(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
போன உயிர் மீளாது
“காலும் இரண்டும் முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறியாதே” பாடல் 146
இரண்டு கால்களாகிய சுவரின் மேல் முதுகுத் தண்டாகிய உத்தரத்தைச் சாத்தி வலுவான விலா எலும்புகள் முப்பத்திரண்டை பக்கவாட்டில் சாத்தி தசையும் சதையும் சேர்த்துப் பூசிச் செய்தமைத்த கூரை வீடு இந்த உடல். இதில் உள்ளே இருக்கும் உயிர் ஒருநாள் கபாலம் திறக்க வெளியேறி விட்டால் மீண்டும் உள்ளே வர இயலாது. அதற்கு வர வழி தெரியாது”. அதாவது செத்தவர் பிழைக்கமாட்டார் என்பது பொருள். எனவே அழியும் உடல் இது என்பது கூறப்பட்டுள்ளது.
“சீக்கை விளைந்த்து செய்வினை மூட்டுஇற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினில் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்குப் பலி காட்டிய வாறே” பாடல் 147
சளி மிகுந்தது. முன் செய்த வினைகளின் தொடர்பு முடிவுற்ற இறுதிநாள் வந்துற்றது. உடலை விட்டு உயிர் போனது. உடல் பிணமானது. உடல் எலும்புகள் இறுக்கம் விட்டுத் தளர்ந்தன. அருகில் இருந்தவர்கள் மூக்கினில் கை வைத்துப் பார்த்தார்கள். மூச்சு ஓடவில்லை. எனவே உயிர் போய்விட்டதை உறுதி செய்து கொண்டு, உடலை மூடி எடுத்துக் கொண்டு போய் வாய்க்கரிசி போட்டு இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
ஆடி அடங்கிற்று ஆனந்தம் எல்லாம்
“”அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே” பாடல் 148
வாய்க்குச் சுவையாக நன்கு சமைத்த உணவை உண்டு மகிழ்ந்தார். மனையாளோடு கூடிக் குலவி இன்புற்று மகிழ்ந்தார். திடீரென்று ஒருநாள் இடப்பக்கம் நெஞ்சு வலிக்கிறது என்றார். உடனே உடல் கீழே கிடக்கப் படுத்தார். பின்னர் எழுந்திருக்கவில்லை. இறந்து போனார் இதுதான் வாழ்க்கை இதுதான் உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.
மாண்டவர் மீண்டு வாரார்
“மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகை பெற்றேறினால்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்று அத்தாஎன்னத் திரிந்திலன் தானே” பாடல் 149
தலைமகன் தனது பழய வீட்டைப் புதுப்பித்து மேல்மாடம் கட்டுவித்தான். பொற்சிவிகையிலே ஏறிப் பலரும் காணப் பவனி வந்தான். எல்லோருக்கும் புத்தாடைகள் வழங்கினான். என்ன செய்து என்ன! ஒரு நாள் திடீரென்று அவன் செத்துப் போனான். அவன் பெற்ற பிள்ளைகள் அப்பா என்று கதறி அழுதும் அவன் திரும்பி வரவேயில்லை. அவன் திரும்பி வரவேயில்லை.
நேசம் பாசம் நெருப்பில் எரிந்தது
“வாசந்தி பேசி மணம்புணர்ந்த அப்பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசத்தீ சுட்டுப் பலி ஆட்டினார்களே” பாடல் 150
பெண் பேசித் திருமணம் நிச்சயம் செய்து, மணம் முடித்துக் கூடிக்கலந்து மகிழ்ந்திருந்த தலைவன் மேல் வைத்த ஆசை காலப்போக்கில் திகட்டிப் போய் சலிப்படையச் செய்துவிட, அவனுடைய பாச நினைவுகளையும் பின்னர் மறந்துவிடுவர். இந்நிலையில் கணவன் இறந்துவிட்டால், அவன் உடலைப் பாடையின் மேல் வைத்து, ஒப்பாரி வைத்து அழுது புலம்பித் தங்களின் அன்புப் பாசத்திற்கே தீ வைத்துப் பிண்டம் போட்டார்களே! என்ன கொடுமை! இருக்கும் போது இருந்ததென்ன! உயிர் போன பின் நடந்ததென்ன? இதுதான் நிலையா யாக்கையின் நிலை.
மூச்சடங்கப் பேச்சடங்க உயிரடங்கிப் போனது
“கைவிட்டு நாடிக் கருத்தழிந்து அச்சற
நெய்அட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினர்
மைஇட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே” பாடல் 151
மருத்துவர்கள் நாடி விழுந்துவிட்டது, இனித் தாங்காது, மருத்துவம் பார்த்துப் பயனில்லை என்று கைவிட்டு விட்டார்கள். நினைவு தடுமாறிவிட்டது. உடலில் ஒட்டிய உயிர் மூச்சு ஒடுங்கி விட்டது. வாசமிக்க நெய்விட்டுச் சமைத்த சுவையான உணவை உண்டு மகிழ்ந்த மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் செயலிழந்து விட்டன. ஆனால் மணந்து கொண்ட மை பூசிய கண்களுடைய மனைவி இருக்கிறாள். தேடிய செல்வம் இருக்கிறது. என்ன இருந்து என்ன செய்ய? உயிர் உடலை விட்டுப் போய்விட்டதே! இப்படித்தான் உயிர் உடலை விட்டு விடைபெறும்.
துன்பம் துயரம் அந்திம காலம்
“பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலம் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுது அகன்றார்களே” பாடல் 152
உயிரின் மேல் அமைந்த உடலாகிய பந்தல் பாழடைந்து விட்டது. உயிர்ச் செல்வம் வறண்டு விட்டது. கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு, வாய், சிறுநீர், மலப்பாதை ஆகிய ஒன்பது வாசல் கதவுகளும் ஒரே நேரத்தில் அடைபட்டு விட்டன. உயிருக்கு முடிவு காலம் விரைந்து விட்டது. அன்புடைய சுற்றத்தார்கள் அழுது புலம்பினார்கள். பின் அவர்களும் போய் விட்டார்கள்.” இதுதான் வாழ்க்கை என்பதாகும்.