(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
வாழ்நாளை வீண் நாளாக்காதீர்கள்
“காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே” பாடல் 182
காலைப் பொழுதில் கண் விழித்து எழுந்தவர்கள் நித்தம் நித்தம் மாலைப் பொழுதாகி இரவு வந்தவுடன் உறங்கப் போவதும், இப்படியே ஒவ்வொரு நாள் பொழுதும் உறங்குவதும் விழிப்பதுமாக வாழ்நாள் வீணாகக் கழிகின்றன. அருமை உடையதாகிய வாழ்வை இப்படி வீணாக்குபவர்களை இறைவன் கோபிப்பான். என்றாலும் அவனை மனம் பொருந்த நாளும் நினைந்து பணிபவர்களுக்கு அவன் நல்லருள் புரிவான்.
“பருஊசி ஐந்தும்ஓர் பையினுள் வாழும்
பருஊசி ஐந்து பறக்கும் விருகம்
பருஊசி ஐந்தும் பணித்தலைப் பட்டால்
பருஊசிப் பையும் பறக்கின்ற வாறே” பாடல் 183
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களாகிய ஊசிகளும் நம் உடலாகிய ஒரு பைக்குள் வாழ்கின்றன. இந்த ஐந்து புலன்களாகிய மிருகங்களும் அடங்கி இருக்க மாட்டா. அவை தம் விருப்பத்திற்கேற்ப பறக்கும் இயல்புடையன. இந்த ஐம்புலன்களும் அடங்கி, அவற்றை அடக்கி, இவற்றைத் தம் விருப்பப்படி செயல்படாது தன்னுள் அடக்கித் தானடங்கச் செய்தால், இந்த உடல் விண்ணில் பறக்கும் வித்தை கற்கும்.
வினை வெல்ல வழி அறிக
“கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உள்நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்உறு வாரையும் வினைஉறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்துஒழிந் தாரே” பாடல் 184
இடகலை ஆகிய சந்திர கலையும், பிங்கலை ஆகிய சூரிய கலையும் உடலுள் இருந்து உயிரியக்கத்தை நடத்துகிற உண்மை ஞானத்தைப் பலரும் அறியாமலிருக்கின்றார்கள். இந்த ஞானத்தை முப்பது வயதுக்குள் அறிந்தவர்கள் வான் உலகப் பேறு பெறுவார்கள். அறியாதவர்கள் வினைப் பயனை அனுபவித்து வீழ்ந்து படுவர்.
மீண்டும் மீண்டும் பிறக்காதிருக்க
“ஒன்றிய ஈர்எண் கலையும் உடல்உற
நின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்புஒழி யாரே” பாடல் 185
பதினாறு கலைகளும் உடலில் பொருந்தியுள்ள உண்மை நிலையை கீழ்மக்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. உயிர்களைச் சினந்து அழிக்கின்ற காலனாகிய உருத்திர மூர்த்தி அவர்களை அழித்துக் கருப்பைக்குள் வைக்கிறான் (பிறவித் துயர் அடையச் செய்கிறான்). இவர்களும் அறிவுத் தெளிவு பெறாமல் மீண்டும், மீண்டும் பிறந்திளைத்துப் பிறவித் துயருக்கு ஆளாகின்றனர்.
பக்குவம் எய்தும் பரமானந்தம்
“எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே” பாடல் 186
மனிதனாகப் பிறந்த பிறவியின் பெருமையை எண்ணி, இந்தப் பிறவியில் இளமைப் பருவம் இருக்கும் போதே இசை பாடி ஈசனைத் தொழுது பணியுங்கள். மானுடப் பிறப்பும், இளமையும் இருக்கும் போதே இறை உணர்வுக்குத் தடையாக இருந்த மன மயக்கங்களைத் தூக்கி எறிய அறியாது இருந்தவன், இதைத் தூக்கி எறியும் பக்குவ நிலை எய்திய போது, என்னுள் இருந்த பரனோடு கலந்து பேரின்பம் கண்டேன்.
உயிர் நிலையாமை
“தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யார்அவர் தாமே” பாடல் 187
மரக் கிழைகளில் அழகிய இளம் தளிர்களும், குளிர்ச்சியான மலர்களும் தழைத்து வளர்ந்து மலர்கின்றன. ஆனால் இவை எல்லாம் ஒரு நாள் காய்ந்து உலர்ந்து போக, மரம் மொட்டையாகிப் பட்டுப் போகிறது. இதைக் கண்டும் உயிர் உள்ள போதே உயிர்த் தலைவன் திருவடிகளைத் தவறாது நினைத்துப் பணியாதவர்கள் எமன் அழைப்பு வந்த அந்த இறுதி நாளில் மட்டும் ஈசனை நினைத்து எண்ணுவார்களா?. அவனை எப்போதும் நினைக்க வேண்டும் என்ற மாபெரும் உண்மையை அப்போதும் இவர்கள் அறிய மாட்டார்கள்.
வினைக்கு விளைநிலம் உடல்
“ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே” பாடல் 188
உடல், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளுக்கு உரிய உடமைப் பொருளாக (விளை நிலமாக) விளைந்து கிடந்தது. பிரமன், உருத்திரன், திருமால், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவருக்கும் நாயகனான சிவப்பரம்பொருள் ஆணை வரவே (எமன் வரவே) ஐம்பொறிகளும் உடலைக் காப்பதைக் கைவிட்டுவிட்டன. (உடல் இறந்து விட்டது)