(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 12. நெஞ்சுவிடு தூது
நெஞ்சுவிடு தூது. உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். இந்நூல் உமாபதி சிவம் அவர்கள் தனது ஆசிரியரான மறைஞானசம்பந்தரிடம் தனது நெஞ்சைத் தூது விடுத்து அவரிடமிருந்து கொன்றை மாலையை வாங்கிவருமாறு கூறுவதாக அமைந்துள்ளது. இதனால் இந்நூல் நெஞ்சுவிடு தூது எனப்படுகின்றது. இந்நூல் மறைஞானசம்பந்தரைப் போற்றுமாற்போல் அமைந்தாலும் உண்மையில் மானிடச் சட்டை தாங்கிக் குருவாக எழுந்தருளி அடியார்க்கு அருளும் சிவபெருமானையே போற்றுகின்றது. இந்நூல் சைவசித்தாந்த சாத்திரங்களில் இலக்கிய வடிவில் அமைந்த ஒரே நூலாகும். சிற்றிலக்கியங்கள் 96 இல் தூது என்னும் வடிவத்தில் சித்தாந்தக் கருத்துக்களை இந்நூல் விளக்குகிறது. இலக்கிய மரபுப்படி சிவனுக்குத் தசாங்கம் என்று பத்து உறுப்புக்களை உரைக்கின்றது. இதில் கலிவெண்பா யாப்பில் 129 கண்ணிகள் 21 பகுதியாக உரைக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.
“பூமேவும் உந்திப் புயல்வண்ணன் பொற்பதுமத்
தார்மேவும் மார்பன் சதுமுகத்தோன் – தாம்மேவிப்
பன்றியும் அன்னமுமாய்ப் பாரிடந்தும் வான்பறந்தும்
என்றும் அறியா இயல்பினான் – அன்றியும்
இந்திரனும் வானோரும் ஏனோரும் எப்புவியும்
மந்தர வெற்பும் மறிகடலும் – மந்திரமும்
வேதமும் வேத முடிவின்விளை விந்துவுடன்
நாதமும் காணா நலத்தினான் – ஓத
அரியான் எளியான் அளவிறந்து நின்ற
பெரியான் சிறியான் பெண்பாகன் – தெரியா
அருவான் உருவான் அருவுருவ மல்லான்
மரியான் மரிப்பார் மனத்தான் – பரிவான
மெய்யற்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்
பொய்யற்கு பொய்யாய பொய்யினான் – ஐயன்
படநாகம் பூண்ட பரமன் பசுவின்
இடமாய் நிறைந்த இறைவன் – சுடரொளியான்
என்றுமுளன் அன்றளவும் யானும் உளனாகி . . . .
(படைப்புக் கடவுளான பிரமன் தோன்றுவதற்காக கொப்புளிலிருந்து தோன்றுகின்ற) தாமரைமலர் உந்தியை உடைய புயல்மேக நிறமான கார்வண்ண மேனியைக் கொண்ட திருமாலும், பொன்னிறத்து மலர்மாலை அணிந்து சிறப்புடைக் கலைமகளை நாவில் கொண்டவனான நான்முகப் பிரமனும், பன்றியாகவும் அன்னமாகவும் முறையே நிலத்தினைக் குடைந்தும் வானத்தில்ப் பறந்தும் என்றுமே கண்டறியமுடியாத இயல்பினன் சிவபெருமான். அன்றியும் தேவலோகத்து அதிபதியான இந்திரனாலும் தேவர்களாலும் எந்த உலகத்தில் உள்ளவர்களாலும் மந்திரமலையினராலும் ஆழ்கடல் வாழ்வனவற்றாலும் உணர்வதற்கு அரியவன் சிவபெருமான். நான்கு வேதங்களாலும் வேதங்களின் முடிவான உபநிடதங்களினாலும் அறிவுக் கருவிகளுக்கு ஆதாரமாக உள்ள விந்து நாதத்தினை உணர்ந்தவர்களாலும் காணமுடியாத் தன்மையினன். சொல்லி