(நாகேந்திரம் கருணாநிதி)
6. இக்கட்டுரையில் வரும் விடையங்களுக்காக ஆதாரமாக எடுக்கப்பட்ட நூல்களினதும், அவற்றை ஆக்கியோரினதும் விபரங்கள்.
பின் வரும் 14 சைவ சித்தாந்த சாத்திரங்கள் அல்லது மெய்கண்ட சாத்திரங்களான
2. திருக்கழிற்றுப்படியார். (கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அவர்களால் அருளப்பட்ட இரண்டாவது சைவ சித்தாந்த சாத்திர நூல். இன் நூலின் அரங்கேற்றத்தின் போது நூலைத் தில்லை நடராசப்பெருமானின் பொன்னம்பலத்தின் முன்னிருக்கும் பஞ்சாச்சரப் படிக்கட்டில் வைத்தனர். அப்போது அருகில் இருந்த கல்லால் வடிக்கப்பெற்ற யானை நூலேடுகளை எடுத்து நடராசப்பெருமானின் திருவடிகளில் வைத்தது)
3. சிவஞான போதம். (கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவர் நால்வரில் ஒருவரான பெண்ணாகடம் மெய்கண்ட தேவநாயனார் அவர்களால் அருளப்பட்டது. இன் நூல் சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணி முடியாய் அதாவது முதல் நிலையில் விளங்கும் நூலாகும்) இன் நூல் தட்சணாமூர்த்தியின் திருக்கரத்தில் இருக்கும் பாக்கியம் பெற்ற நூலாகும்.
பின் வரும் இரண்டு நூல்களும் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவரில் ஒருவரும், சகலாகம பண்டிதரும், மெய்கண்ட தேவநாயனாரின் மாணவருமான திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது.
4. சிவஞான சித்தியார். (சிவஞான போதத்திற்கு வழி நூல்)
5. இருபா இருபது.
6. உண்மை விளக்கம். (கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்ட தேவநாயனாரின் மாணவரான திருவதிகை மனவாசகம் கடந்தார் அவர்களால் அருளப்பட்டது)
பின் வரும் 8 நூல்களும் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லை வாழ் அந்தணர்களின் பரம்பரையில் வந்தவரும், புறச்சந்தான குரவரில் ஒருவரும், சித்தாந்த சாத்திரங்கள் 14 இல் சித்தாந்த அட்டகம் என்று போற்றப்படும் 8 நூல்களை அருளியவரும், புறச்சந்தான குரவரில் ஒருவரான மறை ஞான சம்பந்தரின் மாணவருமான கொற்றவன் குடி உமாபதி தேவ நாயனார் (உமாபதி சிவாச்சாரியார்) அவர்களால் அருளப்பட்டது.
7. சிவப்பிரகாசம். (சிவஞான போதத்திற்குச் சார்பு நூல்)
8. திருவருட் பயன்.
9. வினா வெண்பா.
10. போற்றிப் பஃறொடை.
11. கொடிக்கவி. (ஒரு முறை தில்லை நடராசப்பெருமானின் உற்சவத்தின் போது கொடி ஏற மறுத்தது. அப்பொழுது உமாபதி சிவாச்சாரியாரை அழைத்துக் கொடியேற்றுமாறு இறை அசரீரி கேட்டது. தில்லைவாழ் அந்தணர்களால் ஆலயத்திற்குள்ச் செல்லத் தடுக்கப்பட்டிருந்த சிவாச்சாரியாரை அவர்கள் அழைத்து வந்து, அவர் இப்பாடலைப் பாடிய பின்பு கொடி தானாக ஏறியது.)
12. நெஞ்சுவிடு தூது.
13. உண்மை நெறி விளக்கம்.
