"புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு..
பச்சை வண்ண ஆடையுடன்
வாருங்களெனும்
பாசக்கட்டளையுடனான திருமண அழைப்பிதழுடன்
...நாங்கள்
மலிவுவிலைப் பண்டங்கள் போல்
நலிந்து கிடப்பதுவும் நாங்களே..
சுவிஸ்வங்கிப் பணத்துடனும்
சுற்றுலாத் திட்டங்களுடனும்
நாங்கள்
இரவில் கசியும் கண்ணீரென
இரகசியமாய் அழுபவர்களும் நாங்களே..
சர்வதேசரீதியில்
கனவுகள் காதல்கள் கல்யாணங்களுடன்
நாங்கள்
வாழும் சக்தியற்று
வாழ்க்கை முடித்துக்கொள்பவர்களும் நாங்களே..
காலப்பெருங்கதவுகளைத் திறந்துகொண்டு
சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதும்
நாங்கள்
நரகத்தில் உழன்றுகொண்டிருப்பதும்
நாங்களே...
மேய்ப்பவர்களும் நாங்கள்
மேய்க்கப்படுபவர்களும் நாங்களே..
ஏழேழு ஜென்மத்திற்கான
சாபங்களை சுமந்துகொண்டு
வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் நாங்களே..