
(நாகேந்திரம் கருணாநிதி)
2. ஆலயங்களில் பூசை சமஸ்கிருதத்தில் ஏன் நடத்தவேண்டும் தமிழில் நடத்தினால் என்ன ?
இறைவனே அருளாளர்களுக்கு தமிழ்மூலம் தன்னைப் பாடுமாறு கூறியதாக நாயன்மாரின் வரலாற்றிலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளன. சிவபெருமான் வேதத்திற்கு அதிபதியாகிய பிரம்மதேவனைத் திருமூலராக அவதரித்துத் தமிழ் மூலம் தன்னைப் பாடுமாறு பணித்ததாகப் புராணக்கதை கூறுகிறது. சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் திருமூலதேவநாயனார் புராணம் 23 ஆவது பாடலில்
“தண்ணிலவார் சடையார்தாம்
தந்த ஆகமப்பொருளை
மண்ணின் மிசைத் திருமூலர்
வாக்கினால் தமிழ் வகுப்பக் . . . . . “
அதாவது குளிர்ந்த நிலவணிந்த திருச்சடையை உடைய சிவபெருமான் தாம் அருளிய ஆகமப் பொருளை இந்நிலவுலகில்த் திருமூலர் வாக்கினால் தமிழால் சொல்லுதற்கு ஏற்ப என்பதாகும்.
இதையே திருமூலரும் திருமந்திரம் 81 ஆவது பாடலில்
“பின்னை நின்று என்னே . . . . . . .. . . எனத் தொடங்கி
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
இறைவன் என்னைத் தமிழ் ஆகமம் படைக்கப் படைத்துள்ளான் எனக் கூறியுள்ளார்.
சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் “பித்தா” எனத் தமிழில் அடி எடுத்துக் கொடுத்துத் தன்னைப் பாடுமாறு கூறிய வரலாறும்,
சேக்கிழார்பெருமானுக்கு “உலகெலாம்” என பெரியபுராணத்திற்கு அடி எடுத்துக் கொடுத்த வரலாறும் உள்ளது.
அருணகிரிநாதர் முத்தமிழால் வைதால்க் கூட முருகன் வாழவைப்பான் எனவும்
குமரகுருபரர் பிள்ளைத்தமிழில்
“பைந்தமிழ் பின் சென்ற பச்சைப்பசும் குன்றலே”
என இறைவன் தமிழுக்குப் பின்னால்ச் சென்றான் எனவும் பாடியுள்ளார்கள். இவ்வாறு பல அருளாளர்களால்த் தமிழில்ப் பாடிய பாடல்கள் 12 திருமுறைகளாகும். இவற்றைப் பொருளறிந்து, பண்ணுடன் பாடி நாம் இறைவனை வழிபடலாம். இதை மாணிக்கவாசகப்பெருமான் சிவபுராணத்தில்
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்” எனவும்,
திருநாவுக்கரசர்
“சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாட மறந்தறியேன்”
எனவும் பொருளையும், இசையையும் வற்புறுத்தியுள்ளார்கள். இவ்வாறே நாயன்மார்கள் பொருளறிந்து, மனமுருகிப், பண்ணுடன் பாடல்களைப் பாடியே பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள். வேதமந்திரங்களுக்கு அதன் உச்சரிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வாறே திருமுறைப் பாடல்களுக்கும் அவற்றின் உச்சரிப்பும், பண்ணும் முக்கியமாகும்.
இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் இரு கண்கள் போன்றவை. இவற்றில் நாம் பேதம் பாராமல் ஆலயப் பொது வளிபாட்டு முறைகள் காலம், காலமாக நடப்பது போல சமஸ்கிருதத்திலும், எமது சொந்த வளிபாடு எமது தாய் மொழியாகிய தமிழிலும் நடத்தலாம், ஆலயங்களில் சமஸ்கிருதம் தெரியாத அடியார்களின் நன்மை கருதி குருமார் ஆலய கிரியைகள் பற்றிய விளக்கங்களை கிரியை நடப்பதற்கு முன்போ, அல்லது பின்போ கூறலாம். தமிழர்களாகிய நாம் எமது சுயதேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வேறு மொழிகளைப் படிப்பது போல எமது சமய அறிவை வளர்ப்பதற்காக சமஸ்கிருதத்தைப் படிக்கலாம். திருமுறைகளை பொருளறிந்து பண்ணுடன் ஓதுவதற்கு ஒதுவார் மூர்த்திகளின் சேவையை நாம் பெற்றுக்கொள்ளலாம்.