(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
நந்தி பெற்றனன் நவ ஆகமம்
“சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில் தாம்பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே” பாடல் 62
சிவம் என்னும் பரம்பொருளிடம் இருந்து சக்தியும், சக்தியிடமிருந்து சதாசிவமும், சதாசிவத்திடமிருந்து மகேசனும், மகேசனிடமிருந்து உருத்திரன் முதலான தேவர்களும், தவமுடைய திருமாலும், பிரமதேவனும் ஆகிய இவர்கள் பெற்ற ஆகமம் ஒன்பது ஆகும். இந்த ஆகமங்கள் அனைத்தும் நந்தி பெற்றான்.
“பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சித்தம் வாதுளம்
மற்றுஅவ் வியாமன மாகும் காலோத்தரம்
துற்றநல் சுப்பிரம் சொல்லும் மகுடமே” பாடல் 63
நந்தி பெற்ற ஒன்பது ஆகமங்களாவன காரணம், காமிகம், வீரம், சித்தம், வாதுளம், வியாமனம், கலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்பவையாகும்.
நீர் மேல் எழுத்து
“அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே” பாடல் 64
பரம் பொருளாகிய சிவனருளால் சொல்லப்பட்ட சிவாகமங்கள் பல கோடியாக உள்ளன. அந்த ஆகமங்களின் உண்மைப் பொருள் அறியாமல் அதனை ஓதுதலும், உணர்தலும் இயலாத ஒன்றாகும். இறைவன் காட்டிய ஞானம் ஆகமங்கள், அதன் உண்மைப் பொருளை உணராதவர்க்கு நீர் மேல் எழுதிய எழுத்துப் போல் ஒரு பயனும் தரமாட்டாது.
தமிழோடு ஆரியம் தந்த தயாபரன்
“மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகை யார்க்கும் கருணை செய்தானே” பாடல் 65
மழைக்காலம், கோடைகாலம், மிகுந்த பனி பெய்யும் குளிர் காலம் எல்லாம் அடங்கி ஒடுங்கி நிலப்பரப்பெல்லாம் நீரால் சூழப்பட்டிருக்கும் ஊழி முடியும் காலத்தில், வடமொழி, தென்மொழி வேதங்களைச் சிவபெருமான் உமாதேவிக்கு உபதேசித்து அருள் செய்தான். உலகம் முடிவுற்றுத் தோன்றும் புது உயிர்கள் தாய்வழியே தன்னறிவு பெறுதல் போல உலகத்துக் கெல்லாம் தாயான உமாதேவியிடம் இருந்து உயிர்கள் மீண்டும் அவ்வேதப் பொருளுணர அவற்றை இறைவன் உமையவளுக்கு உபதேசிக்க உளம் கொண்டு அருளினான்.
அவன் அருளாலே அவனை அறிக
“அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிழ்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே” பாடல் 66
ஆன்மாக்கள் பந்த பாசப் பிடிப்பில் இருந்து விடுபடுகின்ற முறையும், அந்த ஆன்மாக்கள் அந்தப் பாசத் தளைகளில் சிக்கிக் கொள்கின்ற விதமும், உடல் கூட்டுக்குள் புகுந்த உயிர் அதை விட்டுப் பறந்து போகின்ற தன்மையும் ஆகிய இவை அனைத்தையும் அறியத் தமிழ், வடமொழி என்னும் இவ்விரண்டையும் அறியச் செய்த பரம்பொருள் அருளைப் பெற, அவனை உணர ஆகம அறிவு மட்டும் போதாது, அவனை உணர்ந்து பக்தி செய்யும் மனம் வேண்டும்.
குரு பரம்பரை
“நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மரும் ஆமே” பாடல் 67
நந்தி எம்பெருமான் திருவருள் கருணையால், மறைப் பொருள் கேட்டுணர்ந்த மாமுனிகள் எட்டுப் பேர்களாவார். அவர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சன்ற்குமாரர் என்ற நால்வர். சிவயோக மாமுனிவர், பதஞ்சலி (தில்லைத் தாண்டவம் கண்டு மகிழ்ந்த பாம்புக் காலுடைய தவயோகி), வியாக்கிரபாதர் (புலிக் காலுடைய முனிவர்), என்னையும் சேர்த்துக் குருமார் எட்டுப் பேர்.
இறை அருளால் எதையும் சாதிக்கலாம்
“நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவது என்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே” பாடல் 68
நந்தியெம்பெருமான் திருவருள் துணையாலும், கருணையாலும் அவன் அடிமையாகி அடியவர்க்குத் தலைவனாகப் பெருமை பெற்றோம். நந்தியெம்பெருமான் மனக்கட்டளையினாலேயே மூலன் இருக்கும் இடம் தேடி வந்தோம். நந்தியெம்பெருமான் திருவருள் துணை இருக்குமானால் உலகில் எதையும் செய்யலாம். நந்தியெம்பெருமான் வழிகாட்டி அருளாணை இட்டபடி நானும் தவ யோகம் இருக்கின்றேன்.
திருமூலர் உடனிருந்த தவமுனிகள்
“மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி ஆமே” பாடல் 69
மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், காலாங்கி, கஞ்சமலையன் ஆகிய எழுவரும் என் வழி வந்தவர்கள்.