(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
விநாயகர் காப்பு
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின் றேனே”.
(ஐந்து கைகள், யானை முகம், வெண்ணிலவின் மூன்றாம் பிறைக் கோடு போன்ற ஒற்றைக் கொம்புடையவன், பரம்பொருளின் திருமகன், அறிவின் உச்சியாய் இருப்பவனை (விநாயகப் பெருமானை) சிந்தையில் வைத்துத் தியானித்து அவன் திருவடி போற்றி வணங்குகின்றேன்” (இப்பாடல் திருமூலரால் எழுதப்படவில்லை எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.)
இறைவணக்கம்
“ஒன்றவன்தானே இரண்டவன் இன்அருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ்உம்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந்து எட்டே”. பாடல் 1
ஒன்றாயிருப்பவன் (சிவம்), அவனே சிவனும் சக்தியுமாக இரண்டாகவும் இருக்கின்றான். அவனே பிரமன், திருமால், உருத்திரன் என மூன்றாகவும் உள்ளான். அவன் நான்மறை (நான்கு வேதங்கள்) வடிவானவன். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அவனே தலைவன். சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம், கௌமாரம் என்னும் ஆறு சமயப் பிரிவுகளாக இருப்பவன் அவனே. ஏழ் உலகங்களிலும் இருப்பவனும், அவற்றை இயக்குபவனும் அவனே. இப்படி எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் தன்வயமாதல், தூய உடலினன் ஆதல், இயற்கை உணர்வடைதல், முற்றும் உணர்தல், பற்றற்றிருத்தல், பேரருள் நோக்கு, முடிவில்லாமை, எல்லையில்லாமை ஆகிய எண்குணத்தவனாக இருக்கின்றான்.
காலனை வென்ற காலகாலன்
“போற்றிஇசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுஉதைத் தானையான் கூறுகின் றேனே”. பாடல் 2
உலகத்து உயிர்கள் எல்லாம் கொண்டாடும் பெருமைக்கு உரியவன் பரம்பொருள். அவன் நான்கு திசைக்கும், ஆதிசக்தி நாயகிக்கும் தலைவன். அவனே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, மேல், கீழ் என விரிந்த திசைகளுக்கு எல்லாம் தலைவன். குறிப்பாக தென் திசைக்கு அரசன். (“தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்பது திருவாசகம்) காலனைக் காலால் உதைத்தவன் அவன். அவனே நான் கூறும் பரம் பொருள் (இறைவன்) ஆவான்.
தேவர் வணங்கும் தேவன்
“ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என்று ஏத்திடு நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே”. பாடல் 3
இறவாத உடலுடைய தேவர்கள் எல்லாம் எல்லா ஆன்மாக்களிலும் இரண்டறக் கலந்து நிற்கின்ற இறைவனைச் சிவனே, பரம்பொருளே என்று போற்றி வணங்குவார்கள். அப்படிப்பட்ட பெருமானை, அன்றாடம் பக்கத்தில் இருந்தாலும் (உள்ளக் கோயிலில் குடியிருப்பவன்) அவன் அருள் இன்றி அறியமுடியாத பரசிவக் கடவுளை அவன் அருளால் அவன் அருகில் இருந்து அவனை நினைந்துருகி போற்றி வணங்குகிறேன்.
இருள் அழித்த ஒளிச் சோதியான்
“அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்தனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந்து ஏத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே”. பாடல் 4
உலகுக்கெல்லாம் உயிராய் உண்மைப் பொருளாய் இருக்கிற மெய்யருளை, உலகத் தோற்றத்திற்கு மூல காரணமான முதலை, என் உடலை மறைத்து வைத்த இடத்தில் இருந்து மறையச் செய்து, என்னை இவ்வுலகில் வாழ விட்டவனை பகலும், இரவும் பணிந்து போற்றி, இருப்பது போலத் தோன்றி அழியும் முரணுடைய இவ்வுலகில் அறியாமை இருள் நீங்க நான் இருந்தேன்.
சிவனின் மேலாம் தெய்வம் இல்லை
சிவனோடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனோடுஒப் பார்இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே” பாடல் 5
சிவபெருமானைப் போன்ற ஒரு கடவுளை எங்கு தேடினாலும் காண இயலாது. அச்சிவப் பரம்பொருளை ஒத்த இறைப் பண்புடையவர் வேறு யாரும் இல்லை. உலக எல்லைகளை எல்லாம் கடந்து அகிலத்திற்கும், அண்டத்திற்கும் அப்பாலும் பொன்ஒளி வீசித் திகழும் நெருப்புச் சுடர் போல மின்னும் அந்த விரிசடைக் கடவுளின் கோலத் திருமுடி, அவன் பாதம், அழகிய குளிர்ந்த தாமரை மலரே ஆகும்.
குறிப்பு:- திருமூலநாயனார் திருமந்திரத்தில் தனது பாடல்களில் இறைவனை (சிவத்தை) நந்தி எனக் குறிப்பிடுகின்றார்.