(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 13. உண்மைநெறி விளக்கம்
உண்மைநெறி விளக்கம். உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள பாயிரப் பாடல் இந்நூலைப் பாடியவர் சீர்காழிச் சிற்றம்பலநாடிகளின் மாணவரான சீர்காழித் தத்துவராயர் என்றே கூறுகிறது. ஆனால் சீர்காழித்தத்துவராயரால் உமாபதி சிவாச்சாரியாரால் அருளப்பட்ட உண்மைநெறிக்கு விளக்கம் கூறப்பட்டதாகப் பாடிய தனிப்பாயிரம் இந்நூலில்ச் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். சாத்திரங்களில் சிறிய நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூல் பாயிரப்பாடலைத் தவிர ஆறு விருத்தப் பாக்களைக் கொண்டது. இந்நூல் சுருக்கமாக தசகாரியத்தை விளக்குகிறது. தசகாரியம் என்பது உயிர் பாசத்தின் உண்மை வடிவைக் கண்டு அதனை நீங்கி இறைவனின் திருவருள் ஞானத்தால் தன் நிலை உணர்ந்து பின் திருவடிப் பேறாம் இறைவனின் திருவருளில் தோய்ந்து இறையின்பத்தைப் பெறுவதற்குக் கூறப்பட்ட பத்துப் படிநிலைகளாகும். இவற்றை விரிவாக பண்டார சாத்திரங்களில் காணலாம். இந்நூலிலுள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.
“மண் முதல் சிவம் அது ஈறாம் வடிவு காண் பதுவே ரூபம்
மண் முதல் சிவம் அது ஈறாம் மலம்சடம் என்றால் காட்சி
மண் முதல் சிவம் அது ஈறாம் வகைதனில் தான்நிலாது
கண் நுதல் அருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதலாமே.”
இப்பாடலின் பொருள். மண் முதலாக சிவம் ஈறாக 36 தத்துவத்தின் வடிவைக் காண்பது தத்துவரூபம். இத் தத்துவம் 36 இனையும் உயிர் கூடி அறியும் அல்லாது தத்துவங்கள் தாமே அறியாது. எனவே அத்தத்துவங்களை அறிவற்ற பொருளாகிய சடம் என்று காண்பதுவே தத்துவக் காட்சியாகிய தத்துவ தரிசனம். மண் முதல் சிவம் ஈறாகிய தத்துவங்களை சடம் என்று கண்ட உயிர் இறைவனின் திருவருளால் அத்தத்துவங்களின் இயல்பையும் விளைவையும் நன்கு அறிந்து, தத்துவங்களோடு பொருந்தி நில்லாது விலதி நிற்றல் தத்துவ சுத்தியாகும்.
பாடல் எண் 2. ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி
“பாயிருள் நீங்கி ஞானம் தனைக்காண்டல் ஆன்மரூபம்
நீயும்நின் செயலொன்று இன்றி நிற்றலே தெரிச னந்தான்
போய்இவன்தன்மை கெட்டுப் பொருளில்போய் அங்குத் தோன்றாது
ஆய்விடில் ஆன்ம சுத்தி அருள்நூலின் விதித்த வாறே.”
இப்பாடலின் பொருள். உயிர்களைப் பற்றிக் கொண்டிருக்கின்ற ஆணவ மலத்தின் பிடிப்பிலிருந்து நீங்கி, தனக்கு அறிவுக்கு அறிவாக நின்று உதவுவது இறைவனுடைய பேரருளாகிய ஞானமே என்று உயிர் உணர்வது ஆன்ம ரூபம் ஆகும். உயிரானது தன்னுடைய செயல் எதுவும் இல்லை, அனைத்தும் இறைவனுடைய பேரருள்ச் சத்திதான் என்று உணர்ந்து, தன் செயல் அன்றி இறைவனுடைய பேரருளை உயிர் அறிந்து நிற்பது ஆன்ம தரிசனம் ஆகும். எல்லாவற்றையும் நான் அறிவேன் என்ற தன்முனைப்புப் போய் (அற்று) அவ்வாறு அறிகின்ற சுட்டறிவு கெட்டு இறைவனுடைய திருவருளாம் பொருளைச் சார்ந்து, அவ்வாறு சார்ந்தபொழுது தன்நிலைமை தோன்றாது அதில் ஒடுங்கி, அவன் தானே ஆகிய அந்நெறியில் நிற்பது ஆன்மசுத்தியாகும்.
