(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 8. திருவருட்பயன்.
திருவருட்பயன். உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். திருவருட்பயன் என்பது திருவருளின் பயனை விளக்கும் நூல் என விரியும். இந்நூல் குறள் வெண்பா அமைப்பில் 10 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 10 குறட்பாக்களைக் கொண்டது. முதல் 5 அதிகாரங்களும் திருவருளை கொடுக்கும் பதியின் தன்மையையும், திருவருளைப் பெறும் உயிரின் தன்மையையும், திருவருளால் நீக்கப்படும் மலத்தின் தன்மையையும், திருவருளின் தன்மையையும், குருவின் பெருமையையும் விளக்கும். மற்றய 5 அதிகாரங்களும் ஆன்மா அறிவைப் பெறும் முறைமையினையும், மலம் நீங்கும் முறைமையினையும், அதனால் கிடைக்கும் பேரானந்தத்தையும், ஐந்தெழுத்தின் பெருமையினையும், சீவன்முத்தரின் தன்மையையும் கூறுவனவாகும். இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்
“நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்.”
நல் அருளினை உடைய யானை முகத்தினையும் இளமையினையும் உடையவராகிய விநாயகக் கடவுளை வழிபடுவாராயின் வேத ஆகமங்களாகியவை கடினப்பட்டுக் கற்க வேண்டியதில்லை. எளிதாகப் பொருள் விளங்கும்.
பாடல் எண் 1. (பதிமுது நிலை)
“அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து.”
இறைவனின் இயல்பை விளக்கும் இப்பாடலின் பொருள், அ என்னும் ஒலியானது மற்ற எழுத்துக்களுக்கு முதலாய், அவற்றில் வேறறக் கலந்து இருப்பது போல, ஒப்பற்றவராகிய முதல்வர் அறிவுள்ள அறிவற்ற பொருள்கள் எல்லாவற்றிலும் வேறறக் கலந்து அறிவே வடிவாகி தொடக்கமும் முடிவும் இன்றி நிற்பர்.
பாடல் எண் 2.
“தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.”
சிவம் தான் சக்தி என்பதை விளக்கும் இப்பாடலின் பொருள், மனம் வாக்குக்கு எட்டாத மலசம்பந்தம் இல்லாத பேரானந்தமாகிய இறைவனது ஒப்பற்ற நிலையை ஆன்மாக்கள் அனைத்தும் பொருந்தும் வண்ணம் அருளுகிறவள் சக்தி. அச்சக்தியின் வேறாகாதவர் எமது இறைவராகிய சிவபெருமான்.
பாடல் எண் 4.
“ஆக்கி எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகா புகல்.”
இறைவன் உயிர்களுடன் சேர்ந்திருக்கும் தத்துவத்தை விளக்கும் இப்பாடலின் பொருள் உயிர்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து, காத்து, மறைத்து ஆன்மா ஆணவமலத்தோடு கேவலமாய் நிற்க, மற்ற மலங்களை ஒடுக்கி அருளைச் செய்கின்ற இறைவர் உயிர்களுக்கு எக்காலத்திலும் நீங்காத ஆதாரமாக நிற்பார்.
பாடல் எண் 5.
“அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.”
இப்பாடலின் பொருள், சிவம், சக்தி, நாதம், விந்து ஆகிய நான்கு அருவத்திருமேனிகளும், மகேசன், உருத்திரன், திருமால், பிரமன் ஆகிய நான்கு உருவத் திருமேனிகளும் உடையவன் இறைவன். அவ்இறைவன் அறிவு உடையவரது உள்ளத்தில் தோன்றும் ஞான வடிவத்தையும் உடையவன் ஆவான்.
பாடல் எண் 9.
“நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்”.
இறைவனை அடையும் வளியைக் கூறும் இப்பாடலின் பொருள் தம்மை அடைந்து வழிபடாதவர்க்குப் பேரின்பத்தைக் கொடாதவர், அன்போடு வழிபடுபவர்க்கு முத்தி இன்பத்தைக் கொடுப்பவர். என்றாலும் விருப்பு, வெறுப்பு அற்றவர். இன்பத்தினைச் செய்யும் சங்கரன் என்னும் பெயரை உடையவர் இறைவர்.
பாடல் எண் 12.
“திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயு முளர்.”
மூவகை ஆன்மாக்களைப் பற்றிக் கூறும் இப்பாடலின் பொருள், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலத்தை உடையவர் (சகலர்) என்றும், மாயை நீங்கி மற்ற இரு மலங்களை உடையவர் (பிரளயாகலர்) என்றும், ஆணவமலம் மட்டும் உடையவர் (விஞ்ஞானகலர்) என்றும் மூவகையாக ஆன்மாக்கள் உளர்.
பாடல் எண் 23.
“ஒருபொருளும் காட்டா திருளுருவம் காட்டும்
இருபொருளுங் காட்டா திது.”
ஆணவ மலத்தின் தன்மையைக் கூறும் இப்பாடலின் பொருள், இருட்டானது மற்றைய பொருள்களைக் காட்டாது. ஆயினும் தன்னுருவத்தைக் காட்டும். ஆணவ மலமானது பிற பொருளையும் காட்டாது. தன்னையும் காட்டாது.
பாடல் எண் 45.
“பார்வைஎன மாக்களைப் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார்.”
இறைவன் மானிடச் சட்டை தாங்கிக் குரு வடிவாவ வருவதைக் கூறும் இப்பாடலின் பொருள், அவ்வவ் இனத்திற்குப் பழக்கப்பட்ட விலங்குகளின் துணை கொண்டு விலங்குகளைப் பிடிப்பது போல மனித வடிவத்தில் குருவடிவைத் திருவருள் எடுப்பது மனிதரை நேர்நின்று வசப்படுத்தி ஆட்கொள்ளுவதற்காம். இதைப் பக்குவம் இல்லாதோர் அறியமாட்டார்கள்.
பாடல் எண் 81
“அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருநூல் தெரியப் புகின்.”
இப்பாடல் இறைத் தன்மையை விளக்கும் நூல்கள் அனைத்தும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளை விளக்குவதால் அம்முப்பொருளின் வடிவான ஐந்தெழுத்திற்குள் எல்லா நூல்களும் அடக்கம் எனக் கூறுகின்றது.