(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 5. இருபா இருபஃது
இருபா இருபஃது கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவரில் (2 ஆவது) ஒருவரும், சகலாகம பண்டிதரும், மெய்கண்ட தேவநாயனாரின் மாணவருமான திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது. அருணந்தி சிவாச்சாரியார் மெய்கண்ட தேவநாயனாரால் சிவஞானம் கைவரப்பெற்று அவரால் அருணந்தி சிவாச்சாரியார் என்ற திருநாமம் பெற்றவர். அருணந்தி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட “சிவஞான சித்தியார்” இற்கு முன் அவரால் இந்நூல் பாடப் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நூலாசிரியர் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தன் ஞானாசிரியராகிய மெய்கண்ட தேவரிடம் வினாவாகக் கேட்டு அறிவதுபோல் பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்களிலுள்ள வினாக்களுக்கு நேரடியான விடை கூறாமல் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது. சில பாடல்கள் நீண்ட பாடல்களாகவும் அமைந்துள்ளன. இந்நூல் 10 வெண்பாக்களையும், 10 ஆசிரியப்பாக்களையும் கொண்டது. இந்நூலில் உள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.
“கண்ணுதலும் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் – வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.”
இப்பாடலில் சிவபெருமானே மானிடச்சட்டை தாங்கி மெய்கண்டதேவராகத் தனக்குக் குருவாக எழுந்தருளி அருள் பாலித்தார் என்று நூல் ஆசிரியர் குருவணக்கம் கூறுகின்றார்.
பாடல் எண் 2 (1– 5)
“கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் தானென
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ!
காரார் கிரகக் கலியாழ் வேனைநின்
பேரா யின்பத் திருத்திய பெரும!
வினவ லானா துடையேன் எனதுளம்”
இப்பாடலின் பொருள், உலகத்துப் புற இருளைப் போக்குகின்ற சூரியனைப் போல் அறியாமையாகிய அக இருளைப் போக்கி அருளுகின்ற திருவெண்ணெய் நல்லூரில் தோன்றி அருளிய மெய்கண்ட தேவே, அறியாமையாகிய சிறையிலே அகப்பட்டுத் துன்பப்படுகின்ற என்னை, நிலைபெற்ற உன்னுடைய பேரின்பத்தில் சேர்ந்திருக்குமாறு அருளிய பெருமானே, யான் சில ஐயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
பாடல் எண் 2 (6– 11)
“நீங்கா நிலைமை ஊங்கு முளையால்
அறிவின் மைமலம் பிறிவின் மையெனின்
ஓராலினை உணர்த்தும் விராய்நின் றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை யாகாய்
சுத்தன் அமலன் சோதி நாயகன்
முத்தன் பரம்பரன் எனும்பெயர் முடியா”
இப்பாடலின் பொருள், என்னை விட்டு நீங்கள் நீங்காமல் நிற்கும் முறைமை அநாதி காலந்தொட்டு நிகழ்கிறது என்றாலும் எனக்கு அறியாமை வருவதற்குக் காரணம் என்ன? அநாதி காலந்தொட்டு ஆணவமலம் உன்னைப் பற்றிக் கொண்டிருத்தலால் தான் என்று நீங்கள் பதில் கூறினால் தேவரீர் நீங்கள் என்னை விட்டு நீங்கித் தனி ஓர் இடத்தில் நிற்க, ஆணவமலம் என்னைப் பற்றிக் கொள்வதற்கு இடமளித்ததாக முடியுமே. அதற்கு நீங்கள் நான் உன்னை விட்டு நீங்கி ஒதுங்கி நிற்பதில்லை. உம்மோடு கூடியே நிற்கின்றோம் என்று கூறினால் அது பொருத்தமாக அமையவில்லையே. வியப்பாகவும் இருக்கிறதே. மேலும் உம்மைப் பொய்க்குப் (அஞ்ஞானத்திற்கு) பகைவன் என்று போற்றுவது பொருந்தாதது ஆகுமே. மலமில்லாதவர், சோதி வடிவானவர், முத்தன், துன்பங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றெல்லாம் கூறுகின்ற பெயர்களும் பொருந்தாதனவாய் முடியும் அன்றோ.
பாடல் எண் 2 (12– 17)
“வேறுநின் றுணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்
பேறுமின் றாகும் எமக்கெம் பெரும
இருநிலம் தீநீர் இயமானன் காலெனும்
பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதனில்
வேறோ உடனோ விளம்பல் வேண்டும்
சீறி அருளல் சிறுமை உடைத்தால்”
இப்பாடலின் பொருள், அருள்பாலிக்கும் பொழுது இயைந்து இருக்காமல் வேறாய் நின்றே அருளுவோம் என்று கூறினால் நீர் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கின்றீர் என்ற கருத்திற்கு இழுக்கு நேரும். மேலும் முத்திப்பேறும் எமக்கு இல்லாது போய்விடும். அத்துடன் இருநிலன், தீ, நீர், இயமானன், காற்று என்று தொடங்குகின்ற அப்பரடிகளின் திருத்தாண்டகம் கூறுகின்ற பெருமை இல்லாது போய்விடும். ஆதலால், என்னைப் பற்றி நிற்கும் அறியாமையைப் போக்கும் பொழுது தாங்கள் எனக்கு வேறாய் நின்று போக்குவீர்களா, உடனாய் நின்று போக்குவீர்களா? சினம் கொள்ளாது ஐயப்பாட்டினை நீக்கி அருள வேண்டுகிறேன்.
மேற்கூறியவாறு பாடல் 2 இல் 1 தொடக்கம் 30 வரையான பாடல்களில் உள்ள கேள்விகளுக்கு 31 இலிருந்து 34 வரை விடை கூறப்பட்டுள்ளது.
பாடல் எண் 2 (31– 34)
“காண்பார் யார்கொல் காட்டாக் காலெனும்
மாண்புரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞா னத்தின்
ஆட்பால் அவர்க்கருள் என்பதை அறியே.”
இப்பாடலின் பொருள், இதற்கு விடையாகத் திருநாவுக்கரசர் அருளிய “ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே” எனத்தொடங்கும் திருப்புகலூர் தனித்திருத்தாண்டகத்தையும் (இடையில் வரும் “காண்பார் யார்கொல் காட்டாக்கால்”) திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றில் புனல் வாதம் செய்த பொழுது பாண்டியன் கேட்கப் பாடியருளிய “ஆட்பால் அவர்க்கு அருளும்” எனத் தொடங்கும் திருக்கடைக்காப்பினையும் படித்து மெய்ப்பொருளை உணர்தல் வேண்டுமே. (இவ்விடை அருணந்தி சிவாச்சாரியாரின் வாய் மொழியாக இறைவன் தரும் கட்டளையாகும்)