தேன்கூடே.... தேன்கூடே....
நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
தேன்கூடே.... தேன்கூடே....
ஒற்றுமையின் இருப்பிடம் உன் வீடே...
தன்னந்தனியே மலர்தேடி தேன் எடுத்தாய்
அதனை நீமட்டும் பருகிவாழ என் மறுத்தாய்?
நாட்கணக்கில் வாழுகின்ற உனக்கு
நால்வரும் சேர்ந்துவாழும் உயர் நினைப்பு இருக்கு.
நீ தனியே தேடிவந்த தேனை
பலர்க்கும் தேவையென்று சேமிப்பதும் தானோ?
தையிட்டி தாண்டியதும் நல்லதொரு பனந்தோப்புண்டு
ஆங்கே... சிற்சிறு ஈச்சமரங்களும், ஆமணக்கமரங்களும் உண்டு
நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன்
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...
கொற்றாவத்தை என்னும் வற்றாதநீர் நிலமுண்டு..
எதிரே கசாசுப்பத்திரியும் அருகினில் சுடலையுமுண்டு
ஆங்கே தென்னந்தோப்பும், பனந்தோப்புமுண்டு
அம்பத்தை, வேல்வீதி எனுமினிய இடமுமுண்டு
ஆங்கே பூவரசும், வாதனாராணியும் தழைத்தாடும்
எதிரே விறகுகாலையும், தூள் மில்லும் இசைபாடும்
அருகே உப்புமில்லும் சேர்ந்து ரீங்காரம் இசைக்கும்
பாலத்தடிக்கெதிரே குயில்கள் இசைபாடும்
ஆங்கே அன்னமின்னா மரங்கள் ஆடிப்பாடும்
கொவ்வைக் கொடிதனிலே மாலைக் கிளிகள் மகிழும்
நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன்
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...
மயிலைத் துறைமுகத்தருகே நற்கோவில்கள் உண்டு
ஆங்கே பூவரசும், வாதனாராணியும் வசனம் பேசும்
சந்தியருகுப் புளியமரத்தின் பூக்கள் புல்லாங்குழல் இசைக்கும்
ஆங்கே சிறுவர்கள் எறியும் கல்லால் சுண்டங்காய்கள் சிதறிவிழும்
குளத்தடியில் நற்கோவில் உண்டு
ஆங்கே சுற்றிவர நன் மரஞ்செடியுமுண்டு
விளாத்தி மரத்தினிலே அணில்கள் சேர்க்கஸ் செய்யும்
பனம்பழங்கள் கீழேவிழுந்த வாசம் வானைஎட்டும்
நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன்
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...
முலவை, காலான்காடு எனும் இனிய இடமுமுண்டு
ஆங்கே பனைவளமும், பயிர்வளமும் நிறையவுண்டு
கிராமக்கோடு, பிள்ளையார் கோவிலடி எனும் இடமும் உண்டு
ஆங்கே எழில்தரு தமிழ்மறவர் தோட்டத்துப் பயிர்நிலங்கள்
மானிடரை மயங்கச் செய்யும்
தோப்பு எனும் இடத்து அணிஞ்சில் பழம் அமுதம் தரும்
தேக்குமரமும், மாமரமும் எழில் கொஞ்சும்
பாதிரியடப்பில் வாழைமரம் மஞ்சள் வண்ணம் தரும்
பலாமரம், மாமரம் மனதை மகிழச்செய்யும்
நாவலடி வீதியில் அரசமரம் ஆட்டம்போடும்
பக்கத்து ஆலமரம் அமைதி காக்கும்
நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன்
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...
திருப்பூரில் பூவரசம் மரங்கள் பேசும்
ஆங்கே நற்கோவிலின் மணியோசை நன்று கேட்கும்
மயிலைக் கடற்கரை ஓரத்தில் பச்சைக் கொடி படரும்
ஆங்கே மாலைநேரத்தில் நண்டுகள் மகிழ்ந்து விளையாடும்
மடத்தில் தூங்குகின்ற பெரியவர்கள் மீது
சிறுவர்கள் வீசும் மண்ணால்
பெரியவர்கள் வாய்களிலே அனல்காற்று வீசும்
பிள்ளையார் கோவிலடியில் அமைதி காக்கும்
கோவிலடிக் கிணற்றடியில்
ஐந்தறிவு ஜீவன்கள் தாகம் தீர்க்கும்
மாதா கோவிலடி மணியோசை மனதை மகிழ்விக்கும்
மாதாவின் நல்லதண்ணீர் ஊரின் தாகம் தீர்க்கும்
காளவாய் தென்னந்தோப்புக்கள் ராகம் பாடும்
அரசடியில் அருமையான காற்று வீசும்
நானிருந்த ஊரிலே பல இடமும் நானறிவேன்
மயிலை மண்ணிலே நீ கட்டிய தேன்கூட்டின் இடமறியேன்...
க. கௌசிகன்
|
|