உணரமுடியாதவன். ஆயினும் யாரும் அறியத் தகு எளிமையானவன். அளவிட முடியாது நிற்கும் பெரியவன். அதே வேளையில் நுண்மையில் நுண்மையான சிறியவன். பெண்ணைப் பாகமாகக் கொண்டவன். இயல்பால் கண்ணினால் காண முடியாத அருவமானவன். அருளால் உருவமானவன். இல்லாதவனும் இருப்பவனுமாக அருவுருவமாக நிற்பவன். இம்மூன்று நிலைகளிலும் அடங்காத தன்மையுமானவன். அழிவற்றவன். தோன்றி ஒடுங்கும் உயிர்களின் மனத்திலுள்ளவன். அன்புடை மெய்யடியார்க்கு மெய்யானவன். வினைப்பயன்களை அனுபவிக்க உயிர்களைச் செலுத்துபவன். நம்பிக்கையற்றுப் பொய் எனப் பேசுவோர்க்கும் பொய்யானவன். யாவர்க்கும் தலைவன். படமெடுக்கும் நாகத்தை அணிகலனாக அணிந்த பரம்பொருள். ஆன்மாவில் ஒன்றாயும் உடனாயும் வேறாயும் நிறைந்த இறைவன். உள்ளத்தில் சுடராகவும் உலகில் ஒளியாகவும் திகழ் பேரொளி. அவன் உள்ளவரை உயிராகிய நானும் இருப்பேன்.
2. உயிரின் துன்பங்கள் (பாடல் எண் 9 தொடக்கம் 16 வரை)
“நின்றநிலை யில்தரித்து நில்லாமல் – சென்றுசென்று
தோற்றியிடும் அண்டம் சுவேதசங்கள் பாரின்மேல்
சாற்றும்உற் பீசம் சராயுசங்கட் – கேற்ற பிறப்பு
எல்லாம் பிறந்தும் இறந்தும் இருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் – கல்லா
உணர்வின் மிசையோடு உலகா யதனைப்
புணர்வதொரு புல்லறிவு பூண்டு – கணையிற்
கொடிதெனவே சென்று குடிப்பழியே செய்து
கடிய கொலைகளவு காமம் – படியின்மிசை
தேடி உழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி இடையும் மனந்தனக்கு – நாடிஅது
போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன்
ஆன திறலார் அகந்தைக்கும் – மேனி
அயர அயர அழிய அழியும்
உயிரின் துயரம் உரையேன் . . . .
இப்பாடலின் பொருள், உயிர் ஒரேநிலையில் இல்லாது பற்பல பிறவிகளில் தோன்றி மறையும் இயல்பினது. முட்டையில் (அண்டம்) வியர்வையில் (சுவேதசம்) வித்தில் (உற்பீசம்) கருப்பையில் (சராயுசம்) அவற்றின் வினைப்பயன்களுக்கேற்ப உயிர்கள் பாரின் மிசை தோன்றி இருவினைகளையும் அனுபவித்தலுக்காக நிலைத்து நின்று பொறிகள் வழி அனுபவ உணர்வு பல பெற்று நாத்திகத்தில் கலக்கும் அறிவிலியாகி வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல் விரைவாகவே குடிக்குப் பழியினை வருவிக்கும் கொலை களவு காமம் இவற்றில் ஈடுபட்டு துன்பங்களை அனுபவித்து, அறியவேண்டியனவற்றை அறியாது, உலகப் பொருட்களில் மயங்கி வாழும். சோர்ந்திடும் மனதிற்கும், அதன்வழி செல்லும் புத்திக்கும், புத்தியில்த் தோன்றும் அகந்தைக்கும் உட்பட்டு, முயற்சிகளை மேற்கொள்ளும் ஆற்றலை மேனி இழந்து களைப்புற்று வருந்தி மறையும் இயல்பினை உடைய உயிரின் துன்பங்களைச் சொல்லால் கூறியலாது.