(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பசிக்குச் சோறு பரமன் பூசை
“அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வல்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக் கொடுஉண்மின் தலைப்பட்ட போதே” பாடல் 196
அடுத்தவர் மீது பொறாமை கொண்டு, அவதூறாகப் பேசி, அநியாயம் செய்யாதீர்கள். நீதி நூல் கூறிய நல்வழி கெட நடக்காதீர்கள். பெரும் கோபம் கொண்டு, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளாதீர்கள். எல்லாச் சிறப்பும் பெருமையும் பெற்று வாழ்வில் சிறந்திருக்கும் போதே, நீங்கள் உண்ணும் போது பசி என்று யாரேனும் உங்களிடம் வந்தால் அப்போதே அவர்களுக்கு உண்ண உணவைக் கொடுத்துவிட்டு நீங்கள் உண்ணுங்கள். இதுவே வாழும் வழி (வாழ்க்கை நெறி)
“பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே” பாடல் 197
பற்றிக் கொள்ள வேண்டிய உயர்ந்த ஞானத் தலைவனான சிவபெருமானுடைய பூசைக்கு உகந்த பல மலர்களில் உயர்ந்த மலர் இன்னொரு உயிரைக் கொல்லாமையாகிய சிறந்த மலர் மாலையே ஆகும். ஒன்றிய மன உறுதியே பூசைக்கேற்ற தீப ஒளியாகும். உணர்ந்தறிந்து இறைவனை வைத்து வழிபடும் உயிர் விழங்கும் இடம் தலை உச்சியாகும்.
வதைப்பவர் வதைபடுவர்
“கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றால் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே” பாடல் 198
கொல், வெட்டு, குத்து என்று வெறி கொண்டு திரியும் விலங்கைப் போன்ற கொடியவர்களை வலிமை பொருந்தியவனான எமனின் தூதர்கள் வலிமையான கயிறு (பாசக் கயிறு) கொண்டு கட்டிக் கொண்டு போய் “செல்!”, “நில்!” என்று அதட்டி மிரட்டிப் பற்றி எரியும் நரகத் தீயில் “கிடப்பாயாக” என்று அதனுள் தள்ளி வதைப்பார்கள்.
புலால் மறுத்தல்
“பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே” பாடல் 199
இறைச்சி உணவு உயிருக்குத் துன்பம் தருவது. உடலுக்குத் தீமை விளைவிப்பது. தீயதான இந்த இறைச்சி உணவை விரும்பி உண்ணும் கீழ் மக்களை எமதூதர்கள் பலரும் காணப் பற்றி இழுத்துக் கொண்டு போய், அவர்கள் உடலைக் கறையான் போல அரித்துக் கொல்லப், பற்றி எரியும் நரக நெருப்பில் மல்லாந்து படுக்கத் தள்ளிப் புரட்டி எடுப்பர்.
பாவம் செய்யாமை பரமானந்தம்
“கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்துஇன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத்து இருத்தலே” பாடல் 200
உயிர்க்கொலை, திருட்டு, பெண் இச்சை, பொய் பேசுதல், கள் உண்ணுதல் ஆகிய ஐந்தும் மிகப் பெரும் தீச் செயல்களாகும். இந்தத் தீச்செயல்களை விட்டொழித்துத், தலைவனாம் சிவபெருமான் திருவடித் துணை நாடி இன்புற்று இருப்பவர்களுக்கு வேறு வகைத் துன்பங்கள் இல்லை. சித்த சமாதியில் இவர்கள் ஞானானந்தம் அடைந்திருப்பர்.
பிறன்மனை நயவாமை
“ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்திற்கு இடர்உற்ற வாரே” பாடல் 201
அன்புடைய மனைவி வீட்டில் இருக்க மற்றொருவருக்கு உரிமையான பிறன் மனைவியை விரும்பும் இளைஞர் செயல் வீட்டில் காய்த்துத் தொங்கும் பலாப்பழத்தைத் தின்ன முடியாமல் எங்கோ பழுத்துக் கிடக்கின்ற ஈச்சம் பழத்திற்கு ஆசைப்பட்டு அவதிப்படுவது போலாகும்.
மனைவி இருக்க மற்றவளை விரும்பலாமா
“திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தம் என்றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் கால்அற்ற வாறே” பாடல் 202
நன்றாக உரமிட்டு, நீர் பாய்ச்சிப் பாதுகாத்து வளர்த்த சுவைமிக்க மாமரத்தின் பழத்தைப் பொன்போல் எண்ணி அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்துவிட்டு, உண்ணத்தகாத புளிய மரத்தில் ஏறி அதைப் பறித்து உண்ணத்துடிக்கும் அறிவற்றவர்கள், மரத்தில் ஏறி கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டதைப் போன்ற அறிவீனம், அழகிய மனைவி வீட்டில் இருக்க அவளை ஒதுக்கிவிட்டு அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்பட்டு, அவளை அடையப் போய் அவமானப்பட்டுக் காயப்படுவது, கவலைப்படுவது.