கிளாலிப் பயணம்
எரிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலிற்கு முன் கசக்கப்பட்ட பக்கம் இது. வாசிப்பதற்காக எழுதப்படும் வசனங்களல்ல, உச்சரிப்பிற்கான வார்த்தைகளுமல்ல, நெஞ்சை கிழித்த நினைவழியா பயணம். பெருவழி அடைத்ததினால் திறக்கப்பட்ட சிறுவழி, ஆரவாரமான பயணம், ஆறேழு நாட்களுக்கு முன்பே அமளியான வெளிப்பாடு. ஜந்தாறு பைகளிலே அரியதுரம் சுட்டு அடையாள அட்டை வரை அடிமானம். குறிச்சி வயிரவரருக்கு சக்கரைப் பொங்கல் , குஞ்சாச்சிக்கு பூப்போடாத வெள்ளைச் சாறி, மதிய உணவுண்டு, இரவுப் பார்சல் கட்டி, இரட்சணிய யாத்திரை. கொஞ்சிக், குலவிக், குழறிக், கூத்தாடி, குடும்பம் வழியனுப்ப, கோடியில் இருந்து ஓலைப்பாய் இழைத்த குஞ்சாச்சி, “தூரப் போற போல ஆடுறியள்” என்று அலங்கோலமாய் பேச, “பாவம் கிழவி அப்புவோடு ஆனையிறவு தாண்டி, உப்பு வித்த காலமென்று நினைச்சுதாக்கும்” என்று ஒரு வாய் முணுமுணுக்க, கெண்டக்ரரோடு புட்வோட்டில் தூங்கி கண்கெட்ட பயணம் . அமாவாசை இருட்டு, ஆறேழு மணிப்பயணம், தாய்ப்படகின் பின்னால், நான்கைந்து சேய்ப் படகு தொடுத்தபடி போயினர் தொப்புள்கொடி உறவுகள். அடுத்து நடந்தவையெல்லாம் அரக்கர்களின் வெறியாட்டம். வசந்தமண்டபத்தில் வைத்தே வானவல்லூறுகள் கோரத்தாண்டவம் ஆடினர். வேள்விக் கிடாய்களாக வேட்டையாடப்பட்டோம், கருணையற்ற கடல் முதலைகளால் கழுத்தறுக்கப்பட்டோம், ஆசையோடு பாசமகனை காண வந்தவளும், பாசமகனை கண்டு பூரிப்போடு வீடு வந்தவளும், ஆழி நடுவே அலங்கோலமாக. காசு வாங்க போனவனும், காசுடன் மகள் கலியாணம் காண வந்தவனும், காணாது போனதும் இங்கே தான் . கொடிய வலி சுமந்த துயரம், நினைவில் வரும் போது எழுதுவதை தவிர வேறென்ன முடியும்??? மயிலைக்கவி சண் கஜா பதிவு: 21/10/2013 |
|