(நாகேந்திரம் கருணாநிதி)
தத்துவமசி – அது (இறைவன்) நீ (ஆன்மா) ஆகிறாய்
நான்கு வேதங்களிலும் பல மகா வாக்கியங்கள் கூறப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு மகாவாக்கியம் முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது. ரிக் வேதத்தில் ஐதரேய உபநிடதத்தில் “ப்ரக்ஞானம் பிரம்மம்” (உணர்வே பரம்பொருள்) என்ற மகாவாக்கியமும், யசுர் வேதத்தில் பிரகதாரண்யக உபநிடதத்தில் “அஹம் பிரம்மாஸ்மி” (நான் பிரம்மமாயிருக்கின்றேன்) என்ற மகாவாக்கியமும், சாம வேதத்தில் சாந்தோக்கிய உபநிடதத்தில் “தத் த்வம் அஸி” (அது நீ ஆகிறாய்) என்ற மகாவாக்கியமும், அதர்வண வேதத்தில் மாண்டூக்ய உபநிடதத்தில் “அயம் ஆத்மா பிரம்ம” (ஆத்மாதான் பரம்பொருள்) என்ற மகாவாக்கியமும் முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது.
சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் பல இடங்களில் இவ்வுண்மை வலியுறுத்தப்படுகின்றது. உதாரணமாக பின் வரும் அருணந்தி தேவநாயனாரால் அருளப்பட்ட சிவஞானசித்தியார் நூலின் இரண்டாம் சூத்திரம் சுபக்கம் பாடல் எண் 91 இல் இறைவன் உயிர்களிடத்தில் அத்துவிதமாய் கலந்து பிரிவின்றி நிற்பான் எனக் கூறப்பட்டுள்ளது.
“உலகெலாம் ஆகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி
அலகிலா உயிர்கள் கன்மத்து ஆனையின் அமர்ந்து செல்லத்
தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கு எய்தல் இன்றித் தானே
நிலவுசீர் அமலனாகி நின்றனன் நீங்காது எங்கும்.”
திருமூலநாயனார் அருளிய திருமந்திரம் எட்டாம் தந்திரத்தில் பாடல் எண் 2568, 2569,2570,2571,2577, என்பனவற்றில் தத்துவமசி பற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது.
பாடல் 2568
“சிவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
தாவு பர துரியத்தினில் தற்பதம்
மேவு சிவதுரியத்து அசி மெய்ப்பதம்
ஓவி விடும் தத்துவமசி உண்மையே.”
பாடல் எண் 2569
“ஆறாறு அகன்ற அணுத்தொம்பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்து உபசாந்தத்துப்
பேறாகிய சீவன் நீங்கிப் பிரசாதத்து
ஈறான தொந்தத்தசி தத்வ மசியே.”
சீவன் சிவனே எனக்கூறும் பாடல் எண் 2570
“ஆகிய அச்சோயம் தேவதத்தன் இடத்து
ஆகிய விட்டு விடாத இலக்கணைத்
தார் உபசாந்தமே தொந்தத் தசிஎன்ப
ஆகிய சீவன் பரன் சிவனாமே.”
பாடல் எண் 2571
“துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவை மன்னா அந்துவயத்து ஏகமான
தவமுறு தத்துவ மசி வேதாந்த
சிவமாம் அது சித்தாந்த வேதாந்தமே.”
பாடல் எண் 2577
“நீஅது ஆனாய் எனநின்ற பேருரை
ஆயது நான்ஆனேன் என்னச் சமைந்துஅறச்
சேயசிவமாக்கும் சீர்நந்தி பேரருள்
ஆயதுவாய் அனந்த ஆனந்தி ஆகுமே.”
இம்மகா வாக்கியத்தின் உட்கருத்துப்பற்றி வெவ்வேறு வேதாந்தப் பிரிவினரின் கொள்கைகள் மாறுபடுகின்றது. இம்மகாவாக்கியத்தை விளங்குவதற்கு முன்பு முக்கியமான சில விடையங்களை நாம் அறியவேண்டியுள்ளது. முதலாவதாக இறைவன் எங்கும் நிறைந்தவனாக இருப்பதை நாம் உணரவேண்டும். இரண்டாவதாக நாம் யார் என்பது எமக்குத் தெரியவேண்டும்.
