கள் அனைத்தையும் பற்றிச் சொல்வதானால், அவற்றில் ஆறில் ஒரு பங்கே பெறத்தக்க உரிமைப் பொருள் வரியாகும்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
“வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாம்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே” பாடல் 245
நாடாளும் மன்னன் தன்நாட்டை நன்றாக ஆட்சி செய்து காத்து வருவானானால், அவன் நாட்டில் இருக்கின்ற மக்களும் அவ்வழியிலே நல்லவர்களாக இருப்பார்கள். அப்படியில்லாமல் (நாடு பிடிக்கும் ஆசையால் போர் வெறி கொண்டு) இவனுடைய நாட்டை இன்னொருவர் வென்று கொள்ள, மற்றவர் நாட்டை இவன் போரிட்டு வெல்வது என்று, மாறிமாறிப் பாய்ந்து போரிட்டு மடிவது, புலிக் குணம் கொண்டவனாக வேந்தன் இருக்கின்றான் என்பதற்கு அடையாளம்.