
(நாகேந்திரம் கருணாநிதி)
3. பாசம் (மலம், தளை)
பாசம் காரியரூபமாய் நிற்றல் பொதுஇயல்பாகவும், காரணரூபமாய் நிற்றல் சிறப்பியல்பாகவும் காணப்படுகின்றது. பாசம் ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தப் பெருமான்
“விளையாததோர் பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் தளையாயின தவிரவ்வருள் தலைவனது சார்பாம்” எனவும்
மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில்
“பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே” எனவும்
பாசம் உயிரைப் பொருந்தி நிற்கும் பற்று எனக் கூறுகின்றனர்.
நெஞ்சுவிடு தூது பாடல் எண் 17 தொடங்கி 22 வரையில்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..வயிரமே
கொண்டதொரு காமனுக்கும் கோடனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்கும் – திண்திறல்சேர்
இந்திரியம் பத்துக்கும் ஈரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்கள் ஐந்திற்கும் - சிந்தைகவர்
மூன்றுகுற்றம் மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை
என்றுநின்று செய்யும் இருவினைக்கும் – தோன்றாத
வாயுஒரு பத்திற்கும் மாறாத வல்வினையே
யாய கிளைக்கும் அருநிதிக்கும் – நேயமாம்
இச்சை கிரியை இவைதரித்தங்கு எண்ணிலா
அச்சம் கொடுமை அவைபூண்டு – கச்சரவன்
சீரில்நிலை நில்லாது திண்டாடும் பல்கருவி
வாரில்அகப் பட்டு மயங்கினேன்”.
வயிரம்போல் முதிர்ந்திருக்கின்ற காமத்திற்கும், கோபத்திற்கும் நிறைந்து கிடக்கின்ற மதத்திற்கும், பொறாமைக்கும் ஆட்பட்டேன். ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, பூதங்கள் ஐந்து, தன்மாத்திரை ஐந்து ஆகியவற்றிற்கு ஆட்பட்டேன். காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்கள், சாத்துவிதம், ராசதம், தாமதம் ஆகிய மூன்று குணங்கள், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்கள், கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்று நிலைகள், இருவினைகள், பிராணன் முதலாகச் சொல்லப்படுகின்ற காற்றுக்கள் பத்து ஆகியவற்றிற்கு ஆட்பட்டேன். என்னுடைய வினைகளுக்குக் காரணமாக விளங்குகின்ற உறவுகளுக்கும், பொருளாசைக்கும் ஆட்பட்டேன். இத்தகைய ஆட்பட்டவைகளால் ஆசைக்கும், செயல்களுக்கும் உரியவனாகி, அச்சத்திற்கும், கொடுமைக்கும் இடம் கொடுத்து, பாம்பினைக் கச்சாக அணிந்த இறைவனின் பெருமையை எண்ணாது கடல்போன்ற துன்பத்திற்கு ஆட்பட்டு மயங்கினேன்.
மேற் கூறப்பட்ட 36 தத்துவங்கள்
1. ஆன்மதத்துவம் ( பிரகிருதி மாயை ) 24. அவையாவன
1.ஐம்பூதங்கள் 5 ( 1.நிலம் , 2.நீர், 3.தீ, 4.காற்று, 5.ஆகாயம்.)
2.கன்மேந்திரியங்கள் 5 (1.வாய்-பேச்சு, 2.கை, 3.கால், 4.எருவாய், 5.கருவாய்.)
3.ஞானேந்திரியங்கள் 5 (1.மெய், 2.வாய்-நாக்கு, 3.கண், 4.மூக்கு, 5.செவி.)
4.தன்மாத்திரைகள் 5 (1.சுவை, 2.ஒளி, 3.ஊறு, 4.ஓசை, 5.நாற்றம்.)
5.அந்தக்கரணங்கள் 4 (1.மனம், 2.புத்தி, 3.சித்தம், 4.அகங்காரம்.)
2. வித்தியாதத்துவம் ( அசுத்த மாயா தத்துவங்கள் ) 7. அவையாவன
1.காலம், 2.நியதி, 3.கலை, 4.வித்தை, 5.அராகம், 6.புருடன், 7.மாயை-ஒருபகுதி
3. சிவதத்துவம் ( சுத்த மாயா தத்துவங்கள் ) 5. அவையாவன
1.நாதம்-சிவம், 2.விந்து-சக்தி, 3.சதாக்கியம்-சதாசிவம், 4.ஈஸ்வரம், 5.சுத்தவித்தை.
இவற்றை திருக்களிற்றுப் படியார் பாடல் எண் 37 இல்
“தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாம் முதல்நான்கும் – மேலைச்
சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்.”
உயிர் வினையின் பயனை அனுபவிப்பதற்கு எடுத்த உடம்பு முதலாகக் கொண்ட ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும், உடம்பு நுகர்வதற்குரிய வித்தியா தத்துவம் ஏழும் சேர்ந்து முப்பத்தொரு தத்துவங்களாகும். இவற்றிற்கு மூலமாக விளங்குகின்ற காரண உடலாக விளங்கும் விந்து முதலிய நால்வகைத் தத்துவமும், அதற்கு மேலாகிய சிவ தத்துவமும் ஆக முப்பத்தாறு தத்துவங்களையும் தெளிவாக அறிந்து கொண்டவர்கள் தம்மோடு பொருந்தி வந்த பிறவியை அறுப்பார்கள் இதனை அறிந்து கொள்வாயாக.
வினாவெண்பா பாடல் எண் 7 இல்
“உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்கால் ஒண்கருவி
தன்னளவும் நண்ணரிது தானாகும் – என்னறிவு
தானறிய வாரா தடமருதச் சம்பந்தா
யானறிவ தெவ்வா றினி.”
குளங்கள் பொருந்திய மருதநகரில் வாழுகின்ற சம்பந்தப்பெருமானே, நினைத்தற்கு அரிதாகிய இறைவன் திருவருள் கிடைக்கின்ற காலத்து முப்பத்தாறு தத்துவங்களாம் சடப்பொருளால் பொருந்தி அத்திருவருளை அறிய முடிவதில்லை. இந்தத் திருவருளாகிய பதி அறிவை உயிரும் தன் பசு அறிவால் அறிய முடியாது. ஆகவே, எப்படிப் பேரருளை அறிவது.
உண்மைநெறி விளக்கம் பாடல் எண் 1 இல்
மண் முதலாக சிவம் ஈறாக முப்பத்தாறு தத்துவத்தின் வடிவைக் காண்பது தத்துவ ரூபம். இத்தத்துவம் முப்பத்தாறினையும் உயிர் கூடி அறியும் அல்லாது தத்துவங்கள் தாமே அறியாது. எனவே அத்தத்துவங்களை அறிவற்ற பொருளாகிய சடம் என்று காண்பதுவே தத்துவக் காட்சியாகிய தத்துவ தரிசனம். மண் முதல் சிவம் ஈறாகிய தத்துவங்களை சடம் என்று கண்ட உயிர் இறைவனின் திருவருளால் அத்தத்துவங்களின் இயல்பையும், விளைவையும் நன்கு அறிந்து, தத்துவங்களோடு பொருந்தி நில்லாது விலகி நிற்றல் தத்துவசுத்தியாகும்.
தொடரும்.....