பறந்து கொண்டிருந்த இயந்திரப்பறவையின் சிறகுகள் ஓய்வெடுத்து நிலத்தில காலூன்றிய போது திடுக்கிட்டு விழிக்கிறது இழந்த காலங்களை இறந்த காலமாய் மீட்டிப்பார்த்த உயிருள்ள ஜடமொன்று...
காலத்தின் கட்டாயத்தில் பல ஆண்டுகள் கரைந்து கழிந்த பின்னே தாய் நிலத்தை நோக்கிய திக்கற்ற தமிழனின் ஊமைப்பயணம் நினைவுகளை சல்லடை போட்டுக்கொண்டே ஊர்ந்து செல்கிறது எரிபொருளை உறிஞ்சிக்குடித்து ஓசோனை சல்லடை செய்யும் இன்றைய அடிப்படை தேவையொன்று.. கந்தகம் கலந்த காற்றினால் வந்த மயக்கமோ என்னமோ மீண்டும் விழி சாய்கிறது கண்முன்னே வந்து நிற்கிறாள் என் கற்பிக்கு சொந்தக்காரி.
தனித்து நிற்கும் பாதை எல்லாம் தவிக்கும் அவள் வருகைக்காய் அவள் பாதம் தொட்ட மண்ணை அள்ளி பூசிக்கொள்ள காத்திருக்கும்அரும்புவிட்ட மீசை எல்லாம் அந்த வரிசையில் நித்தம் ஒரு சட்டை மாற்றி உன் நினைவுகளை கவர்ந்து செல்ல ரெண்டு சில்லு மிதிபலகையின் நெஞ்சில் ஏறிமிதித்து தேடிவந்த அந்த பசுமையான காலங்களை கற்பனையில் புசிக்கும் போது மாற்றான் மொழியில் ஒரு குரல் கேட்டு விழிக்கிறேன் கேட்கிறான் அடையாள அட்டையாம் அடையாளம் தெரியாமல் அழித்துவிட்டதாக மார்தட்டும் ஒரு அறிவிலி...
மீண்டும் நகருகிறது சாலையோர மரங்கள்..
ஞாபக சின்னங்களை தேடி வழிமீது விழி தேடல் தொடங்கியதே. குடையாக நிழல் தந்த விருட்சமெல்லாம் சிரமின்றி நிற்கிறது அழியாத பல வடுக்களின் விம்பமாய். பலவர்ணம் கொண்ட பட்டாம் பூச்சியாய் பறந்து திரிந்து பலகதை பேசி நின்ற பசுமையான இடமெல்லாம் பார்க்கும்போதே நெஞ்சுக்குள் முள் தைத்தது பாழடைந்த காட்சிகளால் பாழடைந்த்தது என் நினைவுகளும் அந்த நினைவுகளில் மீண்டும் விழி சாய்கிறது.மார்கழி திங்கள் தந்த மயக்கத்தினால் மீண்டும் நினைவலைகள் உருவாகிறது ...
கண்முன்னே கனவு தேவதை.. பல நாள் தூண்டலின் பின் அவள் என்மேல் தூவிய புன்னகை பூக்களின் மழையினால் உள்ளத்தால் ஒன்றானோம். நடுவானில் நிலவினை ரசித்து கண்ணாலே புது மொழி பேசி கடற்கரை மணலில் குட்டி வீடிகட்டி பள்ளிக்கூட சுவரெல்லாம் நம் காதல் கதை பேசி சாலையோர மரங்களிலே நம் காதல் கல்வெட்டுகளை பதித்து உறங்கும் போது கனவினில் புலம்பி அம்மா எழும்பி கண்டிக்கும் போது எழுப்புகிறான் மீண்டும் ஒரு சிப்பாய் ...
எங்கே செல்கிறாய்? எங்கிருந்தோ வந்தவன் இன்று என்னை கேக்கிறான் எங்கே செல்கிறாய்? விதியை நொந்து கொண்டு மீண்டும் நகர்கிறது சிரமின்றிய மரங்கள் ....
நெஞ்சிலே காயம் பட்ட ஒரு பெயர்பலை சொல்லியது என் ஊர் இதுவென்று. பசுமையான மரங்களுடன் குயில்கள் கானம் பாடும்என் ஊர் எங்கே? தரை உடைந்து உரம் காய்ந்த இந்த பாலைவனம் எங்கே? என் மனம் உறைந்து போக வண்டி மட்டும் செல்கிறது..
கண்ணிவெடியகற்றும் கன்னிகளின் சைக்கிள் சொல்லியது வறுமையிலும் தமிழின் பெருமை கம்பிகள் இல்லா கம்பங்கள் சொல்லியது ஒளியற்ற வாழ்வை மனதை கல்லாக்கி வேலியில்லா படலை மேல் கைவைக்கும் போது தானாகவே திறக்கின்றது . வாசலிலே வாடிய பூப்போலே உருக்குலைந்த என் அக்கா வரவேற்று என் சுமைகளை அவள் தாங்கினாள்..கொத்துகுண்டு கொலை செய்த என் பெற்றோர்கள் புகைப்படத்தில் கதறியழுது நிலத்தில் விழும்போது மாறாத அன்போடு தாங்கிக்கொண்டாள் அழுதழுது கண்ணில் நீர் வற்றிப்போன அக்கா.. சில மணி நேர மௌனத்திற்குப்பின் மௌனம் கலைத்து ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது மழை பெய்த கண்களுடன் என் அக்கா ஆறுதல் படுத்தும் நிலையில் நானும் இல்லை ஆறுதல் அடையும் நிலையில் அவளும் இல்லை ....
மனம் மெல்ல ஏங்குகிறது அவளின் நிலை என்னவோ?
அக்கா தந்த உணவினை உண்டு மெல்ல கிளம்பினேன் சூனியக்காடாய் மாறிப்போயிருக்கும் என் சொர்கபூமியை தேடி.தனிமையை தாங்கி நிற்கும் பாதைகளில் சில மந்திக்குரங்குகள் மட்டும் கண்காணிப்பில் தூரத்தில் ஒரு பொலித்தின் தரப்பாளால் வேயப்பட்ட ஒரு குடிசை.. நெருங்கிச் செல்லும் போது பல ஆண்டுகள் தேடிய அதே குரல் அவள் நிலை பார்த்து தீப்பொறி ஆனது என் மனம். வானவில்லின் வர்ணமாக நான் பார்த்து ரசித்த ஓவியமா இன்று சாயம்போன ஓவியம் போல் ஊறிக்கிடப்பது. என் தனிமைகளை இனிமையாக்கிய அவளா இன்று அலங்கோலமாய் கிடப்பது நெருங்கிச் சென்றேன் என் முகம் பார்த்த அடுத்த நொடி கண்ணிரண்டும் நீர்தாங்கியாய் வீட்டினுள்ளே ஓடிச்சென்றாள் தொடர்ந்து சென்றேன் தொங்கிகொண்டிருந்த பலகையில் அவள் கல்யாண புகைப்படம்என் முகத்திரையை கிழித்தது. ஒருகணம் தடுமாறி மீண்டும் சுயநினைவுக்கு வந்த போது என் கண்கள் தேடின அவன் கணவனை மூலையில் முச்சக்கர நாற்காலியில் தென்பட்ட முகமும் நிழல்படத்தின் முகமும் ஒத்துப்போயின. தடுமாறும் வார்த்தைகளால் சில வரி பேசி இனிமேலும் இங்கிருந்தால் உள்ளக்கதவு திறந்திடுமோ என எண்ணி விடைபெற எழும்பிய போது கண்முன்னே தேநீர் கோப்பையுடன் நின்றவளின் கண்ணை பார்த்தேன் வலிகள் மட்டும் நிறைந்த விழிகளை பார்க்க இயலாமல் விடைசொல்லாது கிளம்பிவிட்டேன் இதற்குமேலும் என்னால் இருக்க முடியாது .உயிர்களை விழுங்கி கொட்டாவி விட்டுகொண்டிருகும் என் தாய்நிலத்தில்...