(நாகேந்திரம் கருணாநிதி)
3. பாசம் (மலம், தளை)
கன்மம்
கன்மம் இரு வகைப்படும். 1. மூல கன்மம். இது ஆன்மா உடல் எடுப்பதற்கு முன்பு ஆன்மாவுடன் இருப்பது. இதை சஞ்சித வினை (தொல் வினை) எனக் கூறப்படும். ஆன்மா உடல் எடுக்கும் போது இறைவனால் இதில் ஒரு பகுதியை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்காக வழங்கும் போது பிராரத்த வினை (ஊழ் வினை) எனக் கூறப்படும். இதையே நாம் விதி என்கிறோம்.
ஆன்மா பிறவி எடுத்த பின்பு செய்யும் நல் வினை (புண்ணியம்), தீ வினை (பாவம்) ஆகிய இரண்டுமாகும். இதில் ஒரு பகுதியை இறைவன் ஆணைப்படி ஆன்மா அப்பிறப்பில் அனுபவிக்கும். மிகுதி (ஆகாமியம்) அடுத்த பிறவியில் அனுபவிப்பதற்காகச் சஞ்சித வினையுடன் சேர்க்கப்படும். இதை
சிவஞான சித்தியார் சுபக்கம் பாடல் எண் 102 இல்
“மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி
ஞாலத்து வருமா போல நாம் செய்யும் வினைகள் எல்லாம்
ஏலத்தான் பலமா செய்யும் இதம் அகிதங்கட்கு எல்லாம்
மூலத்தது ஆகி என்றும் வந்திடும் முறைமை யோடே.”
விதைத்த விதையானது விளைந்து பின்னர் உணவாகவும், வித்தாகவும் உலகத்தில் பயன்படுவது போல, நாம் செய்யும் வினைகள் எல்லாம் புண்ணிய பாவங்களாக விளையும். விளைந்தவை இன்ப துன்பப் பயனைத் தரும். இன்ப துன்பங்களை அனுபவிக்கும் பொழுது செய்யப்படும் காரியங்கள் மேலைக்கு நல்வினை தீவினைகளுக்குக் காரணமாய் அமையும். இது எக்காலத்திலும் முறை பிறழாது நம்மை வந்து பொருந்தும்.
சங்கற்ப நிராகரணம் 19 சைவவாதி சங்கற்பம் பாடல் எண் 5 இல் இருந்து 10 வரை
“இருவினை நுகர்வில் வருவினில் செய்து
மாறிப் பிறந்து வருநெடுங் காலத்து
இருள்மல பாகமும் சத்திநி பாதமும்
மருவுழி அருளுரு மன்னவன் அணைந்து
செல்கதி ஆய்ந்து பல்பணிப் படுத்திக்
கருவியும் மலமும் பிரிவுறப் பிரியா.”
இறைவனால் கலை முதலாகச் சொல்லப்பட்ட 31 கருவிகளோடு கூடிய ஆன்மா சகலத்தில் பிராரர்த்த கன்மத்தால் புண்ணிய பாவங்களை அனுபவித்து ஆகாமிய வினையை ஏற்றி விடும். இவ்வாறு இருவினை நுகர்வால் பிறந்து இறந்து வரும். இவ்வாறு வருகையில் சிவ புண்ணியத்தினால் மலபரிபாகமும், சத்திநிபாதமும் ஏற்படும். இதுவே பெத்த நிலையாகும்.
மேற்கூறிய நல்வினை என்பது உயிர்களுக்கு 1.மனம், 2.வாக்கு, 3.காயத்தினால் நன்மை செய்வதாகும். தீவினைஎன்பது இவ்வாறு நன்மை செய்யாது தீமை செய்வதாகும். மனத்தால்ச் செய்யும் நல்வினைகளாவன 1.இரக்கமுடமை, 2.பொறுமை, 3.பிறர் பொருள் விரும்பாமை, 4.செய்நன்றி மறவாமை, 5.வஞ்சகமின்மை, 6.நடுநிலை நிற்றல், 7.மனிதாபிமானம், 8.பொறாமையின்மை, 9.பேராசை இன்மை, 10.பிறர் துயர் கண்டு இரக்கப்படல், 11.பிறன்மனை விழையாமை என்பனவாகும். வாக்கினால்ச் செய்யும் நல்வினைகளாவன 1.புறம்கூறாமை, 2.உண்மை பேசுதல், 3.இனியன சொல்லுதல், 4.கடும் சொல் விலக்கல், 5.திருமுறைகளையும், சைவ சித்தாந்த சாத்திரங்களையும் ஓதுதல், 6.அறவழிகளைப் போதித்தல் என்பனவாகும். காயத்தினால்ச் செய்யும் நல்வினைகளாவன 1.பகுத்து உண்ணல், 2.தியானம் செய்தல், 3.நந்தவனம், சோலைகளை உண்டாக்குதல், 4.கிணறு, குளங்கள் தோண்டுதல், 5.திருக்கோயில்களில்த் துப்பரவுப் பணி செய்தல், 6.திருமுறைப் பாடசாலைகளை அமைத்தல், 7. திருமுறைகளையும், சைவ சித்தாந்த சாத்திரங்களையும் ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல் என்பனவாகும்.
