
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 11. கொடிக்கவி
கொடிக்கவி. உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். ஒருநாள் உமாபதி சிவாச்சாரியார் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு முடித்துத் தம் வீட்டிற்கு வழக்கமாகத் தனக்கு அமைந்த விருதுகளோடு சிவிகை மேல்ச் சென்றார். அப்பொழுது வீதியில் ஒரு திண்ணையில் வீற்றிருந்த மறைஞானசம்பந்தர் உமாபதியார் செல்லும் காட்சியைப் பார்த்து “பட்ட கட்டையில் பகலற் குருடு ஏகுதல் பாரீர் “ என்றார் இதன் பொருளை (பட்ட கட்டை – சிவிகை, பகற் குருடு – பகலிலும் விருது ஆகிய விளக்கைச் சிவிகைக்கு முன்னால் பிடித்துச் சென்றமை) உணர்ந்த உமாபதி சிவம் சிவிகையில் இருந்து இறங்கித் தன்னிலும் பார்க்க மிகவும் இளவயதுடைய மறைஞானசம்பந்தரின் திருவடிகளைத் தொழுதார்.
உமாபதி சிவம் பொன்னம்பலவருக்குப் பூசை செய்வதற்குரிய தன்னுடைய நாள் வந்ததும் சிற்சபைக்குச் சென்றபொழுது அவரைத் தடுத்து விட்டனர். ஆனால் சிற்றம்பலமுடையார் அவருக்கு அருளும் வண்ணம் பெட்டகத்தில் தன்னுடைய திருவடிவத்தைக் காட்டாது மறைத்தருளினார். பெட்டகத்தில் திருவடியைக் காணாது அந்தணர்கள் அச்சமுற்றபோது “நம்மைப் பூசையாற்றும் தகுதியுடையவன் உமாபதி ஆதலால் அவன்பால் அமர்ந்தோம்” என்ற அசரீரி கேட்டது. தவறை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்திடம் மன்னிப்புக் கேட்டு பூசைக்கு அழைத்தனர். உமாபதி சிவமும் பூசை நடத்தித் தன் திருமடம் மீண்டார்.
இந்நாளில் தில்லைத் திருவிழா தொடங்கியது. தொடக்க நாள் கொடியேற்றம். அந்தணர்கள் எவ்வளவு முயன்றும் கொடி ஏறவில்லை. அப்பொழுது “உமாபதி சிவம் வந்தால் கொடி ஏறும்” என்ற அசரீரி கேட்டது. அதனைக் கேட்ட அந்தணர்கள் உமாபதி சிவத்திடம் மன்னிப்பு வேண்டித் தில்லைக்கு அவரை அழைத்து வந்தனர். உமாபதி சிவம் கொடிமரத்திற்கு முன்பு நின்று நான்கு பாடல்களைப் பாடக் கொடி ஏறிற்று. இந்நான்கு பாடல்களைக் கொண்ட இச்சிறிய நூல் கொடிக்கவி எனப் போற்றப்படுகிறது. இந்நுலில் உள்ள பாடல்களைப் பார்ப்போம்.
பாடல் எண் 1.
“ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேஇடம் ஒன்றுமேலிடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள்அடராது உள்உயிருக்குயிராய்த்
தெளிக்கும் அறிவுதிகழ்ந்து உளதேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர்அருள் கூடும்படி கொடிகட்டின்னே.”
இதன் பொருள், ஞானமாகிய பேரொளிக்கும், ஆணவமாகிய இருளுக்கும் இடங்கொடுத்து நிற்பது உயிர் ஒன்றாகும். உயிரில் இறைவனுடைய அருளாம் பதிஞானம் மேலிட்டு நின்றால் இருளாகிய ஆணவம் ஒடுங்கி நிற்கும். ஆணவம் மேலிட்டு நின்றால் ஞானம் ஒளிந்து நிற்கும். என்றாலும் ஆணவம் ஞான ஒளியை வென்று திகழமுடியாது. உயிரானது இறைவனுடைய அருளால் ஆணவம் விலகிச் சிறிது அறிவு பெற்றாலும் ஆணவமலத்தின் சார்பினால் மும் மலத்தில் மூழ்கித்தான் கிடக்கும். எனவே, உயிர்களை மும்மலத்தில் இருந்து விடுவித்து இறையருள் கூடிடக் கொடி உயர்த்தினேன்.
பாடல் எண் 2.
“பொருளாம் பொருளேது போதேது கண்ணேது
இருளாம் வெளியே திரிவேது – அருளாளா
நீபுரவா வையமெலாம் நீயறியக் கட்டினேன்
கோபுர வாசல் கொடி.”
இப்பாடலின் பொருள், மெய்ப்பொருள் என்பது எது? அப்பொருளில் நின்று வெளிப்படுகின்ற ஒளிக்கற்றையாகிய சத்தி எது? கண்ணாகிய ஆன்மா எது? கண்ணை மறைத்து நிற்கும் இருள் எது? அந்த இருளை உடைய இரவு எது? நீ காக்கின்ற உலகம் எல்லாம் இவற்றை அறியும்படியாகக் கோபுர வாசலின் கண்ணே கொடியை ஏற்றினேன்.
பாடல் எண் 3.
“வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்
தாக்காது உணர்வரிய தன்மையனை – நோக்கிப்
பிறித்தறிவு தம்மில் பிரியாமை தானே
குறிக்கும் அருள்நல்கக் கொடி.”
இப்பாடலின் பொருள், வாக்கு மனங்களால் ஒரு காலத்திலும் எட்டமுடியாத அறிதற்கு அரிதாகிய தன்மை உடையவனை, அறிவுக்கு அறிவாய் இருக்கின்றவனை, அவ்இறைவனை பிரியாமல் இருப்பதான அருள்நிலையைப் பெற்றிட அவன் அருள் வழங்கிட வேண்டிக் கொடி ஏற்றினேன்.
பாடல் எண் 4.
“அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் – நெஞ்சழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமல் காட்டக் கொடி.”
இப்பாடலின் பொருள், ஐந்தெழுத்து (சிவாயநம), எட்டெழுத்து (ஓம் ஆம் ஔம் சிவாயநம), ஆறெழுத்து (ஓம் நமசிவாய), நான்கெழுத்து (ஓம் சிவாய), மென்மையான எழுத்து (வகரம் – ஐந்தெழுத்தில் சத்தியைக் குறிக்கும் வகரம்), உயர்ந்த பெரு எழுத்து (சிகரம் – ஐந்தெழுத்தில் சிவத்தைக் குறிக்கும் சிகரம்), ஆகியவற்றை நெஞ்சிலே பதியுமாறு செய்து, விடாது ஓதி வந்தால் பேசும் எழுத்தும் (வகரம்) பேசா எழுத்தும் (சிகரம்) உயிரில் எளிதாகக் கூடும். அவ்வாறு கூடுவதற்காகக் கொடி ஏற்றினேன்.