புராணக்கதைகள் வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்களை, நீதி முறைகளை விரிவாக மக்கள் புரிந்து கொள்வதற்காகக் கூறப்பட்ட உண்மைக் கதைகளாகும். வேதமந்திரமான “ஸத்யம் வத” (உண்மை பேசு) ஹரிச்சந்திர புராணமாகவும், “தர்மம் சர” (அறத்தைப் பின்பற்று) மஹாபாரதமாகவும், “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ” (தாய், தந்தையருக்குக் கீழ்ப்படிதல்) இராமாயணமாகவும் பெரிதாக விரிவுபடுத்திக் கூறப்பட்டுள்ளது
புராணங்கள் பிரம்மாவிடமிருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்கிய உபநிடதத்திலும், மத்ஸ்ய புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. புராணங்கள் சிவனிடமிருந்து வந்ததாகவே சைவசமயம் கூறுகிறது. சைவ சித்தாந்தம் பிரம்மாவை சிவனின் ஒரு அங்கமாகப் பார்ப்பதால் இதில் முரண்பாடு உள்ளதாக நாம் எடுக்கமுடியாது.
திருஞானசம்பந்தப்பெருமான் புராணங்கள் சிவனிடமிருந்து வந்ததைத் பின்வரும் பாடலில் 4 வேதங்களும், 18 புராணங்களும், 6 வேதாங்கங்களும் இறைவனால் விரித்து உரைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்
“பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேத நான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார்க்கு இடம்
தாதுவிண்டம் மதுவண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாடம் மடமந்தி கேட்டுகளும் கேதாரமே”
மேலும்
“பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே”
எனப் புராணங்கள் சிவனிலிருந்து நந்தி, சனற்குமாரர், சூத முனிவருக்கூடாக வந்து வியாச முனிவரால் வகுக்கப்பட்டதைக் கூறியுள்ளார். மேலும்
மூவர்க் கருள் செய்தார்”
எனத் திரிபுரங்களை எரித்த பொழுது மூவரை மட்டும் சிவன் காப்பாற்றினான் என்று கூறியுள்ளார்.
சுந்தரமூர்த்தி நாயனார் பின்வரும் பாடலில் சிவன் தான் காப்பாற்றிய மூவருள் இருவரை வாயில்க் காவலர்களாகவும், ஒருவரைத் தான் ஆடும் திருநடனத்திற்கு மத்தளம் முளங்குபவராகவும் நியமித்தார் எனக் கூறியுள்ளார்.
“மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர்நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரிகாடரங்காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவ்வருள் செய்த
தேவதேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூருளானே”
மாணிக்கவாசகப்பெருமான் திருவாசகத்தில் உள்ள திருவுந்தியாரில்
“வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன்வெந்தவா றுந்தீபற”
எனவும் சேக்கிழார்பெருமான் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாறு திருப்பாசுர விளக்கத்தில்
“வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினீனேர்
ஆதி உலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே
ஒது என்று உரை செய்தனர் யாவும் ஒதாதுணர்ந்தார்”
எனவும் அருணந்தி சிவாச்சாரியார் பின்வரும் “சிவஞானசித்தியார்” சுப பக்கம் பாடல் எண் 266 இல் வேதாகமப்பொருள்களை விரிவுபடுத்தி இறைவன் அருளால் அருளாளர்கள் புராணங்களை உருவாக்கினார்கள் எனக் கூறியுள்ளார்.
அளிப்புஅரிதாம் அப்பொருளை அரன்அருளால் அணுக்கள்
தருவர்கள் பின்தனித்தனியே தாம்அறிந்த அளவில்
தர்க்கமொடு உத்தரங்களினால் சமயம் சாதித்து
மிருதி புராணம் கலைகள் மற்றும் எல்லாம்
மெய்நூலின்வழி புடையாம் அங்கம் வேதாங்கம்
சுருதி சிவாகமம் ஒழியச்சொல்லுவது ஒன்றில்லை
சொல்லுவார் தமக்கறையோ சோல்லொ ணாதே”
திருமூலநாயனார் “திருமந்திரம்” இரண்டாம் தந்திரத்தில் 337 ஆம் பாடலிலிருந்து 375 வரையில் இலிங்க புராணம், தக்கன்வேள்வி, அடிமுடி தேடல் போன்ற பல புராணங்களை எடுத்து அவற்றில் உள்ள நல்லொழுக்கம், உண்மைப்பொருள் விளக்கம், ஐந்தொழில்களின் செயற்பாடுக்கேற்ப உயிர்களின் செயற்பாடுகள் பற்றி விளக்கியுள்ளார்.
புராணங்கள் பற்றிச் சமயகுரவர்கள், சந்தானகுரவர்கள், திருமூலநாயனார், சேக்கிழார் பெருமான் உட்பட பல இறை அருள் பெற்ற அருளாளர்களின் கூற்றுக்கு மேலாக நாம் எந்தவித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை.