(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
மண்ணாலானது மண்ணாய்ப் போனது
“மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே” பாடல் 189
மண்ணாலான உடம்பு இது. இதில் இழுத்தல், விடுதல் என்னும் இரண்டு உயிர் மூச்சின் நடனம் நிகழ்ந்தபடி இருக்கின்றது. இந்த உடலுக்குள்ளே காலம், ஊழ், உழைப்பு, உணர்வு, விழைவு என்னும் ஐந்து அரசர்களும் உள்ளனர். இந்த உடலுக்குள்ளேயே இந்த அரசர்களுக்கு மேலான அரசனான சிவபெருமானும் இருக்கின்றான். இந்த அரசன் தானிருக்கும் உடலை விட்டு நீங்கி விட்டால் மண்ணாலாகிய மனித உடல் மண்ணோடு மண்ணாகக் கலந்து விடும்.
“வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்க வல்லார்உயிர் தாம்அறி யாரே” பாடல் 190
உடலின் உச்சியில் தலைப் பகுதியில் வீற்றிருக்கும் வேதாந்தம் கூறும் நாத வடிவான ஈசனை, இந்த உடலுக்குள்ளேயே ஒளிச்சுடராய் ஆனந்த நடமிடும் நந்தியெம் பெருமானை, இந்த உடல் ஒருநாள் வெந்தழியக் கூடியதே என்ற உண்மை நிலை அறியாதவர்கள், இந்த உடலைத் தாங்கியுள்ள, அதற்கு ஆதாரமாயுள்ள உயிரின் பெருமையை, அதன் பயனையும், நோக்கத்தையும் அறியமாட்டார்கள்.
சோதிச் சுடரொளிச் சுபோதம்
“சென்று உணர்வான் திசைபத்தும் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்றது அறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொண்றுணர் வாரில் புணர்கின்ற மாயமே” பாடல் 191
சூரியன் எட்டுத் திசையும், விண்ணும், மண்ணுமாகிய பத்து இடங்களிலும் ஒளியைப் பரவ விடுபவன். உந்திப் பகுதியில் சுழியிடும் சோதி உணர்வால் உடல் எங்கும் பரவி நிற்பதை அறியாதவர்களாக உள்ள இந்த உலகில் வாழும் மனிதர்கள், தான் என்னும் அகந்தையைக் கொன்று, தன்னை வென்று, தன்னை உணர்ந்த ஞானிகளிடம் அந்தச் சோதி ஒளி பொருந்தி இருப்பதையும், அந்தச் சோதியில் அவர்கள் கலந்து இருப்பதையும் அறிய மாட்டார்கள்.
இருப்பது இங்கே சில நாள் மட்டுமே
“மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுஉணர்ந்தார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர்ஆண்டெனும் நீரே” பாடல் 192
சிக்கு இல்லாமல், இழை நெருடாமல் ஒழுங்குபடுத்திக் கரை போட்ட பட்டு உடை கிழிந்து போகும். இந்த உண்மையைப் பலரும் முழுமையாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இதைப் போலவே கறுப்பு நிறமுடையதாயிருந்த கரிய நிறத் தலை முடி நரைத்து வெள்ளையாவது போல இந்த உலகில் இறப்பதும், பிறப்பதும் ஒரு சிறிது காலமே என்பதை உணருவீர்களாக.
அருளமுதம் சமைக்க அகத் தீ
“துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே” பாடல் 193
உடலை வளர்க்கும் உணவைச் சமைக்க அகப்பை, பானை, அரிசி, அடுப்பு, நெருப்பு, விறகு ஆகியவை தேவை. இதே போல இந்த உடலில் உள்ள உயிரை வளர்க்கவும் மூச்சுக் கருவி, உடல், உயிர்ச்சத்து, உந்திப் பகுதி, ஐந்து விறகுகளான பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்ற ஐந்து வாயுக்கள் தேவை. இந்த உணவாகிய அமுதத்தைச் சமைத்து உயிரை வளர்க்க, உயிர்ச்சத்தை வீணாக்காமல் அளவாகக் கொண்டு அருளமுதம் உண்ணுங்கள். உயிர் வாழ என்று கொடுக்கப்பட்ட நாள் பொழுது ஒவ்வொன்றாகக் கழிவதை உணருங்கள்.
அமுதத் தேனூறும் அகத் தாமரையில்
“இன்புறு வண்டுஅங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றுஒளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே” பாடல் 194
இன்பத் தேன் சுவை பருக விரும்புகிற வண்டுகள் ஆங்காங்குள்ள வாச மலர்கள் மேலமர்ந்து தேன் பருகுவது போல, மனிதர்களும் உள்ளத் தாமரையில் ஊறுகின்ற அமுதத் தேனை அள்ளிப் பருக ஆசைப்பட்டால் முக்கண் ஒளி உடைய சிவபெருமான் சீவன்களுக்குச் சிவானந்தத் தேன் தருவான். இப்படி அகத் தாமரையுள் அவனைக் கண்டு ஆனந்தத் தேன் பருக நினையாதவர்களுக்கு, வெளியுலக நாட்டத்தில் ஆசை வைத்தவர்களுக்கு அவன் அருள் கிட்டாது. அப்படிப்பட்டவர் நினைவுள் அவன் நிற்கமாட்டான்.
நல்லது செய்க நாதனை வணங்கி
“ஆம்விதி நாடி அறம்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே” பாடல் 195
பிறவிப் பயன், பிறப்பின் நோக்கம் பிறருக்கு உதவுவது. எனவே அந்த நல்வழியை விரும்பி ஏற்று நல்லது செய்யுங்கள். பேரின்ப வீடடையும் வழியறிய இறைவனைப் போற்றுங்கள். இதைவிடச் சிறப்பாக முறையாக மேற்கொண்டொழுக வேண்டிய வழிமுறைகள் கூற வேண்டும் என்று சொன்னால், மனிதராய்ப் பிறப்பெடுக்கும் பெருமை பெற்றவர்க்கு மேலும் சிறப்பாகச் சொல்ல வேறு என்ன வழிமுறைகள் தேவை!