(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
3. சிவஞான போதம்
சிவஞான போதம். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவர் நால்வரில் (1 முதலாவது) ஒருவரான பெண்ணாகடம் மெய்கண்ட தேவநாயனார் (மெய்கண்ட தேவர்) அவர்களால் அருளப்பட்டது. இவர் பரஞ்சோதி முனிவரால் ஞான உபதேசம் பெற்று, அவரால் மெய்கண்ட தேவர் என்ற திருநாமமும் இடப்பெற்று குழந்தைப் பருவத்திலேயே இறையருள் ஞானம் பெற்றவராவார். இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணி முடியாய் அதாவது முதல் நிலையில் விளங்கும் நூலாகும். இந்நூலுக்குப் பின் வந்த பல நூல்களுக்கு இந்நூல் அடிப்படைக் கருவூலமாக அமைந்தது. இந்நூல் தட்சணாமூர்த்தியின் திருக்கரத்தில் இருக்கும் பாக்கியம் பெற்ற நூலாகும். இந்நூல் பன்னிரெண்டு சூத்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு சூத்திரத்துடனும் அச்சூத்திரத்தில்க் கூறப்பட்ட விடையத்தை விரிவாகக் கூறுவதற்காக அதிகரணங்கள் கூறப்பட்டு, அதற்கு உதாரணங்களும் கூறப்பட்டுள்ளன.
“அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.”
இச்சூத்திரத்தின் பொருள், அவன், அவள், அது என்று சுட்டிக் கூறப்படுகின்ற உலகம் தோன்றல், இருத்தல், மறைதல் என்ற மூன்று தொழில்களைக் கொண்டமையால் ஒருவனால் தோற்றுவிக்கப் பெற்ற உள் பொருளே ஆகும். அவ்வுலகம் கன்ம மலத்தினால் தான் ஒடுங்குவதற்கு இடமாகிய கடவுளிடத்தினின்று ஆணவ மலத்தினால் மீண்டும் தோன்றும். ஆதலால் அந்தமாகிய அழித்தல்த் தொழிலைச் செய்கின்ற கடவுளே உலகிற்கு முதற்கடவுள் என்று அளவை நூல் உணர்ந்தோர் கூறுவர்.
மேற்படி முதலாவது சூத்திரம் மூன்று அதிகரணங்கள் மற்றும் ஐந்து உதாரணங்கள் மூலம் கூறுவதாவது
1.உள்பொருளாகிய உலகம் தோன்றி, நிலைத்து, ஒடுங்குவதால் அம்முத்தொழிலைச் செய்யக் கருத்தா ஒருவர் வேண்டும். 2.அக்கருத்தா சங்காரகாரணன் ஆவான். 3.அவனே முழுமுதற்கடவுள். 4.உலகம் இறை சத்தியிலிருந்து மாயையால். தோற்றுவிக்கப்படுகின்றது. 5.மாயை தானே தோன்றி ஒடுங்காது. அதனைத் தோற்றுவிப்பவர் பிரமனும், திருமாலும் அல்லாத சங்காரகாரணன் ஆகிய சிவனே ஆவான்.
இரண்டாம் சூத்திரம்.
“அவையே தானேயாய் இருவினையில்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.”
இச்சூத்திரத்தின் பொருள், இறைவன் உயிர்களோடு உயிரேயாய் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் உயிர்களினின்று வேறாயும், உயிருக்கு உயிராய தன்மையால் அவ்வுயிர்களோடு உடனாகியும், தனது சிற்சத்தியாகிய ஆணையால் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளால் உயிர்கள் இறப்பு, பிறப்புக்களைப் புரியும்படி செய்து, செய்கின்ற சிற்சத்தியினின்று நீக்கமின்றித் தொன்று தொட்டு நிற்பான்.
மேற்படி இரண்டாவது சூத்திரம் நான்கு அதிகரணங்கள் மற்றும் பத்து உதாரணங்கள் மூலம் கூறுவதாவது
இறைவன் உயிர்களோடு ஒன்றாகவும் வேறாகவும் உடனாகவும் நின்று உயிர்கள் செய்த வினைகளுக்கு ஏற்பத் தனது திருவருளாகிய சத்தியினால் பிறப்பு இறப்புக்களை ஊட்டுவான் என்றும், சத்தியோடு பிரிவின்றி எல்லாப் பொருள்களிலும் சகல வியாபியாய் இருப்பான்.
