(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
நாத வடிவான நாயகன்
“சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஒங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே” பாடல் 106
மூலப் பரம்பொருளான சிவன் பிரம்மன், திருமால், உருத்திரன் என்று மூவராகவும், மகேசுவரன், சதாசிவம் என்று ஐவராகவும் இருக்கின்றான். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை எனும் ஆறுடன் மேல், கீழ் என்னும் இரண்டு சகஸ்ரதளத்துடன் சேர்ந்த ஆதார நிலைகளில் நாதமும், விந்தும் (ஓசையும் ஒலியும்) சேர்ந்து பத்தாகவும் நிற்பவன் சங்கரன் ஆவான்.
“பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ்வானவ ராலே” பாடல் 107
மூலப் பரம் பொருள் சிவனே. அவனே சிவனாகவும், சக்தியாகவும், சதாசிவமாகவும் இருக்கின்றான் என்ற உண்மை உணர்ந்து, அதன்படி நாம் வழிபாடு செய்வோமான்னால், பிரமனும், திருமாலும் நமக்கு அயலவர் ஆகமாட்டார்கள். முக்கண் உடைய நந்தி தேவரும் நமக்கு உறவுடையோராவார். எனவே இந்த உண்மையை உணர்ந்து அவ்வானவர் தலைவரைப் பணியுங்கள். பணிந்து பயன் பெறுங்கள்.
பாலொத்த மேனிப் பரமன்
“ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்துஅடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்அடி நல்கிடு என்றானே” பாடல் 108
இறைவன் அடியவர்கள் தொழத் திருக்கோலம் கொண்டு எழுந்தருளியிருக்கும் சபா மண்டபத்திற்கு வந்து நின்று, அழிவில்லாத வாழ்நாள் பெற்ற தேவர்கள், பால்போலும் வெண்ணிறம் உடைய திருநீறு திருமேனி எங்கும் பூச நின்ற பெருமானைத் தொழுது வணங்க, நானும் வணங்கினேன். பரம்பொருள் நீயும் உலகைப் படைத்த ஆதிப் பிரமனுக்கும், திருமாலுக்கும் ஒப்பானவன். பூவுலகில் சென்று நம் திருவடி பரவுக என்று அருளினான்.
உள்ளத்துள் உள்ள இறைவனை உணர்க
“வானவர் என்றும் மனிதர் இவரென்றும்
தேனமர் கொன்றைச் சிவன்அருள் அல்லது
தான்அமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊன்அமர்ந் தோரை உணர்வது தானே.” பாடல் 109
தேவர்கள் என்றும், பூவுலகத்து மனிதர்கள் என்றும் உள்ள வேறுபாடுகள் எல்லாம், தேன் நிறைந்த கொன்றை மலர்மாலை சூடிய சிவபெருமான் அருளால் அறியப்படும் பேதங்களேயன்றி வேறில்லை. வானவரும், மனிதரும் சேர்ந்து தெளிந்து உணர்ந்த ஒரே தெய்வம் சிவன் அன்றி வேறில்லை. எனவே உண்மையான வழிபாடு நம் உள்ளுறையும் இறைவனை உணர்ந்து, அறிந்து வழிபடுவதேயாகும்.
மூன்று ஐந்தென நின்றவன் ஒருவனே
“சோதித்த பேரொளி மூன்றுஐந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித்து அவரைப் பிதற்றுகின் றாரே.” எண் 110
எங்கும் நீக்கமற நிறைந்து, பொங்கிப் பரவி நிற்கின்ற பேரொளிப் பிழம்பான சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், என்னும் முத்தொழிலால் பிரம்மன், திருமால், சிவன் என மூன்றாகவும், ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலால் பிரம்மன், திருமால், சிவன், உருத்திரன், சதாசிவன், மகேஸ்வரன் என்று ஐந்தாகவும் இருக்கின்றான் என்பதை மூடர்கள் அறிவதில்லை. அவரவர் செயல்களுக்கு (கிரியைகளுக்கு) ஏற்ப சிவன், திருமால், பிரம்மன் என சிவபெருமான் தோன்றுகின்றார் என்பதை அறியாது, அவர்களை வேறு வேறு தெய்வங்களாக எண்ணி வீணே உளறிக்கொண்டிருக்கிறார்கள்.
பாவத் துயர் போக்கும் பராபரன்
“பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறமாகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகித்
தரத்தினுள் தான்பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே” பாடல் 111
சிவப் பரம்பொருள் பார் எல்லாம் ஒன்றிக் கலந்து நிற்கின்றான். உயிர்களின் உள்ளும், புறமும் இருந்து இயக்கும் சக்தியும் அவனே. உயிர்களைப் படைப்பதில், காப்பதில், அழிப்பதில் பிரமனாக, திருமாலாக, உருத்திரனாக இருந்து முடிவில் உயிர்களுக்கு அவற்றின் வினைப் பயன் கழித்து வீடுபேறு கிட்டவும் அவனே அருள் செய்கின்றான்.
உயிர்த் தலைவன் உமை ஒரு பாகன்
“தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை
வான்ஒரு கூறு மருவியும் அங்குளன்
கோன்ஒரு கூறுடல் உள்நின்று உயிர்க்கின்ற
தான்ஒரு கூறு சலமயன் ஆமே” பாடல் 112
சக்தியும் சிவமும் சேர்ந்த ஒரு தோற்றமாக நிற்கின்ற சதாசிவமே எம் கடவுள். அவன் அண்ட வானத்தையும் தன் ஒரு அங்கமாகக் கொண்டு, அங்கும் நிறைந்துள்ளான். உயிர்த் தலைவனாகிய இச் சிவப் பரம்பொருளே உயிர்களின் உடல் புகுந்து, உயிர் கலந்து, அவற்றை இயங்கச் செய்யும் தண்ணருள் உடையவனாகவும் இருக்கின்றான்.