(நாகேந்திரம் கருணாநிதி)
7. ஆலய விக்கிரகங்களின் தத்துவம்
1. சிவலிங்கம்
லிங்கம் அடையாளம் எனப் பொருள்படும். லிங்கம் என்பது சித்தரித்தல் எனவும் பொருள்படும், ஐந்தொழிலும் இதில் அடங்கியதால் லிங்கம் எனப்பட்டது எனவும் கூறுவர்.
இறைவன் (சிவம்) ஆன்மாவின் மேல் உள்ள கருணையினால் ஆன்மாவை ஈடேற்றும் பொருட்டு எடுக்கும் வடிவங்களில் ஒன்று சிவலிங்கமாகும்.
திருமந்திரம் ஆறு வகை லிங்கம் பற்றிப் பின்வரும் பாடல்கள் மூலம் கூறுகிறது.
1. அண்டலிங்கம் பாடல் எண் 1712
“இலிங்கம் அதுஆவது யாரும் அறியார்
இலிங்கம் அதுஆவது எண்திசை எல்லாம்
இலிங்கம் அதுஆவது எண்ணென் கலையும்
இலிங்கம் அதுஆக எடுத்தது உலகே.”
2. பிண்டலிங்கம் பாடல் எண் 1726
“மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.”
3. சதாசிவலிங்கம் பாடல் எண் 1730
“கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்து செங்கண்ணின் மூவைந்து
நாடும் சதாசிவ நல்ஒளி முத்தே.”
4. ஆத்துமலிங்கம் பாடல் எண் 1753
““அ”கார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
“உ”கார முதலாய் உயிர்பெய்து நிற்கும்
“அ”கார “உ”காரம் இரண்டும் அறியில்
“அ”கார “உ”காரம் இலிங்கம் அதாமே.”
5. ஞானலிங்கம் பாடல் எண் 1763
“உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன் பல்உயிர்க்கும்
குருவும் எனநிற்கும் கொள்கையன் ஆகும்
தருஎன நல்கும் சதாசிவன்தானே.”
6. சிவலிங்கம் பாடல் எண் 1773
“குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறுஇவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செய்யுமாறு அறியேனே.”
1.அவ்வியத்தலிங்கம் (நிட்களலிங்கம்) (பரநாதம்) (பரவிந்து), 2.வியத்தாவியத்தலிங்கம் (சிவலிங்கம்) (சதாசிவ வடிவம்) (அருஉருவத்திருமேனி) 3.வியத்தலிங்கம் (25 மகேசுவரவடிவங்கள்) என மூவகைப்படும் எனவும் கூறுவர்.. சிவலிங்கம் தூலலிங்கம், பத்திரலிங்கம், சூட்சுமலிங்கம் என மூவகைப்படும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன. கருவறையிலே மூலஸ்தானத்தில் இருப்பது தூலலிங்கமாகும். சேக்கிழார் சுவாமிகள்
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு நிகழ் குறியாம் லிங்கம்” எனக் கூறியுள்ளார்.
சிவலிங்கம் அ+உ=ய, 8+2=10 அ-இறைவன், உ- சக்தி. சிவலிங்கம் சிவபஞ்சாட்சரச் சுடர் அருவ உருவமான நிலையில் யோகத்தின்
சின்னமாக இருப்பதாகக் கூறுவர் சிவலிங்கம் மேல்ப்பகுதி ஆகாயம், கீழ்ப்பகுதியான (ஆவுடையார் ) பூமி எனவும் கூடக் கொள்ளப்படுகிறது. இதை திருமந்திரம் பாடல் எண் 1725 இல்
“தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீர்அது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை
கரைஅற்ற நந்தி கலையும் திக்காமே.” எனக் கூறப்பட்டுள்ளது.
சிவலிங்கம் சிற்ப சாஸ்த்திர முறைப்படி 1.மேல்ப்பகுதி சிவன் பாகம் (நெருப்பு), சிவலிங்கம் ,சிவஜோதி 2.நடுப்பகுதி (ஆவுடையார்) விஷ்ணு பாகம் விஷ்ணுலிங்கம் (நீர்), அருட்சோதி 3.அடிப்பகுதி பிரம்மபாகம் பிரம்மலிங்கம் ஆத்மஜோதி (நிலம்) எனவும் கூறப்பட்டுள்ளது.
சிவலிங்கம் மேல்ப்பகுதியாகிய லிங்கம் ஆண்தெய்வமாகவும் கீழ்ப்பகுதியான பீடம் (ஆவுடையார் ) சக்தி வடிவாகிய பெண் தெய்வமாகவும் கூடக் கொள்ளப்படுகிறது.
இதை திருமந்திரம் பாடல் எண் 1770 இல்
“எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம்பெரும் கண்ணியை
உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே.” எனக் கூறப்பட்டுள்ளது.
படிகலிங்கம், மரகதலிங்கம் என்பன மிகவும் சத்தியுள்ளவை எனக் கூறப்படுகிறது.
மேலும் பரார்த்தலிங்கம், சுயம்புலிங்கம், கணலிங்கம், தெய்வீகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம், சணிகலிங்கம், சகஸ்ரலிங்கம் ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம், வரை உள்ளது.
குற்றமற்ற முத்து, பவளம், வைடூரியம், படிகம், மரகதம், நீலம், மாணிக்கம், வைரம், கோமேதகம் ஆகிய இரத்தினங்களாலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஐம்பெரும் லிங்கங்கள் 1.காஞ்சிபுரம் - நிலம், 2.திருவானைக்கா - நீர், 3.காளகஸ்த்தி - காற்று, 4.சிதம்பரம் - ஆகாயம், 5.திருவண்ணாமலை - நெருப்பு
இந்தியா முழுவதும் 12 ஜோதிர்லிங்கங்களும் பரந்து உள்ளன. தொடரும்...