மூன்றாம் சூத்திரம்.
“உளதுஇலது என்றலின், எனதுடல் என்றலின்,
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்
உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்,
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.”
இச்சூத்திரம் பசு உண்மையாகிய உயிர் உள்ளது என்பதை விளக்குவதாகும். இச்சூத்திரத்தில் சூனிய ஆன்மவாதி, தேக ஆன்மவாதி, இந்திரிய ஆன்மவாதி, சூக்கும தேக ஆன்மவாதி, பிராண ஆன்மவாதி, பிரம்ம ஆன்மவாதி, சமூக ஆன்மவாதி என்னும் எழுவரை மறுத்து உடலுக்கு வேறான உயிரானது உடலில் உள்ளது என்பதை நிலை நாட்டுகிறது.
மேற்படி மூன்றாவது சூத்திரம் ஏழு அதிகரணங்கள் மற்றும் ஏழு உதாரணங்கள் மூலம் கூறுவதாவது
உயிர் பற்றிய ஏழு மதத்தாரின் கூற்றுக்களை மறுத்து ஆன்மா என்பது தனி ஒன்றாகும். அது மாயையின் காரியமாகிய உடம்பில் உள்ளது என்னும் உயிரின் உண்மையைப் புலப்படுத்துகின்றது.
நான்காம் சூத்திரம். இலக்கண இயல்
“அந்தக்கரணம் அவற்றின் ஒன்றுஅன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகசமலத்து உணராது
அமைச்சரசு ஏய்ப்பநின்ற அஞ்சவத் தைத்தே.”
இச்சூத்திரத்தின் பொருள், உயிரானது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு அகக் கருவிகளுள் ஒன்று ஆகாது. இருப்பினும் அவ்வுயிர் ஆணவமலத்தினால் தனக்கென ஓர் அறிவு இல்லாமையினால், அமைச்சரோடு கூடிய அரசனைப் போல அந்த அந்தக்கரணங்களைக் கூடி அறிகிறது. மேலும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் என்னும் ஐந்து அவத்தைகளை உடையதாகும்.
மேற்படி நான்காவது சூத்திரம் மூன்று அதிகரணங்கள் மற்றும் ஏழு உதாரணங்கள் மூலம் கூறுவதாவது
உயிர் அந்தக்கரணங்களில் ஒன்றன்று. ஆணவமலத்தோடு கூடியதால் அறிவு மறைக்கப்பட்ட உயிர் அது நீங்குதற் பொருட்டு அந்தக்கரணங்களைக் கூடுகிறது. அவ்வாறு கூடுகின்ற பொழுது ஐந்தவத்தைகளைப் பெறுகின்றது. இதுவே உயிருக்குரிய பொது இலக்கணமாகும். அந்தக்கரணங்கள் இந்திரியங்களை நோக்க அறிவுடையதாகவும், உயிரை நோக்க அறிவற்றதாகவும் விளங்கும்.
ஐந்தாம் சூத்திரம்
“விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறிந் தறியா ஆங்கவை போலத்
தாம்தம் உணர்வின் தமிஅருள்
காந்தம் கண்ட பசாசத் தவையே.”
இச்சூத்திரத்தின் பொருள், உயிரால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன தத்தமக்குரிய விஷயங்களை அளவிட்டு அறியும். ஆனால் அறியும் தன்மையும் தம்மை அறிய வைக்கின்ற உயிரையும் அறியமாட்டாது. அந்த ஐம்பொறிகளைப் போல உயிர்கள் தமது உணர்விற்கு முதன்மையாக அமைந்த இறைவனின் திரோதான சத்தியால் தத்தம் வினைப் பயன்களை அறிந்து நுகர்ந்தும் தம்மையும் தம்மைச் செலுத்துகின்ற திருவருளையும் அறியமாட்டாது. காந்தத்தைக் கண்டு எதிர்ப்பட்ட இரும்பு போல இறைவனின் முன்னிலையில் உயிர் தொழிற்படும்.