
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 6. உண்மை விளக்கம்
உண்மை விளக்கம். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்ட தேவநாயனாரின் மாணவரான திருவதிகை மனவாசகம் கடந்தார் அவர்களால் அருளப்பட்டது. இந்நூல் சைவசித்தாந்த சாத்திர நூல்களில் அரிச்சுவடியாகப் பேணப்படுகின்றது. இந்நூலுக்கு சைவசித்தாந்த சக்கிரகம், மெய்கண்ட சந்தான அனுபவத் திரட்டு என்ற பெயர்களும் உண்டு. இந்நூல் சைவசமயத்தவர் அறிய வேண்டிய உண்மைப் பொருட்களை இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது. இதனால் இந்நூலுக்கு உண்மை விளக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நூலில் பாடல்கள் வினா விடை அமைப்பில் உள்ளன. இந்நூல் 54 பாடல்களைக் கொண்டது.
“ஆறாறு தத்துவம்ஏது ஆணவம்ஏது அன்றேதான்
மாறா வினையேது மற்றிவற்றின் – வேறாகா
நான்ஏது நீஏது நாதன்நடம் அஞ்செழுத்துத்
தான்ஏது தேசிகனே சாற்று.”
இப்பாடலின் பொருள், 1.முப்பத்தாறு தத்துவம் யாது? 2.அநாதியிலிருந்து உயிரை விட்டு நீங்காத ஆணவமலம் யாது? 3.வினை யாது? 4.இம்மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டு நிற்கும் என்னுடைய இயல்பு யாது? 5.குருவாகிய உன் இயல்பு யாது? 6.இறைவன் இயற்றும் நடனத்தின் இயல்பு யாது? 7.ஐந்தெழுத்தின் இயல்பு யாது? 8.முத்தியின் இயல்பு யாது? என்பனவற்றிற்கு தேசிகனே விடை கூறு.
1 ஆம் கேள்விக்கு விடை 4 ஆவது பாடல் தொடங்கி 21 ஆவது பாடல்வரையும், 2 , 3 ஆம் கேள்விகளுக்கு விடை 22 ஆம் பாடலிலும், 4 ஆம் கேள்விக்கு விடை 24 ஆவது பாடல் தொடங்கி 26 ஆவது பாடல்வரையும், 5 ஆம் கேள்விக்கு விடை 27 ஆவது பாடல் தொடங்கி 29 ஆவது பாடல்வரையும், 6 ஆம் கேள்விக்கு விடை 31 ஆவது பாடல் தொடங்கி 38 ஆவது பாடல்வரையும், 7 ஆம் கேள்விக்கு விடை 40 ஆவது பாடல் தொடங்கி 44 ஆவது பாடல்வரையும், 8 ஆம் கேள்விக்கு விடை 48 ஆவது பாடல் தொடங்கி 52 ஆவது பாடல்வரையும் கூறப்பட்டுள்ளன.
36 தத்துவங்கள்:- 1. ஆன்மதத்துவம் ( பிரகிருதி மாயை ) 24. அவையாவன 1.ஐம்பூதங்கள் 5 ( 1.நிலம் , 2.நீர், 3.தீ, 4.காற்று, 5.ஆகாயம்.) 2.கன்மேந்திரியங்கள் 5 (1.வாய்-பேச்சு, 2.கை, 3.கால், 4.எருவாய், 5.கருவாய்.)3.ஞானேந்திரியங்கள் 5 (1.மெய், 2.வாய்-நாக்கு, 3.கண், 4.மூக்கு, 5.செவி.) 4.தன்மாத்திரைகள் 5 (1.சுவை, 2.ஒளி, 3.ஊறு, 4.ஓசை, 5.நாற்றம்.) 5.அந்தக்கரணங்கள் 4 (1.மனம், 2.புத்தி, 3.சித்தம், 4.அகங்காரம்.) 2. வித்தியாதத்துவம் ( அசுத்த மாயா தத்துவங்கள் ) 7. அவையாவன 1.காலம், 2.நியதி, 3.கலை, 4.வித்தை, 5.அராகம், 6.புருடன், 7.மாயை-ஒருபகுதி 3. சிவதத்துவம் ( சுத்த மாயா தத்துவங்கள் ) 5. அவையாவன 1.நாதம்-சிவம், 2.விந்து-சக்தி, 3.சதாக்கியம்-சதாசிவம், 4.ஈஸ்வரம், 5.சுத்தவித்தை.
