(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அறுசமயச் சாத்திரப் பொருளானவன்
”ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறங்கம் ஆகக் குணம்பயில்வார் இல்லை
வேறங்கம் ஆக விளைவுசெய்து அப்புறம்
பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே” பாடல் 55
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம், கௌமாரம் ஆகிய ஆறு சமயத்திற்கு ஒப்பற்ற வேதத்தை ஓதி அருளிய சிவபெருமானை, உமை அம்மைக்குத் தன் உடலின் இடப்பாகத்தை தந்த சிவப்பரம்பொருளின் அருளாற்றலைப் போற்றிப் புகழ்பவர் இல்லை. இப்படிப் புகழாதவர்கள் வேறு சமய சாத்திரங்களைப் பயின்று கடைப்பிடித்து அந்த வேறானவற்றையே பெரிதாகப் போற்றி செய்து வாழ் நாளை வீண் நாளாக்குகின்றார்களே! திருமூலரின் இக்கருத்தை அருணகிரிநாதரும் “அறு சமயச் சாத்திரப் பொருளோனே” எனக் கூறியுள்ளார்.
“பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம்சென்று இகலல் உற்றாரே” பாடல் 56
யாழ், முழவு என்னும் இசைக் கருவிகள் கொண்டு இசை கூட்டிப் பாடும் இன்னிசையும், ஆடல் மகளிர் நாடெங்கும் சென்று நடத்தும் நாட்டியமும், இடைவிடாது தொடர்ந்து நடந்தபடியிருக்கும் இந்தப் பூமியில், இந்த ஆடல் பாடல் நெறிமூலம் ஆண்டவன் அருள் பெற நினையாமல், இதை ஏற்க மாட்டாதவராய் வேள்வி செய்தும், கொல்லாமை விரதம் இல்லாதவராக வழி தவறிச் சென்று ஒருவரோடொருவர் மோதி, முரணிச் சண்டை இடுபவர்களாயிருக்கிறார்கள்.
ஆகமப் பெருமை
“அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்
அஞ்சோடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.” பாடல் 57
நீல நிறத்தவளான பார்வதியை தன் இடப்பாகமாகக் கொண்ட சிவபெருமான் இருபத்தெட்டு (5+23) ஆகமங்களையும் கைகூப்பி வணங்கி, அறுபத்தாறு யோக புருடர்களும் கேட்கத் தனது கீழ் மேல் நோக்கிய அஞ்சா ஈசான முகத்தால் அருளிச் செய்தான்.
போற்றி ஆகமம் புகழுவேன் நானே
“அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்து எண்கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் யானே” பாடல் 58
அருள் வழங்கும் பெரியோன் சிவபிரான் அருளிய சிவாகமத்தை ஏற்றிப் போற்றியவர்கள் விண்ணவர் முதலான எட்டுக் கோடி நூறாயிரம் என்று எண்ணிலடங்காதவர் ஆவர். அவர்கள் வழி நின்று நானும் சிவாகமச் சிறப்பை எண்ணிப் புகழ்ந்து பாடிப் பரவுவேன்.
அரன் அருளியது அனைத்து மொழிகளும்
“பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே” பாடல் 59
பண்டிதர் எனப்பட்டவர்கள் பதினெட்டு மொழியும் கற்றுத் தேர்ந்த விற்பனர் ஆவார். இவர்கள் உலகியலும், அறமும் உணர்ந்த மேலோர் ஆவார். இந்தப் பண்டிதப் பெருமக்கள் கற்றுத் தேர்ந்த பதினெட்டு மொழிகளும் அண்ட கோளங்கள் அனைத்திற்கும் மூல முதல்வனான வேத நாயகன் சொன்ன அறநெறியே ஆகும்.
பொருளறிந்து போற்றுதலே புண்ணியம்
“அண்ணல் அருளால் அருளியது இவ்வாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடி நூறாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே” பாடல் 60
ஆன்மாக்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமான் அருளியது இந்த ஆகமம். இது வானவர் முதலான தேவர்களாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அரும் பொருளுடையது. எண்ணிப் பார்த்தால் எழுபது கோடி நூறாயிரம் எண்று இருக்கும் எண்ண முடியாத சிறப்புடையது. இதன் பொருள் உணராது, சிறப்பறியாது ஓத நினைப்பவர்களுக்கு நீர் மேல் எழுத்துப் போல் அது மனம் கொள்ள முடியாது போகும். அதாவது நீர் மேல் எழுத முடியாது, எழுதினாலும் உடனே மறைந்து விடும். அதுபோல அருமை உணராது ஆகமம் ஓதுதல் பயனற்றது என்பது பொருள்.
வானவர்க்குத் துணை ஆகமம்
“பரனாய்ப் பராபரம் காட்டி உலகின்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாய் ஆகமம் ஓங்கி நின்றானே” பாடல் 61
பரம் பொருளாகிய சிவபெருமான் சின் முத்திரை காட்டி உலகைக் காத்தருளுகிறான். சனகன், சனாதனன், சனந்தனன், சனற்குமாரன் ஆகிய நான்கு முனிவருக்கும் வாக்கிறந்த பூரணமாய் நான்மறைப் பொருளைச் சொல்லியவன். தேவர்கள் தலைவனாய், அவர்களால் தொழப்படுபவர்களான நந்தியெம் பெருமானே அவர்களுக்குக் காவலரனாக ஆகமம் அருளிச் செய்தான்.