14. சங்கற்ப நிராகரணம். இவற்றுடன்
15. திருமந்திரம்.(10 ஆம் திருமுறை) இன் நூல் 63 நாயன்மார்களில் ஒருவரும், கி.பி.4 ஆம், 5 ஆம் நூற்றாண்டில் 3000 வருடங்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுபவரும், சுந்தரமூர்த்தி நாயனாரால் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்“ எனத் திருத்தொண்டர் தொகையில் பாடப்பட்டவருமான திருமூலர் நாயனார் அவர்களால் அருளப்பட்டது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணத்தில் இவரை கயிலாயத்துச் சித்தர் என “கயிலாயத்து ஒரு சித்தர் பொதியில் சேர்வார் காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்” என்னும் பாடல் மூலம் கூறப்பட்டுள்ளது. சைவம், தமிழ் ஆகிய பெரும் துறைகளில் தலைசிறந்த மும்மணிகள் எனக் கூறப்படும் நூல்கள் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றுடன் திருமந்திரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சைவசமய நூல்களில் மந்திரம் எனக் கூறப்படும் ஒரே நூல் திருமந்திரமாகும். இந்நூல் சைவசித்தாந்த சாத்திரமாகவும், இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திரமாகவும், தமிழ் மூவாயிரம் எனவும், திருமந்திர மாலை எனவும் போற்றப்படுகிறது. (திரு ஞா.மாணிக்கவாசகன் விளக்க உரை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது)
16. பன்னிரு திருமுறைகள். இவை 27 இறை அருள் பெற்ற அருளாளர்களால் அருளப்பட்டவை. நான்கு சமயகுரவர்களான கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் (1, 2, 3 ஆம் திருமுறை), அதே காலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரச நாயனார் அருளிய தேவாரம் (4, 5, 6 ஆம் திருமுறை), கி.பி.
8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய தேவாரம் (7 ஆம் திருமுறை), கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம், திருக்கோவையார் (8 ஆம் திருமுறை), இவ் இரு நூல்களும் மாணிக்கவாசகப் பெருமான் சொல்லச் சிவபெருமானால் எழுதப்பட்டது. இவற்றுடன் சேந்தனார், திருமாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய 9 பேரால் அருளப்பட்ட திருப்பல்லாண்டு, திருவிசைப்பா (9 ஆம் திருமுறை), திருமுறைப் பிரபந்தம் என அழைக்கப்படும் 40 நூல்கள் (11 ஆம் திருமுறை), சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட, 5 ஆவது வேதம் என போற்றப்படும், பெரிய புராணம் என அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம் (12 ஆம் திருமுறை),
17. கந்தபுராணம். கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது.
18. தொல்காப்பியம். கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியரால் அருளப்பட்டது.
19 திருவிளையாடற் புராணம். பரஞ்சோதி முனிவரால் அருளப்பட்டது.
20. திருக்குறள். இன்நூல் உலகப்பொதுமறை, உத்தரவேதம், தெய்வநூல் எனவும் அழைக்கப்படுகிறது. கி. மு. 1 ஆம், அல்லது 3 ஆம் நூற்றாண்டில் திருவள்ளுவ நாயனார் என ஜி.யு.போப்பால் போற்றப்பட்ட திருவள்ளுவரால் அருளப்பட்டது. 1839 இல் ஜி.யு.போப் லண்டனில் இருந்து கத்தோலிக்கத் திருச்சபை மூலம் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஆங்கிலேயப் பாதிரியார். இவர் சைவசமயத்தின்பால் ஈர்க்கப்பட்டு திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்ற பல நூல்களை மொழிபெயர்த்தவர். உலகத்தில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் திருக்குறளாகும்.
இவற்றுடன் சில சமய, வரலாற்று நூல்கள், அறிஞர்கள், சமயப்பெரியோர்களின் சொற்பொழிவுகளும் அடங்கும்.
குறிப்பு
சைவ சித்தாந்தம் - பகுதி 2 இல் நான் கூறிய அந்தந்த நாட்டு நேரப்படி கணித்த கலண்டரைப் பாவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என நினைக்கின்றேன். எந்த முறைப்படி ( வாக்கியம், அல்லது திருக்கணிதம்) கணித்த கலண்டரைப் பாவிக்க வேண்டும் என்பதை “அந்தந்த நாடுகளில் கிரகணம் நடக்கும் (விரைவில் லண்டனில் சூரியகிரகணம் நடைபெறவுள்ளது) போது அந்த நேரத்தை எந்தப் பஞ்சாங்கம் (கலண்டர்) சரியாகக் கணித்துள்ளதோ அந்தக் கலண்டரை நாம் சரியானதெனக் கொள்ளலாம்” என்ற திரு சிவசண்முகநாதக் குருக்களின் ஆலோசனையைப் பின்பற்றலாம் என நினைக்கின்றேன்.