இந்நூலின் சில பாடல்களைப் பார்ப்போம்.
பாடல் எண் 4.
“நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
ஏற்கும்அனல் முக்கோணம் எப்போதும் – ஆர்க்கும்
அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாய மாம்இவற்றால் உற்று.”
இப்பாடலின் பொருள், பூமியானது நான்கு கோணமாய் இருக்கும். நீரானது பாதிச் சந்திரனைப் போன்றதாய் இருக்கும். தீயானது மூன்று கோணமாய் இருக்கும். காற்றானது எக்காலமும் அறுகோணமாய் இருக்கும். ஆகாயம் வட்டமாக இருக்கும். ஆன்மா தங்கும் உடலானது இந்த ஐந்து பூதங்களிலிருந்து உண்டாகும்.
பாடல் எண் 7.
“பாராதி ஐந்திற்கும் பன்னும்அதி தெய்வங்கள்
ஆரார் அயனாதி ஐவராம் – ஓரோர்
தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார்.”
இப்பாடலின் பொருள், பூமி முதலாகச் சொல்லப்பட்ட ஐம்பூதங்களுக்கும் சிவாகமங்கள் சொல்லுகின்ற அதி தெய்வம் ஆவார் யார் என்றால், பிரமன், திருமால், உருத்திரர், மகேசுவரர், சதாசிவர் என்ற ஐந்து பேராம். அவர்களுக்குரிய தொழில்கள் தோற்றம், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களாம். அதனை அவர்கள் குற்றமறச் செய்வார்கள் என்பதை அறிக.
பாடல் எண் 10
“உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்தனக்குக்
கள்ளமிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் – மெள்ளவே
ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புலனே யாம்.”
இப்பாடலின் பொருள், உனக்கு உண்மை நிலையில் பஞ்சபூதங்களைப் பற்றிச் சொன்னோம். கள்ளமிகும் ஐம்புலன்களைச் சொல்லுமிடத்து ஓசை, பரிசம், உருவம், சுவை, மணம் என்பனவையே ஆசை தருகின்ற ஐம்புலன்களாகும்.
பாடல் எண் 31
“எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம என்னும் திருவெழுத்தஞ் சாலே
அபாயமற நின்றாடு வான்.”
இப்பாடலின் பொருள், நல்ல மாணவனே, யா என்னும் எழுத்தால் குறிக்கப் பெறுகின்ற உயிரிடத்தில் சிவபெருமான் ஆடுகின்ற நடனத்தை யாம் சொல்லக் கேட்பாயாக. சிட்டர் எனப்படும் சிவபெருமான் சிவாயநம என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி ஆடல்புரிவான் என்பதை அறிவாயாக.
பாடல் எண் 32
“ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியி லேநகரம் – கூடும்
மகரம் உகரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்.”
இப்பாடலின் பொருள், திருவடியிலே நகரமாகும். திருஉந்தியிலே மகாரமாகவும், திருத்தொளிலே சிகாரமாகவும், திருமுகத்திலே வகாரமாகவும், திருமுடியிலே யகாரமாகவும் கொண்டருளி இறைவன் நடனம் செய்வான் என்பதை அறிவாயாக.
பாடல் எண் 41
“சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும்
அவனெழுத் தஞ்சின் அடைவாம் – இவனின்று
நம்முதலா ஓதில்அருள் நாடாது நாடும்அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று.
இப்பாடலின் பொருள், பக்குவப்பட்ட உயிர்கள் நமசிவாய என உச்சரித்து வழிபட்டால் அருள் பொருந்தாது. சிவாயநமஎன உச்சரித்தால் அருள் பொருந்தும்.