மாயை
சைவ சித்தாந்தம் எல்லாச் சடப்பொருள்களின் ஆற்றல்களும் ஒருங்கிணைந்து திரண்டு ஓர் ஆற்றல் மயமாக நிற்பதை மாயை எனவும், இதிலிருந்தே உலகிலுள்ள சடப்பொருட்கள் அனைத்தும் தோன்றியது எனவும் கூறுகிறது. இதையே இப்போ விஞ்ஞான உலகமும் கண்டுபிடித்துக் கூறுகின்றது. சடத்தில் இருந்துதான் சடம் தோன்றும். கடவுள் பேரறிவுடைய பொருள் அதனால் அறிவற்ற மாயை அவரிடமிருந்து தோன்ற முடியாது. எனவே மாயையும் கடவுளைப் போல யாராலும் படைக்கப்படாத அனாதிப் பொருள் எனச் சைவ சித்தாந்தம் கூறுகிறது. மாயை ஆணவமலத்தோடு கூடியுள்ள உயிருக்கு மாயா காரியங்களோடு கூடும் போது விபரீத உணர்வு ஏற்படுவதால் மலமாகவும் நின்று மயக்கம் தருவதாகவும் உள்ளது. மாயையின் இயல்பைப் பற்றி
சிவஞானசித்தியார் சுபபக்கம் பாடல் எண் 143 இல்
“நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத்திற்கோர்
வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமலனுக்கோர்
சத்தியாய் புவன போகம் தனு கரணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யும் அன்றே.”
மாயை எனப்படும் அசுத்த மாயையானது நித்தமாய், உருவமற்றதாய், ஒன்றாய், உலகம் உண்டாவதற்கு வித்தாய், சடமாய், எவ்விடத்தும் வியாபித்து இருப்பதாய், இறைவனுக்கு ஓர் சத்தியாய், புவனம், போகம், தனு, கரணமுமாக, விரிந்ததோர் மலமாய், விபரீத உணர்வை உண்டாக்குவதாய் விளங்கும்.
மாயை என்பது மாயா என்னும் சொல்லின் திரிபு. மா – மாய்வது, ஒடுங்குவது. ஆ – தோன்றுவது. மாயை மூன்று வகைப்படும் 1.சுத்த மாயை இதை ஊத்துவ மாயை, மகா மாயை, குடிலை, விந்து எனவும் கூறுவர். 2.அசுத்த மாயைஇதை ஆதோ மாயை, மோகினி, மாயை எனவும் கூறுவர். 3.பிரகிருதி மாயை இதை மான், அவ்யத்தம் எனவும் கூறுவர். சுத்த மாயையில் இருந்து தோன்றும் பிரபஞ்சங்களில் சிவதத்துவங்கள் ஐந்து. அவையாவன 1.சிவம் (நாதம்), 2.சத்தி (விந்து), 3.சதாசிவம் (சதாக்கியம்), 4.மகேஸ்வரன் (ஈசுரம்), 5.சுத்தவித்தை. சுத்த மாயையில் இருந்து தோன்றும்வாக்குகள் நான்கு. அவையாவன 1.சூக்குமை, 2.பைசந்தி, 3.மத்திமை, 4.வைகரி. அசுத்தமாயையில் இருந்து 1.காலம், 2.நியதி, 3.கலை, 4.வித்தை, 5.அராகம், 6.புருடன், 7.மாயை என்பன தோற்றுவிக்கப்படுகிறது. பிரகிருதி மாயையில் இருந்து தோன்றுவன ஆன்மதத்துவங்கள் 24 ஆகும் அவையாவன 1.அந்தக்கரணங்கள் நான்கு (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்), 2.ஞானேந்திரியங்கள் ஐந்து (மெய், நாக்கு, மூக்கு, கண், செவி), 3.கன்மேந்திரியங்கள் ஐந்து (கை, கால், வாய், எருவாய், கருவாய்), 4.தன்மாத்திரைகள் ஐந்து (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்), 5.பஞ்சபூதங்கள் ஐந்து (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்).
இவற்றை திருவருட் பயன் பாடல் எண் 52, 30 இலும், சிவஞானசித்தியார் சுபபக்கம் பாடல் எண் 38, 44 இலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.