பாடல் எண் 3. சிவரூபம்
“எவ்வடி வுகளும் தானாம் எழில்பரை வடிவ தாகிக்
கவ்விய மலத்தான் மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப்
பவ்வமீண்டும் அகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவன் என்றே
செவ்வையே உயிருள் காண்டல் சிவரூப மாகும் அன்றே.”
இப்பாடலின் பொருள். உலகப் பொருள்கள் அனைத்தின் வடிவுகளும் தன் வடிவே ஆகி, தனக்குத் தன்னில் கலந்துநின்ற சத்தியை (பராசத்தியை) வடிவமாகக் கொண்டு, உயிர்களுக்குத் தன்னுடைய கருணையினால் உடல், கருவி, போகப் பொருள் ஆகியவற்றை அளித்து, உயிர்களின் வினைக்கு ஏற்றவாறு பிறப்பு இறப்புக்களை கொடுத்துக் காத்து, உயிர்கள் இளைப்பாறுதலுக்காக ஒடுக்கி, பிறப்பு இறப்புக்களால் பக்குவப்பட்ட உயிர்களுக்கு, அவை பிறவியாகிய கடலிலிருந்து மீள வழிகாட்டி, அவற்றிற்கு வீடுபேற்றினை வழங்குபவன் சிவபெருமான் ஒருவனே. அவனே தன் நிகரற்ற தலைவன் என்று உண்மைப் பொருளை உயிர்கள் உணர்வது சிவரூபமாகும்.
பாடல் எண் 4. சிவதரிசனம்
“பரைஉயிரில் யான்எனதுஒன்று அறநின்றது அடியாம்
பார்ப்பிடம்எங்கும் சிவமாய்த் தோன்றல்அது முகமாம்
உரைஇறந்த சுகமதுவே முடியாகும் என்றங்கு
உண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன்று இன்றி
தரைமுதலில் போகாது நிலையினில்நில் லாது
தற்பரையில் நின்று அழுந்தாது அற்புதத்தின் ஆகும்
தெரிவரிய பரமானந் தத்தில் சேர்தல்
சிவனுண்மைத் தெரிசனமாய்ச் செப்புநூலே.”
இப்பாடலில் இறைவனின் வடிவம் அவனுடைய திருவருளே ஆகும் என்பதை உணர்ந்து, தத்துவமாம் போகப் பொருள்களிலிருந்து நீங்கித் தன் செயல் அற்று உயிரானது சிவனருளாம் பேரின்பத்தில் தலைப்படுதல் சிவதரிசனம் என்பது பெறப்படுகிறது.
பாடல் எண் 5. சிவயோகம்
எப்பொருள்வந் துற்றிடினும் அப்பொருளைப் பார்த்திங்கு
எய்தும்உயிர் தனைக்கண்டுஇவ் வுயிர்க்கு மேலாம்
ஒப்பில்அருள் கண்டுசிவத் துண்மை கண்டு
உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதும்அதுவே நினைப்பும்அது தானே
தரும்உணர்வும் புசிப்பும்அது தானே யாகும்
எப்பொருளும் அசைவில்லை என அந்தப் பொருளோடு
இயைவதுவே சிவயோகம் எனுமிறைவன் மொழியே.”
இப்பாடலில் உயிர்கள் தமக்குரிய அனைத்து அருட்செயல்களையும் செய்வது சிவபரம்பொருளே என அறிவது சிவயோகமாகும் எனவும், சிவயோகம் என்பது திருவருளுடன் திருவருளாய் இணைந்து நிற்கும் நிலை எனவும் கூறப்பட்டுள்ளது.