
சித்தாந்தமும் வேதாந்தமும் சைவசமயத்தின் இரு கண்களைப்போன்றவை. வேதாந்தம் என்பது 4 வேதங்களின் ( 108 உபநிடதங்கள் உட்பட ) முடிந்த முடிவு. சித்தாந்தம் என்பது 28 ஆகமங்களின் ( 207 உப ஆகமங்கள் உட்பட ) முடிந்த முடிவு. சைவ சித்தாந்தத்தை ஆகமாந்தம் எனவும் கூறுவர்.இரண்டும் ஆன்மா இறைவனை நாடும், போயடையும் வழி முறைகளைக் கூறுகின்றன.
“புறச்சமயத் தவர்க்குஇருளாய் அகச்சமயத்து ஒளியாய்ப்
புகலளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப்
பிறப்பிலதாய் இருள்வெளிபோல் பேதமுஞ்சொற் பொருள்போல்
பேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய் உடல்உயிர்கண் அருக்கன்
அறவொளிபோல் பிறிவருமத் துவித மாகுஞ்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்த் திறனிங்கு தெரிக்கல் உற்றாம்”
அதாவது வேதாந்தத்தின் தெளிவு சைவசித்தாந்தம் எனக் கூறுகிறது.
திருமந்திரம் 2397 ஆம் பாடல்
“வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன்உரை அவைநாடில் இரண்டு அந்தம்
பேதம்அது என்பர் பெரியோர்க்கு அபேதமே”
வேதங்கள், ஆகமங்கள் எல்லாம் இறையருள் கூறும், இறைவனால் அருளிச்செய்யப்பட்ட உண்மைப்பொருளுணர்த்தும் உயர்ந்த நூல்களாகும். ஓதப்படும் வேதம் பொதுவானது என்றும், ஆகமம் சிறப்புடையது எனவும், இறைவன் அருளிய இரண்டுமே ஒண்றுதான் எனவும் கூறுகிறது.
திருமந்திரம் 57 ஆம் பாடல்
“அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்
அஞ்சோடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே”
28 ஆகமங்களையும் 66 முனிவர்களுக்கு சிவபெருமான் தனது 5 ஆவது ( ஈசான ) முகத்தால் அருளிச்செய்தார் எனக் கூறுகிறது.
திருமந்திரம் 54 ஆம் பாடல்
“திருநெறி ஆவது சித்து அசித்தன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறி ஆம் சிவமாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.”
அதாவது சித்தாந்தம், வேதாந்தம், சன்மார்க்கம், பூசை வழிபாடு என்கின்ற எல்லா வழிகளுமே இறைஅருள் பெற உதவும் திருநெறிகளே எனக் கூறுகிறது.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக் கோவை என்னும் நூலில் பாடல் எண் 11 இல் வேதாந்தம் பழம் எனவும் சைவ சித்தாந்தம் அதன் சாறு எனவும் கூறப்பட்டுள்ளது.
தாயுமானவர் வேதாந்தத்தையும், சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தான் உண்மையான சித்தர்கள் எனக் கூறியுள்ளார்.
பாம்பன் சுவாமிகள், சிவஞான சுவாமிகள், காசிவாசி செந்தி நாத ஐயர் உட்படப் பலர் மேற்படி கருத்தையே கூறியுள்ளனர்.
மாணிக்கவாசகப்பெருமான் திருவாசகத்தில்
“ஆகமம் ஆகி நின்றண்ணிப்பான் தாழ் வாழ்க”
எனக்கூறியுள்ளார்
முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானால் காலத்திற்குக் காலம் தவமுனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட வேதங்களும் ஆகமங்களும் எவ்வாறு முரண்பட முடியும் என்பது சிந்திக்கத்தக்கது.
சித்தாந்தத்திற்கும் வேதாந்தத்திற்கும் இடையில் உள்ள சில வேறுபாடுகளைக் கூறுவதாயின் வேதாந்தம் நான் (ஆன்மா) இறைவனாக இருக்கின்றேன். ( சாம வேத மகா வாக்கியமான தத்துவம் அஸி - தன்நிலைக் கூற்று) ஆனால்ச் சித்தாந்தம் இறைவன் ஆன்மாவாக இருக்கிறார் (பிறநிலைக்கூற்று). வேதாந்தம் இறைவனிடமிருந்து ஆன்மா தோன்றியதாகக் கூறுகிறது. ஆனால்ச் சித்தாந்தம் ஆன்மா என்றும் உள்ள பொருள் அது தோன்றுவதுமில்லை அழிவதுமில்லை எனக் கூறுகிறது. வேதாந்தம் ஆன்மா எல்லா வினைகளையும் அனுபவித்து முடித்த பின் உடலை விட்டு நீங்கி இறைவனுடன் சேருவதாகக் கூறுகிறது. ஆனால்ச் சித்தாந்தம் ஆன்மா எல்லா வினைகளையும் அனுபவித்து முடித்த பின் உடலை விட்டு நீங்கி இறைவனுடைய காலடியில் அமர்கிறது எனக் கூறுகிறது.
கி. மு. 6, 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், மஹாபாரதம் என்னும் இதிகாசத்தையும், ஸ்ரீமத் பாகவத புராணத்தையும் இயற்றியவரும், 4 வேதங்களையும், 18 புராணங்களையும் தொகுத்தவருமான வேதவியாசமுனிவரால் ஆக்கப்பட்ட வேதாந்தத்தில் உள்ள பிரம்மசூத்திரம் உட்படச் சில பகுதிகளை மட்டும் சைவ சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளவில்லை. வியாசமுனிவர் பொய் கூறியதால் அதிகார நந்தியால் தண்டிக்கப்பட்டார் என புராணத்தில்க் கூறப்பட்டுள்ளது. இதற்குச் சான்று கூறுவது போல எந்தவொரு சைவ ஆலயத்திலும் வியாசமுனிவரின் சிலை அல்லது விக்கிரகம் இல்லாதிருப்பதை நாம் இன்றும் பார்க்கலாம்.