
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 14. சங்கற்ப நிராகரணம்
சங்கற்ப நிராகரணம். உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். சங்கற்பம் என்பது கொள்கை, நிராகரணம் என்பது மறுப்பு என்ற பொருளைத் தரும். இந்நூலுள் ஒன்பது மதங்களின் கொள்கைகளை அவ்வவ் மதத்தார் கூறுவது போல அமைத்து, அதன் பின் பிற மதத்தாரால் அக்கொள்கைகள் மறுக்கப்பட்டு, இறுதியில் சைவவாதியின் மறுப்போடு நூல் நிறைவு பெறுகின்றது. இந்நூலில் காப்பு, பாயிரம் உட்பட இருபது பகுதிகள் உள்ளன. இதில் பல பாடல்கள் மிகவும் பெரிதாக (254 வரிகள் கொண்டவை கூட) அமைக்கப்பட்டுள்ளது.
“அறிவாய் அறியும் அறிவுயிர் கேவலத்து
அறிவிலன் இருளொடும் பிறிவிலன் அண்ணல்
கலைமுத லாக நிலவிய கருவிகள்
விளக்கென உதவும் துளக்கறப் பொருந்தி
இருவினை நுகர்வில் வருவினில் செய்து
மாறிப் பிறந்து வருநெடுங் காலத்து
இருள்மல பாகமும் சத்திநி பாதமும்
மருவுழி அருளுரு மன்னவன் அணைந்து
செல்கதி ஆய்ந்து பல்பணிப் படுத்திக்
கருவியும் மலமும் பிரிவுறப் பிரியா
ஞானம் நல்கலும் தானது நோக்கித்
தன்னையும் அதனையும் தன்முதல் பொருளையும்
இன்னவென்று அறியா இருவரும் முயங்கி
ஒன்றாய் உருபயன் உவப்பும்
இன்றாய் நிற்கும் இதுசிவ கதியே.”
இப்பாடலின் பொருள், அநாதியாய் அறிவாய் அறிந்து கொண்டு வருகின்ற அறிவாய் இருக்கின்ற ஆன்மா கேவல அவத்தையில் அறிவில்லாது நிற்கும். ஆணவத்தோடு கூடி நீக்கமின்றி இருக்கும். இறைவன் ஆன்மாவிற்குக் கலை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்தோரு கருவிகளையும், கண் காண்பதற்கு உதவுகின்ற விளக்கைப் போலக் கொடுத்து அருளுவான். அந்தக் கருவிகளோடு கூடிய ஆன்மா சகலத்தில் பிராரத்த கன்மத்தால் புண்ணிய பாவங்கள் அனுபவித்து ஆகாமிய வினையை ஏற்றிவிடும். இவ்வாறு இருவினை நுகர்வால் பிறந்து இறந்து வரும். இவ்வாறு வருகையில் சிவபுண்ணியத்தினால் மலபரிபாகமும், சத்திநிபாதமும் ஏற்படும். இதுவே பெத்த நிலையாகும்.
இவ்வாறு ஏற்பட்ட காலத்தில் இறைவனின் திருவருளே திருமேனி பெற்று ஆச்சாரியனாக எழுந்தருளி ஆன்மாவைச் சரியை கிரியை யோகங்களிலே நிறுத்தும். சரியை கிரியை யோகம் செய்வதால் கேவல சகல அவத்தைகள் நீங்கும். அவ்வாறு நீங்குவதால் ஆன்மாவின் உண்மை ஞானம் ஏற்படும். உண்மை ஞானத்தால் ஞாதுறு வாகிய தன்னையும், ஞானமாகிய உண்மை ஞானத்தையும், அதற்கு முதலாக உள்ள நேயத்தையும் இந்த மூன்றினையும் சுட்டி அறியாமல் ஆன்மாவும் இறையும் கூடி இரண்டும் ஒரு முதலாய் பயனும் விருப்பமும் இல்லாமல் நிற்கும். இதுவே சாயுச்சியமாகிய முத்தியாகும்.
பகுதி எண் 20. சைவவாதி நிராகரணம்
“இதுகதி யாக முதலறிவு உயிரேல்
பொறிபுலன் நீங்க அறிவுயிர் அன்றே
அடைகாய் நூறின் இடைசேர் சிவப்பென
இந்தியத் தொகையின் வந்தறிவு ஒன்றுநின்று
இன்றாம் என்றல் அன்றே எந்தை
அறிவிலன் அதீதச் செறிவில் என்றுரைத்த
நின்மொழி விரோதமும் பின்முன் மலைவும்
மன்வயின் நிகழா மலமிருள் இறையொளி
தானமர் விளக்கில் தகுமருள் கலாதிகள்
ஈனமில் இவனிடத்து எவ்வாறு இசைந்தன
இசைந்த தாயினும் இசையா தாயினும்
அசைந்திடும் முத்தி சாதனம் அவமே.
இப்பாடலின் பொருள், சிவகதி பற்றி நீ கூறிய கருத்துக்கள் இருக்கட்டும். அதுபற்றிப் பின்னர் பார்ப்போம். உயிரானது தொன்று தொட்டு (அநாதி) அறிவாக விளங்கும் என்றால் பொறிபுலன்கள் நீங்கும் காலத்தில் உயிர் அறிவுடையதாக இல்லையே ஏன்? வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு கூடிய பொழுது புதியதோர் சிவப்பு நிறம் தோன்றுவது போலப் பொறி புலன்கள் கூடுவதால் அறிவு தோன்றி அவை கூடாதவிடத்து அழியும் என்று நீ கூறுகிறாய். இது பௌத்தர்கள் கூறுகின்ற கருத்தை ஒக்கும். மேலும் உயிரோடு மலம் சேர்வதால் உயிருக்கு அறிவில்லை என்று நீ கூறுகிறாய். தொடக்கத்தில் ஆன்மாவிற்கு அறிவு இருக்கின்றது என்கிறாய். இவ்வாறு முன்பின் மாற்றிக் கூறுவது நல்லவர்கள் குழுவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
ஆணவம் என்பது முழுமையான இருளாய் இருப்பது. இறைவன் என்பவன் மிக ஒளியாக இருக்கின்றான். ஆன்மாவிற்கு இடையில் இறைவனால் கூட்டுவிக்கப் பெற்ற விளக்குப் போன்று முப்பத்தோரு தத்துவங்களும் மாயா கருவிகளாகக் கூட்டப் பெற்று மயக்கமாய் இருப்பனவாகும். ஆணவமலம் இருளாய் இருக்கும் கேவல நிலையில் மாயா மலங்களாகிய இவை எவ்வாறு இறைவனால் கூட்டப் பெற்றன? அந்த மாயா கருவிகள் கூடி ஆன்மா அறிவு பெற்றான் என்றாலும் கருவிகள் கூடாமல் கேவலந் தன்னில் அறிவற்று இருந்தான் என்றாலும் கூறப்படுகின்ற முத்தி சாதனம் பொருந்துமாறு இல்லை.