மீண்டும் வாழ வழி செய்வோம்
ஒரு நிலம் என்பது வெறும் மண்ணும் மரங்களும் கட்டடங்களும் மனிதர்களும் சூழ்ந்தது அல்ல. அந்த நிலத்தோடு பாரம்பரியங்களும் பண்பாடும் வாழ்கிறது. ஆத்மார்த்தமான ஆழமான உரிமை அங்கு பிறப்பெடுக்கும் அனைத்து உயிர்களுக்கும் இருக்கிறது. மற்றைய எல்லாத் தனிமனித உரிமைகளையும் போலவே தனது சொந்த நிலத்தில் வாழும் உரிமையும் எல்லோருக்கும் இருக்கிறது. எமது சுயதொழில்களைச் செய்து எமது சொந்தக் காலில் நிற்பதற்கு எமதுசொந்த மண்ணே வழிசெய்கிறது. ஒரே கிராமத்தில் வருடாவருடம் பிறந்து வளர்ந்து நாமெல்லாம் ஆளாகியிருக்கின்றோம். அந்த மண்ணின் ஞாபங்களை எழுதுகிறோம். பாடுகிறோம். நினைவுபடுத்துகிறோம். மனதால் அழுகிறோம். புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு எம் மண்ணை நினைத்துக் கொள்வது மட்டுமே எம் மண்ணுக்கு நாம் செய்யும் கடைமை ஆகாது. இவற்றுடன் மட்டுமே நின்றுவிடக் கூடாது. இவை மட்டுமே எமது மண்ணில் எம்மை வாழ வைக்காது. எமது கிராமத்தில் நாம் வாழவேண்டும். அதை புனர்நிர்மானம் செய்ய வேண்டும். எமது பரம்பரையினர் வாழ்ந்த, எமது சொந்தக் காணிகளையும் வீடுகளையும் கொண்ட, எமது சொந்தத் தொழில்களைச் செய்யக் கூடிய, நாம் உரிமையோடு கம்பீரமாக நடந்து செல்லக் கூடிய எமது கிராமம் இன்னமும் மனிதர்கள் இல்லாது காடு மண்டியே கிடக்கிறது. எமது ஊரின் தற்போதைய நிழற்படங்களை பார்க்கும் எல்லோருக்கும் கண்ணில் கண்ணீரோடு கொஞ்சம் கடைமை உணர்ச்சியும் சுரக்க வேண்டும். ;நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்றோம். இனி எங்கே ஊருக்கு போகப் போகிறோம். இந்த நாடுகளில் எல்லா வசதியும் இருக்குத் தானே.. எங்கட பிள்ளையள் இங்க பிறந்தவை தானே.. அவையள் ஊரில வாழ மாட்டினம்; என்ற ஊகங்களின்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாது எமது ஊரில் எம் சொந்தங்களை வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும். நாளை இந்த புலம்பெயர்ந்த தேசங்கள் எம்மை விரட்டினாலோ அல்லது எமக்கே இங்கு இருப்பதற்கு மனம்மறுத்தாலோ நாம் சென்று தங்குவதற்கு எமக்கு நிழல் தருவதற்கு உரிமையோடு உலவுவதற்கு எமது மண்ணே தேவைப்படும்.` 1990 இல் எமது கிராமத்தில் இருந்த மக்கள் தொகையை விட நான்கு மடங்கு மக்கள் தொகையை தற்போது நாம் கொண்டுள்ளோம். தாயகத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் மட்டும் இருக்கும் எம் சொந்தங்களின் கோரிக்கைகளாலும் மனுக்களாலும் மட்டுமே எமது கிராமத்தில் நாம் வாழ்வதற்கான அனுக்கூலத்தை ஏற்படுத்த இயாலாது. புலம்பெயர்ந்து வாழ்வோரும் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். கிராமம் சம்பந்தமான ஒவ்வொரு கூட்டங்களின் போதும் இவ்விடயம் பற்றி கலந்தாலோசித்து யோசனைகளை உள்வாங்கி செயற்படுத்த வேண்டும். பெரும் ஒன்றுகூடல்களின் போதும் இவ்விடயம் சம்பந்தமான அனைவரினது யோசனைகளை உள்வாங்கி அதை செயற்படுத்த முனைய வேண்டும். பூனைக்கு மணி கட்டுவது யார் என்று கேட்டுக்கொண்டிராது, அனைவரும் சேர்ந்து செயலாற்றுவது பலனளிக்கும். - சொந்த ஊர் கொண்டிருக்கும் எந்தையின் வேதனை- அருண்குமாருக்காக கானகி கானகியிடமிருந்து அருண்குமார் பதிவு:12/09/2012 |
|