(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஞான குருவாகி நடத்துபவன்
“அறிவையும் புலனுடனே நான்ற தாகி
நெறிஅறி யாதுற்ற நீராழமும் போல
அறிவு அறிவுள்ளே அழிந்தது போல
குறிஅறி விப்பான் குருபரன் ஆமே” பாடல் 119
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக, உண்டு, உணர்ந்து, நுகர்ந்து, கேட்டு, கண்டு மகிழ்வதான செயல்களில் ஈடுபட்டுச் சென்று சேரும் வழி தெரியாமல், ஆழங்காண முடியாத பிறவிக் கடலில் மூழ்கி, மனித அறிவானது அழிகின்றபோது, ஆன்மாக்களுக்கு நல் வழிகாட்டி அருளுபவன் ஞானாசிரியனான சிவபெருமானே ஆவான்.
“ஆவுமே பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னம் தனிநித்தம்
தீமேவு பல்கரணங்கள் உள் உற்றன
தாம்ஏழ் பிறப்பு எரிசார்ந்த வித்தாமே”. பாடல் 120
நீருடன் கலந்த பசுவின் பாலை அன்னப்பறவை நீரை வேறாக்கி விட்டுப் பாலை மட்டும் பருகும் என்பார்கள். இவ்வாறே இறைவன் சிற்றம்பலம், பேரம்பலம், பொன்னம்பலம் ஆகிய அம்பலங்களில் ஆனந்தக் கூத்தை நிகழ்த்துவதோடு, ஆன்மாக்களின் உயிரோடும் ஒன்றியிருக்கின்றான். என்றாலும் இந்த ஆன்மா அழுக்கடைய தீமையான பலவகைக் காரணங்கள் ஆன்மாக்களைச் சேருகின்றன. இவையே உயிர்கள் தொடரும் ஏழ்பிறவிக்கும் காரணம் ஆகின்றன. இறைவன் அருள் இருந்தால் போதும் பிறவித்துயருக்குக் காரணமான மலங்கள் வினைத் தொடர்புகள் நெருப்புப் பற்றிய விதை போலக் கரிந்து போகும்.
தவ யோகம் – சிவ யோகம்
“வித்தைக் கெடுத்து வியாக்கிரத்தே மிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட்டு இருப்பர் சிவயோகியார் களே” பாடல் 121
பிறவித்துயருக்குக் காரணமான பாசப் பிணைப்புகளை விட்டு விட்டு, குரு உபதேசமாகச் சொன்ன மந்திர மொழியை மனதுள் சொல்லச் சொல்ல, மேலான தன்னை மறந்த யோக நிலை சித்திக்கும். அந்த நிலை பிறவித் தொடர் அறுக்கும் புனித நிலை. இந்த நிலை அடைந்தவர்கள், உடலோடும் உயிரோடும் ஐம்புல அறிவும் ஒன்றாகிச் செத்தவர்களைப் போல இருப்பார்கள். இவர்களே சிவயோகிகள் எனப்படுவர்.
நவயோகம் நாதன் நாமம் அருச்சித்தல்
“சிவயோக மாவது சித்அ சித்தென்று
தவயோகத்துள் புக்கு தன்ஒளி தானாய்
அவயோகம் சாராது அவன்பதி போக
நவயோக நந்தி நமக்கு அளித்தானே” பாடல் 122
சிவயோகமாவது சித்து, அசித்து என்னும் உயிர்ப் பொருள், ஜடப் பொருள் என்னும் இரண்டோடும் தனக்குள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு யோக நிட்டையில் தன் உள்ளொளியும் தன் உயிர் உணர்வும் ஒன்றாய் பிறப்பு, இறப்புகளுக்குக் காரணமான வேறுவழிச் செல்லாமல் இறைவன் திருவடிப் பேற்றினை அடைதல். இது நவயோகம். நல்ல வழி. இதை நந்தி எம்பெருமான் நமக்கருளினான்.
நாதன் நாமம் நல்கும் பேரின்பம்
“அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே” பாடல் 123
சிவபெருமான் உலகமெல்லாம் பரவ, எங்கும் பரந்து நிறைந்திருக்கின்ற உண்மையை நானறிய அருளிச் செய்தான். தேவர்களும் அறியாத பேரின்ப வீட்டுலகை நானறிய அருளினான். தில்லை அம்பலத்துள், சித்தாகாசமாகிய பேரின்பப் பெருவெளியில் ஆனந்தக் கூத்திடும் ஐயன் எனக்கு அவன் திருவடித் துணை அருளினான். பேரின்பப் பெருவெளியில் அவன் அருள் வெள்ளத்தை நான் ஆழ அமிழ்ந்து அள்ளிப் பருகி ஆனந்திக்கவும் அருளிச் செய்தான்.
பேரின்ப ஞானிகள் பெயர் சித்தர்
“வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் ஒளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே” பாடல் 124
பரவெளியில் பரம்பொருள் பரவிக் கலந்திருப்பதைப் போலவும், இறைவன் திருவருள் கருணையில், ஆன்மாக்களின் அன்பு அடங்கி ஒடுங்கிக் கிடப்பதைப் போலவும், சிவப் பரம்பொருளின் பேரொளிப் பிழம்பாகிய சோதியில் ஆன்மாக்களின் உயிரொளி அடங்குவதைப் போலவும் காணப்படுபவர்களே சித்தர்களாவார்கள்.
சித்தர்கள் இங்கே சிவலோகம் கண்டவர்
“சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவும்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே” பாடல் 125
மகான்களாகிய சித்தர்கள் இங்கே இவ்வுலகிலேயே இந்தப் பிறவியிலேயே சிவலோகக் காட்சி கண்டு களித்தவர்கள். ஓசையும் ஓசை முடிவும் தம் மனக்கண் முன் கண்டுகொண்டவர்கள். அழிவற்றவர்கள். பந்த பாசம் என்னும் வினை அழுக்கு அண்டாதவர்கள். நோய்நொடி அற்றவர்கள். தத்துவம் முப்பத்தாறும் கடந்த ஜீவன் முத்தர்கள். (ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவ தத்துவம் 5 )