நினைவுகள் 2
"மடம்"
எங்களால் என்றுமே மறக்க முடியாத இடம். அதனைச் சுற்றித்தானே அனைவரும் திரிந்தோம். இளையோர் பெரியோர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக்கொண்ட அதன் குணம். சிறிய இடம் தான் என்றாலும் அதனைச் சுற்றித்தானே அனைத்தும் நகர்ந்தது. ஒன்றுகூடல் என்பது அங்குதானே எங்களுக்கு ஆரம்பமாயிற்று. வருடத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்று என்றில்லாமல் எந்நாளும், எந்நேரமும், எப்போதும் யார் யார் என்னவேலை செய்தாலும் தொலைபேசியோ, குறுஞ்செய்தியோ, மின்னஞ்சலோ, ஏன் முகநூல் என எதுவுமில்லாமல் தினந்தோறும் முற்பகலிலேயே தவறாமல் அழகாகக் கூடிடுவார்கள் ஆடவர்கள் அனைவரும்! வீட்டில் பெண்களுக்குச் சமையலுக்கு இடையூறு செய்யாமல்! எவர் தொடங்குவது எப்படித் தொடங்குவது என்ற விதிமுறை எதுவும் இல்லை தானாகவே ஆரம்பமாகும் ஆனால் பொருள் நீர், நிலம், காற்று என்ற மூன்றையும் விட்டுப் பிரியாமலே தொடர்ந்திருக்கும் தொழில் செய்த கடலைப் பற்றியும் வானிலை பற்றியும் ஆராய்ந்துவிட்டு தரையில் தங்கள் வீட்டிலிருந்து ஆரம்பமாகிப் பக்கத்துவீடு, ஒழுங்கை, ஊர், பக்கத்து ஊர், நகரம், தலைநகரம், வெளிநாடு என்று போய்க்கொண்டிருக்கும்…. அண்மித்த வீடுகளிலிருந்து சமையல்வாசனை அனைவருக்கும் பொதுவான குறுஞ்செய்தியாய் வந்து வீட்டுக்குப் போங்கள் சாப்பாட்டுநேரம் என்று உஷார்ப்படுத்தும். சில வீடுகளின் ரேடியோக்களும் அடிக்கடி நேரம் என்னவென்று சொல்லிக்கொண்டிருக்கும். "சிறிய இடைவேளைக்குப் பிறகு" என்பதுபோல் இவர்கள் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டாலும், ஏற்கனவே விருந்து முடித்தவர்கள் "இடைவேளை வேண்டாம்" நாங்கள் தொடர்ந்து நடாத்துகின்றோம் என்பதுபோல் பொறுப்பாக இடத்தை எடுத்துக்கொள்வார்கள்! வாசகசாலையில் தினசரிகளைப் படித்தாலும் மடத்திலிருந்து அதைப்பற்றி அலசி ஆராயும் மயிலை மைந்தர்களும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்தார்கள். பிற்பகல் என்ன ஒரு ஆச்சர்யம், உரையாடலோடு விளையாட்டுக்களும் ஒன்றிவிடும். சீட்டாட்டம் ஒரு பக்கம், தாயம் ஒரு பக்கம் என பெரியவர்கள் தமது திறமையை பறைசாற்ற… சிறியவர்கள் கடற்கரையில் ஒரு பகுதியாகவும், ஒழுங்கைகளில் ஒரு பகுதியாகவும், கோவிலடியில் ஒரு பகுதியாகவும் சடுகுடு, உப்புப் பந்து, கிளிக்கோடு, கிட்டிப்புள்ளு, றவுண்ட் றேஸ், அவா, கெந்தல், கொக்கான், சோழி விளையாட்டு, கள்ளன் பொலிஸ், ஐஸ்கோல் இன்னும் எழுதாத விளையாட்டுக்களில் ஏதாவதொன்றை விளையாடிக்கொள்வார்கள். எத்தனை மடங்கள் அத்தனையும் அதே இடத்தில்தானா? அல்லது இல்லையா? மீண்டும் காண்போமா? மடங்களே மறைந்துவிடாதீர்கள்! வருவோம் ஒருநாள் உங்கள் மடியில் விளையாட! (ஒன்றுகூடல் என்பது அங்குதானே எங்களுக்கு ஆரம்பமாயிற்று. வருடத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்று என்றில்லாமல் எந்நாளும், எந்நேரமும், எப்போதும் யார் யார் என்னவேலை செய்தாலும் தொலைபேசியோ, குறுஞ்செய்தியோ, மின்னஞ்சலோ, ஏன் முகநூல் என எதுவுமில்லாமல் தினந்தோறும் முற்பகலிலேயே தவறாமல் அழகாகக் கூடிடுவார்கள்.) இன்னொரு நினைவுகளில் சந்திப்போம்! கு. அருண்குமார் பதிவு: 09/09/2012 |
You've just received a new submission to your
"நினைவுகள் 2" "மடம்" அருண்குமார். Submitted Information:உங்கள் பெயர்: sangeetha thenkili உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: மிக அற்புதமான படைப்பு... நகைச்சுவை கலந்த கட்டுரை நடையும் தெரிந்தெடுத்து பாவிக்கப்பட்ட சொற்களும் ஒரு திறமையான எழுத்தாளனுக்கான எல்லாத் தகுதிகளையும் கொண்டிருக்கிறது..வெற்றுப்புகழ்ச்சி அல்ல..உண்மையான புகழ்ச்சி... அத்துடன் மயிலிட்டி பற்றிய எமது நினைவுகளையும் தட்டிச் செல்கிறது... தொடர்க உங்கள் பணி... பதிவு: 11/09/2012 |