![Picture](/uploads/7/3/7/4/7374965/1742761.jpg?250)
(நாகேந்திரம் கருணாநிதி)
3. பாசம் (மலம், தளை)
ஆணவ மலம்
உயிர்களுக்கு அறியாமையைச் செய்யும், யராலும் படைக்கப்படாத ஒரு பொருள் ஆணவ மலம் எனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. இவ்வுண்மையை
இருபா இருபஹது பாடல் எண் 4 (25) இல்
“ . . . . . . . . .எம்மைவந்து அணையத்
தானோ மாட்டாது யானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு” எனக் கூறுகிறது.
உண்மை விளக்கம் பாடல் எண் 22 இல்
ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலமிரண்டும் வாசொல்லக் - கூறில்
அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம்
குறியா வினையென்று கொள்.”
ஆணவ மலம் அனாதியே. ஆன்மா பிறப்பிற்கு உட்படாத கேவல நிலையிலும், பிறப்பிற்கு உட்பட்டு பல பிறவிகள் எடுக்கும் சகல நிலையிலும் உயிரின் அறிவை மறைக்கிறது. ஆணவ மலம் தன் ஆற்றலால் ஆன்மாவை நிலை இல்லாப் பொருளை நிலையான பொருள் என்றும், துன்பம் தரும் பொருளை இன்பம் தரும் பொருள் என்றும், தகுதி இல்லாத தன்னைத் தகுதி உடையவன் என்றும், உலக போகங்களை நுகரும் போது தனது சொந்த முயற்சியால் இவற்றைப் பெற்றேன் என்றும், எனக்கு மேல் எவரும் இல்லை எனவும், நானே இவற்றை அனுபவிக்கப் பிறந்தேன் எனவும் செயல்பட வைப்பதுடன், நான், எனது என்ற அகங்காரங்களை உண்டாக்குகிறது.
ஆணவ மலத்திற்கு எட்டுக் குணங்கள் உள்ளன. அவையாவன 1.விகற்பம் (தன்னைவிடப் பிறர் ஒவ்வாரெனல்) 2.கற்பம் (பிடித்ததைப் பிடித்திருத்தல்) 3.குரோதம் (கோபம் கொண்டு நினைத்தல்) 4.மோகம் (ஒன்றுக்கு ஆசைப்படுதல்) 5.கொலை (உயிர்களைக் கொல்லுதல்) 6.அஞர் (சந்தமும் துக்கப்படுதல்) 7.மதம் (அகங்காரம் மேலிடுதல்) 8.நகை (சிரித்தல்). இக்குணங்களால் பல இச்சைகள் உண்டாகும். இச்சைகளால் வினைகள் நிகழும். ஆணவம் கன்மத்திற்கு வித்து என்பர்.
ஆணவம் தன்னையும் காட்டாமல், தான் மறைத்த ஆன்மாவையும் காட்டாமல் நிற்பதை திருவருட் பயன் பாடல் எண் 23 இல்
“ஒருபொருளும் காட்டா திருளுருவங் காட்டும்
இருபொருளுங் காட்டா திது.”
இருட்டானது மற்றைய பொருளைக் காட்டாது ஆயினும் இருளாகிய தன்னுருவத்தைக் காட்டும். ஆணவ மலமானது பிற பொருளையும் காட்டாது. தன்னையும் மறைத்துக் கொண்டு நிற்கும்.
திருவருட் பயன் பாடல் எண் 24 இல்
“அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி
இன்றளவும் நின்ற திருள்.”
அநாதி காலந்தொட்டு உயிரோடு உள்ளதாய் அவ்வுயிரோடு கலந்திருக்கின்ற சிவம் நிற்க அந்தச் சிவத்தைச் சாராது உயிரை மட்டும் சார்ந்து ஆணவ மலமானது இன்றுவரை நீங்காது நிற்கிறது.
திருவருட் பயன் பாடல் எண் 25 இல்
“பலரைப் புணர்ந்துமிருட் பாவைக்குண் டென்றுங்
கணவர்க்குத் தோன்றாத கற்பு.”
எண்ணில்லாத ஆன்மாக்களைப் பொருந்திக் கலந்து நிற்கும் ஆணவமாகிய பெண்ணிற்குத் தனது நாயகனாகிய ஆன்மாவிற்கு எக்காலத்தும் தன்னைக் காட்டாது நிற்கின்ற முறைமையாகிய கற்பு உண்டு.
திருவருட் பயன் பாடல் எண் 26 இல்
“பன்மொழிக ளென்றுணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.”
பல சொற்கள் சொல்லுவதனால் என்ன பயன் ? உயிரானது பொருள்களின் உண்மை நிலையை அறிய முடியாமல் நிற்கும் மயக்கத்தை ஆணவம் தந்தது எனலாம்.
திருவருட் பயன் பாடல் எண் 27 இல்
“இருளின்றேற் துன்பென் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.”
ஆணவம் என்ற ஒன்று இல்லை என்றால் உயிருக்குப் பிறவித் துன்பம் இல்லை. எனவே இந்த ஆணவம் உயிரின் குணமாக இருக்குமானால் ஆணவத்தைக் கெடுக்கத் தக்கப் பொருள் உண்டா? என்றால் அதன் வலியைக் கெடுக்கக் கூடிய சிவனருள் உண்டு. ஆதலால் ஆணவம் உயிரின் இயல்பு அன்று. தனித்த பொருளே ஆகும்.
கொடிக்கவி பாடல் எண் 1 இல்
“ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேஇடம் ஒன்றுமேலிடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள்அடராது உள்உயிருக்குயிராய்த்
தெளிக்கும் அறிவுதிகழ்ந்து உளதேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர்அருள் கூடும்படி கொடிகட்டினனே.”
ஞானமாகிய பேரொளிக்கும், ஆணவமாகிய இருளுக்கும் இடம்கொடுத்து நிற்பது உயிர் ஒன்றாகும். உயிரில் இறைவனுடைய அருளாம் பதிஞானம் மேலிட்டு நின்றால் இருளாகிய ஆணவம் ஒடுங்கி நிற்கும். ஆணவம் மேலிட்டு நின்றால் ஞானம் ஒளிந்து நிற்கும். என்றாலும் ஆணவம் ஞான ஒளியை வென்று திகழ முடியாது. உயிரானது இறைவனுடைய அருளால் ஆணவம் விலகிச் சிறிது அறிவு பெற்றாலும் ஆணவ மலத்தின் சார்பினால் மும்மலத்தில் மூழ்கித்தான் கிடக்கும். எனவே, உயிர்களை மும்மலத்தில் இருந்து விடுவித்து இறையருள் கூடிடக் கொடி உயர்த்தினேன்.
தொடரும் . . . .