நான் இருக்கின்றேன் என்ற தனது இருப்பைப் பற்றிய அறிவு மனிதனுக்குமட்டுமே உள்ளது. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் அவைகளின் இருப்பைப் பற்றிய அறிவு கிடையாது. இவ்அறிவு இருப்பதால் எது சரி எது தவறு என்னும் விடையம் மனிதனால் மட்டும் தான் உணரக்கூடியதாக உள்ளது. மற்ற ஜீவராசிகளுக்குக் கிடையாது. இதனால் ஒரு செயலைத் தேர்ந்து செய்வதோ செய்யாமல் இருக்கவோ மனிதனால் மட்டும் தான் முடியும் மற்ற ஜீவராசிகளால் முடியாது. இவ்வாறே மனிதனுக்கு வாழ்க்கையில் குறிக்கோள் என்று ஒன்று உண்டு. இக்குறிக்கோளை நான்கு பகுதியாகச் சாஸ்திரங்கள் பிரித்துக் கூறுகின்றன. அவையாவன
1. பொருள் (பாதுகாப்பைத் தேடி அதன் மூலம் மன நிறைவை பெறுவது.),
2. இன்பம் (மன மகிழ்ச்சி மூலம் மன நிறைவை பெறுவது.),
3. அறம் (தர்மம்) (அறவழியில் வாழ்வதன் மூலம் மன நிறைவை பெறுவது),
4. வீடுபேறு (நிறைவு). நிறைவை அறிதலே நிறைவை அடைதலாகும். நிறைவு என்பது பரம்பொருளின் சொரூபம். சூடாயிருப்பதே நெருப்பின் சொரூபம் போல நிறைவாயிருப்பதே பரம்பொருளின் சொரூபம். சூரியனும் ஒளியும், நெருப்பும் சூடும் இருவேறு பொருட்களல்ல. அவ்வாறே பரம்பொருளும் நிறைவும் இரு வேறு பொருட்கள் அல்ல. நெருப்பை அறிந்தால் சூட்டைப் புரிந்து கொள்வதுபோல, சூரியனை அறிந்தால் ஒளியைப் புரிந்து கொள்வதுபோல பரம் பொருளை அறிதலே நிறைவை புரிந்துகொள்வதாகும். எனவே நிறைவை அறிதலே பரம்பொருளை தெரிந்துகொள்வதாகும். எந்த ஒரு பொருள் அண்டசராசரங்களுமாக விளங்குகின்றதோ அதுவே பரம்பொருளாகும். கடலின் இருப்பாக இருப்பது நீராகும். அவ்வாறு அலைகளின் இருப்பும் நீராகும், நீர் இல்லாவிடில் கடலோ, அலையோ இருக்கமாட்டாது. அவ்வாறே பரம்பொருள் (மெய்ப்பொருள்) இல்லாவிடில் அண்டசராசரங்களும் இருக்காது. கடலாகிய காரணப் பொருளுக்கு நீர் காரியமாக இருப்பது போல, தங்கமான காரணப் பொருளுக்கு ஆபரணம் காரியமாக இருப்பது போல, (மரம் காரணம் தளபாடம் காரியம்) காரணம் இல்லாமல் காரியம் இருக்கமுடியாது ஆனால் காரியம் இல்லாமல் காரணம் இருக்கமுடியும். கடல் இருக்கிறது என்றால் நீர் இருக்கின்றது என்பதைப்போல பிரபஞ்சம் இருக்கின்றது என்றால் பரம்பொருள் இருக்கின்றது என்பது நிரூபணமாகிறது. எனவே எல்லாம் சிவமயம் (பரம்பொருள்) நீ யார் என்று உனக்குத் தெரியாது. தெரிந்தால் பரம்பொருளை அறிவாய். தத்துவமசி என்னும் மகாவாக்கியத்தின் பொருளை புரிந்து கொள்வதற்கு பரம்பொருளை தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். எனவே பரம்பொருளைப் புரிந்துகொண்டால் மகாவாக்கியத்தைப் புரிந்து கொள்ளலாம். மகாவாக்கியத்தை அதாவது நீயே பரம்பொருள் என்பதைப் புரிந்துகொண்டால் நிறைவு கிடைக்கும்.
நிறைவுபெறுகிறது.
சைவசித்தாந்தத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை இதுவரை காலமும் என்னுடன் பகிர்ந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்துடன் இணைத்துள்ள கட்டுரையுடன் சைவ சித்தாந்தத் தொடர் கட்டுரையை நிறைவிற்குக் கொண்டுவருகின்றேன். மேலும்
“தேவர் குறளும் திருநாள் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.”
என ஔவையாரால் புகழாரம் சூட்டப்பட்ட சைவசமயத்திற்குக் கிடைத்த அரிய பொக்கிஷமான திருமந்திரத்தில் இறை அருளால் லண்டன் சைவமுன்னேற்றச் சங்க சைவசித்தாந்தப் பயிற்சி மையத்திற்கூடாக எனது குரு திரு பற்றிமாகரன் அவர்கள் மூலம் நான் பெற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணியுள்ளேன்.
அன்புடன்
நாகேந்திரம் கருணாநிதி