(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 1. திருவுந்தியார்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கையும் தனித்தனியாகப் பார்ப்போமானால் முதலாவதாக திருவுந்தியார். இந்நூல் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அவர்களால் அருளப்பட்ட முதலாவது சைவ சித்தாந்த சாத்திர நூலாகும். ஆசிரியர் இந்நூலை தம்மிடம் உபதேசம் பெற்ற ஆளுடைய தேவர் என்பவருக்குச் சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்க எழுதியதாகக் கூறுவர். இந்நூல் திருவாசகத்தில் இடம்பெற்ற திருவுந்தியாரைப் போலவே பாடப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் விளையாட்டு அமைப்பில் கடவுள் கொள்கையை வரையறுத்துக் கூறுகின்றது. இந்நூல் நாற்பத்தைந்து பாடல்களைக் கொண்டது. இந்நூல் ஆன்மாக்களை உலகப் பற்றிலிருந்து கடைத்தேற்றும் திருவருள் நூலாகும். அதாவது வீட்டு நெறியின் சிறப்பினையும், அதனை அடைந்தோர் தன்மையினையும் சிறப்புறக் கூறுகின்றது. உரை ஆசிரியர் இந்நூலை ஞானவெற்றியைத் தரும் நூல் எனக் கூறியுள்ளார். பாடல்கள் இல.1 முதல் 6 வரை உபதேசமாகவும், 7 முதல் 11 வரை சாதனம் பற்றியும்,12 முதல் 16 வரை மீதானம் என்பதன் விளக்கத்தையும் கூறுகின்றது. இந்நூலிலுள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.
“அகளமாய் யாரும் அறிவுஅரிது அப்பொருள்
சகளமாய் வந்தது என்று உந்தீபற
தானாகத் தந்தது என்று உந்தீபற.”
இறைவன் சிவம் என்னும் நாமம் தனக்கே கொண்டு அருவமாக, அருவுருவமாக, உருவமாக (சொற்பதம் கடந்த பொருள்) விளங்குபவன் ஆவான். உருவமற்ற அத்தகைய இறைவன் (உயிர்களின் மேல் உள்ள கருணையினால்) உயிர்களுக்கு அருள் வழங்கும் பொருட்டு உரிய காலத்தில் ஆச்சாரிய உருவம் தாங்கி தானாகவே வந்தருள்வான். அதனை உணர்ந்து கொள்ளல் வேண்டும் என்பது இப்பாடலின் கருத்தாகும். அதாவது தந்தருள வந்தருளும் தெய்வம்என்னும் தத்துவம் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.
பாடல் எண் 2.
“பழக்கம் தவிரப் பழகுவது அன்றி
உழப்புவது என்பெண்ணே உந்தீபற
ஒருபொரு ளாலே என்று உந்தீபற.”
உலகப் பற்றிலிருந்து விடுபடுவதற்கும் இறைவன் திருவருளைப் பெறுவதற்கும் பிறந்த பிறவியில் சரியை, கிரியை, யோகப் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்பது இப்பாடலின் கருத்தாகும். அதாவது பழக்கத்தை மாற்ற ஒருபொருள் தேவை என்னும் தத்துவம் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.
பாடல் எண் 3.
“கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர்
பிண்டத்தில் வாரார் என்று உந்தீபற
பிறப்பு இறப்பில்லை என்று உந்தீபற.”
பிராரத்த வினையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பிறப்பில் இறைவனின் திருவருளாம் ஆசாரிய வடிவத்தைக் கண்டவர்களுக்கு எதிர்வரும் ஆகாமிய வினை இல்லை. அதனால் அவர்களுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்பது இப்பாடலின் கருத்தாகும். குருவழித் திருவருள் பிறப்பறுக்கும் என்னும் தத்துவம் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.
பாடல் எண் 7.
“உள்ளம் உருகில் உடனாவர் அல்லது
தெள்ள அரியர் என்று உந்தீபற
சிற்பரச் செல்வர் என்று உந்தீபற.”
இறைவனுடைய திருவருளை எண்ணி எண்ணி உள்ளம் உருகுகின்றவர்களே இறைவனுடைய திருவருளை அறிய முடியும். (காதலால் கசிந்து கண்ணீர் மல்கி என்பது தேவாரம்) உள்ளம் உருகி அறிகின்ற பொழுது சிவம் வெளிப்பட்டு பதிஞானத்தைத் தருவார் என்பது இப்பாடலின் கருத்தாகும். பதிஞானம் பிறக்க வழியை இப்பாடல் கூறுகின்றது.
பாடல் எண் 8.
“ஆதாரத் தாலே நிராதாரத்தே சென்று
மீதானத் தேசெல உந்தீபற
விமலற்கு இடமது என்று உந்தீபற.”
உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, சகஸ்ராகரம்) அவ்விடங்களுக்குரிய தெய்வங்களைத் (விநாயகர், பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன்) தியானித்து நிறைவில் மீதானம் என்று சொல்லப்படுகின்ற இறைவனின் திரு இடத்திற்கு மனமானது சென்றால் இறைவனின் திருவருளோடு ஒன்றலாம் என்பது இப்பாடலின் கருத்தாகும். இறைவன் உடலில் இருக்கும் இடத்தை அடைய வழியை இப்பாடல் கூறுகின்றது.
பாடல் எண் 9.
“ஆக்கில் அங்கேஉண்டாய் அல்லதங்கு இல்லையாய்ப்
பார்க்கில் பரமது அன்று உந்தீபற
பாவனைக்கு எய்தாது என்று உந்தீபற.”
ஆக்ஞாசக்கரத்தில் நம்பிக்கையுடன் பார்த்தால் ஆன்மாவிற்கு இறைவனுடன் கூடிநிற்பதாகத் தோன்றும். நம்பிக்கை இல்லையேல் அங்கு இல்லாதவனாய் இருப்பான் யோகத்தைக் கடந்து பதிஞானத்தால் அறியப்படும் (சரியை, கிரியை, யோகம் இறைவனை அடைவதற்குரிய படிநிலைகளே) என்பது இப்பாடலின் கருத்தாகும். நம்பிக்கையே இறைவனைக் காணும் வழி என்பதை இப்பாடல் கூறுகிறது.
பாடல் எண் 10.
“அஞ்சே அஞ்சாக அறிவே அறிவாகத்
துஞ்சாது உணர்ந்து இருந்து உந்தீபற
துய்ய பொருள் இதுவென்று உந்தீபற.”
ஐந்தெழுத்துக்கள் ஐந்து பொருள்களைக் குறிக்கும் என்று கொண்டு நாள்தோறும் ஓதவேண்டும். அவ்வாறு ஓதினால் அறிவானது மயங்காது. தெளிந்த அறிவால் இறைவனது திருவருளைத் தூய்மையான வடிவு என்று உணரலாம் என்பது இப்பாடலின் கருத்தாகும். திருவைந்தெழுத்தே இறைவனை உணர வழி என்பதை இப்பாடல் கூறுகிறது.
பாடல் எண் 17.
“திருச்சிலம்பு ஓசை ஒலிவழியே சென்று
நிருத்தனைக் கும்பிடு என்று உந்தீபற
நேர்பட அங்கே நின்று உந்தீபற.”
இறைவனின் திருவருளாலேயே இறைவனைக் காணவேண்டும். புற உணர்வின்றி அக உணர்வோடு நேர்நின்று காணவேண்டும். என்பது இப்பாடலின் கருத்தாகும். நடராஜர் திருநடனத்தை உணர்த்தும் இடம் மீதானம் என இப்பாடல் கூறுகிறது.