காலை விடியும்... காளவாய்ப் பக்கமாய் கதிரவனெழுவான்... முன்தின மாலையில் சென்ற மீனவர்கள் மெல்ல மெல்ல சிறு துளியாய்.. சிறு படகாய்.. கட்டுமரமாய்.. வள்ளமாய் வருவது தெரியும். மணவாளனை.. மகனை.. காணத்துடிக்கும் இதயம் துடிதுடிக்கும்..... படகு கண்டு, மகிழ்ச்சி கொண்டு பெருமூச்சு விடுவாள் பெண்ணவள்...
படகு கரைதட்டும்... வானில் காகங்கள் சேர்ந்து கைதட்டும் மனைவியின் பாசப் புன்முறுவலில் தன் களைப்பாறுவான் கணவன் இன்றைய பாடு எப்படி? என்று வேல்விழியால் கேள்வி கேட்க ... பரவாயில்லை என்று புன்னகையால் பதிலுரைப்பான் கணவன்.
மீன் தெரிக்க ஐந்தாறுபேர் காத்திருப்பார் கரையினில்... வலைபிடித்து மீன்தெரித்து அனைவரும் முடிக்கையில் ஊர்நடப்பும், உலகநடப்பும் கதையளந்து முடிப்பார் இடையிடை கூடை நிரம்பிய மீன்களுடன் மனைவிமார் காலில் செருப்புமின்றி சந்தையை நோக்கி நடந்து செல்வார்.
கோவில் மணியோசை மெல்ல மெல்ல ஒலிபெருக்கும் மதியம் மனைவியின் அன்புக்கரங்களால் மீன் குழம்பிற்கு... சரக்கு அரைக்கும் அம்மிச்சத்தம் அக்கம் பக்கம் கேட்கும் கோவில் சென்று கும்பிட்டுவிட்டு வீடு திரும்புவார் அன்புக்கணவன் மனைவியின் அரைத்த பாரைமீன் குழம்பில் கிறங்கி போவானவன். உண்ட மயக்கத்தில் நிம்மதியாய் வெள்ளைமண்ணில் உறங்குவதற்கு மடத்தை நோக்கி கணவனின் கால்கள் நகரும்... ஊரே பகலில் குட்டித்தூக்கம் போடும் வேளையில்..... வீட்டின் திண்ணையில் சிறு தூக்கம் கொண்ட பெரியவர் துயிலெழுந்து தன் சோம்பல் முறிப்பார்...............
வீச்சுவலை தனையெடுத்து கிளியல்களைப் பொத்துவார் பனையோலைப் பறியெடுத்து இடுப்பினில் இறுகக் கட்டுவார் தலை நனையாதிருக்க தலைவாரையைச் சுற்றி தலைப்பாகையை இருக்கமாய் கட்டிக்கொள்ளுவார்.
மானைக் கண்டு புலி பதுங்குவது போல் மடவைமீன் செவ்வல் கண்டு பெரியவர் பதுங்குவார் தக்க தருணம் பார்த்து வீச்சு வலையை வீசுவார் மெல்ல மெல்ல வலையை இழுப்பார் பெரியவர் அதனுள் துள்ளிக்குதிக்கும் மடவைக் கூட்டம் அதனை அள்ளிப் பறியினுள் இட்டபடி நடப்பார் அடுத்த வீச்சுக்கு...... அழகுக்கடலில்.......
பக்கத்தினில் உள்ள பாறைகளில் தக்குணி பிடிக்க சிறுவர் கூட்டம் அலை மோதுவர் காலில் கவாட்டி வெட்டிய வேதனையில் சிலரின் அலறல் சத்தம் வானை எட்டும் தக்குணி, மீன், நண்டு, சங்கு சுட்டு உண்ண இளைஞர் கூட்டம் வாடியின் கிடுகினைப் பிடுங்குவர்
மாதா கோவிலின் பின்பக்கத்துத் தெருமுனையில் மாலையில் பெரியவர் மீன்களை விற்பார் வீச்சுமீன் விற்றகாசில் வரும் வழியில் அரைக்கால் அடிப்பார் வீட்டினில் ஆச்சி வீச்சுமீனில் குழம்பும், சொதியும், பொரியலும், புளியானமும் காய்ச்சி வைப்பார் அதற்கு நன்றியாக அப்பு ஆச்சிக்கு புகையிலை வாங்கிவருவார்.
அழகு இரவு அப்புவின் வீச்சுமீன் உணவுடன் அமைதியாய் குடும்பமே இன்பம் காணும் ஆச்சி அப்புவின் சுருட்டுப் புகையில் நுளம்புத்தொல்லை தொலைந்தே போகும்.
நிலவு ஒளியில் கடற்கரை வெண்மணலில் மக்கள் இன்பம் காண்பார் கடல் காற்று வீசும் சுகத்தில் அவர்கள் துன்பம் மறப்பார் கச்சான் வறுத்து விடிய விடிய கதைகள் அளப்பார் அந்தநாள் தொலைந்து 21 வருடங்களா? இனி எந்நாளில் இவ் இன்பங்கள் எமக்கு வந்து சேருமோ? இங்கு வெளிநாடுதனில் பாரையும், அறக்குளாவும் உண்டு வாழ்ந்த பரம்பரை சந்தையில் மலிவுமீன் தேடியலைகின்றது... யாரழுவார்? ஐஸ் மீன் வாங்கியுண்டு நாக்குச் செத்துவிட்டது, ஊரைப்பிரிந்துவந்து உடலும் மனதும் செத்துவிட்டது வெறும் வெற்றுடம்புடன் நடைபிணமாய் வாழுகின்றோம் நாம் இங்கு அகதியாய் அவலமாய்!
ஆக்கம்: கௌசிகன்
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
"வீச்சுவலை"
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
....பொழுது சாயும் நேரம் பொன்னிறமாக வானம் இன்னிசையோடு கூடு தேடும் குருவிகள் சோவென காதில் கீதம் பாடும் தென்றல் கையில் வலையோடு கடல் நோக்கி பெரியவர் ..
இசை மீட்டும் கடல் அலைகள் சுதி சேர்க்கும் தென்றல் காற்று தாய்மை இழையோடும் சுற்றம் பசுமை சேர்க்கும் பாசி படர்ந்த பாறைகள் அன்பினை சுமந்த படி கடலன்னை கலங்கரை விளக்கமாய் இந்த பெரியவர் ..
.
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
பல நூறு கனவுகளை சுமந்த படி வலை வீசும் இந்த பெரியவர் வயது போனாலும் மாறாத இளமை மனதில் உறுதியோடு கடலில் வலை
மயிலை மண்ணில் பிறந்து மறவர் வழியில் நடந்து சுற்று முற்றம் செழிக்க எம்மை கடந்த அந்தகாலம் மீண்டும் எப்போது வரும் என்ற ஏக்கம் ?