(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் -
2. திருக்களிற்றுப் படியார்
சைவ சித்தாந்த சாத்திரத்தில் இரண்டாவது நூல் திருக்களிற்றுப் படியார். இந்நூல் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அவர்களால் அருளப்பட்டது. இவர் திருவியலூர் உய்யவந்த தேவநாயநாரின் மாணவராவார். இந்நூல் திருவுந்தியாருக்கு விளக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் திருவுந்தியார் எழுதப்பட்டு 50 ஆண்டுகளின் பின் எழுதப்பட்டது. இன் நூலின் அரங்கேற்றத்தின் போது நூலைத் தில்லை நடராசப்பெருமானின் பொன்னம்பலத்தின் முன்னிருக்கும் பஞ்சாச்சரப் படிக்கட்டில் (ஐந்துபடிகள்) வைத்தனர். அப்போது படிகளின் இருபுறமும் கல்லால் வடிக்கப்பெற்றிருந்த யானைகளில் ஒன்று உயிர்பெற்று நூலேடுகளை எடுத்து நடராசப்பெருமானின் திருவடிகளில் வைத்தது. இதனால் இந்நூலுக்குத் திருக்களிற்றுப் படியார் எனப் பெயரிடப்பட்டது. திருவுந்தியாரையும் திருக்களிற்றுப் படியாரையும் இரட்டைச் சாத்திரங்கள் எனக் கூறுவதுண்டு. இந்நூலில் உள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.
“அம்மையப்ப ரேஉலகுக்கு அம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.”
சிவபெருமான் எல்லாவற்றிற்கும் முதலாவார் என்பதும், அகத்திலும் புறத்திலும் கலந்திருப்பார் என்பதும், சக்தி வழியே அருள் தருவார் என்பதும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பொருள்களுக்கு அப்பாற்பட்டவர், பொருளோடு கலந்திருந்தாலும் அவற்றில் கட்டுண்ணாதவர் எனவும் கூறிச் சிவபெருமானின் இலக்கணம் தரப்பட்டுள்ளது.
பாடல் எண் 2.
“தம்மில்தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் – தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.”
கடவுள் தம்மிடம் யார் ஈடுபடுகிறார்களோ அவர்களிடமே தாமும் ஈடுபாடு கொள்வார். அவர் ஈடுபடுவதை அந்த உயிர் உணரும்பொழுது அதனில் நிலையாக நிற்பார். நின்று மும்மலத்தில் ஆணவம் தவிர பிற இரு மலங்களை நீக்கி ஆணவ முனைப்பையும் ஒடுக்கி அவ்வுயிருடன் தலையான ஈடுபாடு கொள்வார் என்பதை இப்பாடல் கூறுகிறது.
பாடல் எண் 4.
“அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம்
ஆணவ மூலமலம் அகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து.”
ஆன்மாவோடு கலந்திருக்கின்ற, என்றும் அழியாத் தன்மை உடைய ஆணவமலத்தின் வலிகெடச் செய்வது ஆசிரியரின் ஞான உரையாகும். ஞானாசிரியர் வேறு யாருமல்ல இறைவனே ஆவார் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
பாடல் 5.
“ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
யோகங்கள் எங்கே உணர்வெங்கே – பாகத்து
அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு.”
ஆகமங்கள் இருபத்தெட்டினையும் தந்தவன் இறைவன். ஆறுவகைச் சமயங்களின் உட்பொருளை எல்லாம் தோற்றியவன் இறைவன். யோகியாய்த் தான் வீற்றிருந்து யோகநிலையைக் காட்டியவன் இறைவன். போகங்களைத் தந்து ஆன்மாக்களை உணரவைத்தவன் இறைவன். இவற்றை எல்லாம் ஞானாசிரியனாக வந்து அவனே உணர்த்தவில்லை என்றால் யாராலும் அறியமுடியாது என்று இப்பாடலில் ஞானாசிரியரின் பெருமை கூறப்பட்டுள்ளது.
பாடல் எண் 9.
“அன்றுமுதல் ஆறேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதிலை – இன்றிதனை
எவ்வாறு இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன்
அவ்வாறு இருந்தது அது.”
சிவானுபவம் என்பது அனுபவிக்க முடியுமே அன்றி எவ்வாறு இருந்ததென்று அளவிட்டுக் கூறமுடியாததாகும். (கண்டவர் விண்டதில்லை) அதற்கு ஒப்புமை எதுவும் கூற இயலாது என்னும் கருத்தை இப்பாடல் கூறுகின்றது.
பாடல் எண் 10.
“ஒன்றும் குறியே குறியாத லால்அதனுக்கு
ஒன்றுங்குறி ஒன்று இல்லாமையினால் – ஒன்றோடு
உவமிக்க லாவதும் தானில்லை ஒவ்வாத்
தவமிக்கா ரேஇதற்குச் சான்று.”
இறைவனை அறிய வேண்டுமானால் ஐம்புலன் அடக்கி, அன்புடையவராய் இறைவனையே நினைத்து தவம் செய்வதன் மூலமே அறியலாம் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
பாடல் எண் 12.
“பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனை அன்றேவிக் கராம்கொண்ட – பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம்
கரணம்போல் அல்லாமை காண்.”
பாலை நிலத்தை நெய்தல் நிலமாக மாறும்படி பாடிய (திருஞானசம்பந்தர்) தன்மையும், பாம்பின் விஷம் தீரும்படி பாடிய (திருநாவுக்கரசர்) தன்மையும், முதலை உண்ட பிள்ளையை மீட்ட (சுந்தரர்) தன்மையையும் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் மானிட உருவத்தை உடையவர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் இறைவனின் திருவருள் பெற்றதால் இறை செயலால் நிகழ்ந்தவை ஆகும் என்பதை இப்பாடல் கூறுகின்றது.
பாடல் எண் 15.
“நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய – வல்லதனால்
ஆறேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன்.”
இறைவனைக் காண்பதற்கு மூன்று படிநிலைகள் (சரியை, கிரியை, யோகம்) இப்பாடலில் கூறப் பெற்றுள்ளன.