
(நாகேந்திரம் கருணாநிதி)
2. பசு ( உயிர், ஆன்மா )
ஆன்மா கருவிகரணங்களோடு நிற்றல் பொது இயல்பாகும். கருவிகரணங்களிலிருந்து நீங்கி உடனாய் நிற்கும் சிவமாக நிற்றல்சிறப்பியல்பாகும். உயிர்கள் அநாதி, என்றும் உள்ளவை. இறைவனால் உண்டாக்கப்படாதவை எனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. கிறீஸ்துவ, ஸ்லாம் தவிர்ந்த இந்தியாவிலுள்ள மற்ற எல்லா மதங்களும் இதை ஏற்றுக்கொள்கின்றன. உயிர் ஒரு தனிப்பொருள் என சைவசித்தாந்தம் பின் வரும் காரணங்களைக் காட்டி விளக்குகிறது.
2. உடல் அறிவற்றதாலும் உயிர் அறிவுள்ளதாலும் இரண்டும் வேறு வேறே.
3. உயிர் ஐம்பொறிகளையும் ஒருங்கே அறிவதால் அதிலிருந்தும் வேறாக உள்ளது.
இவ்வுண்மையைச் சிவஞானபோதம் 3 ஆம் சூத்திரம் பாடல் எண் 1 இல்
“உளதுஇலது என்றலின், எனதுடல் என்றலின்,
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்
உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்,
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.”
உயிர் என்ற ஒன்று இல்லை என்று கூறும்பொழுது அவ்வாறு கூறுவதற்கு அறிவு இருப்பதால் அந்த அறிவே உயிராக உள்ளது என்று அறியப்படும். எனது உடல் என்று கூறும்பொழுது எனது என்பது உடம்பிற்கு வேறாதலால் உடம்பு உயிர் ஆகாது. அதற்கு வேறாகிய உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது பெறப்படும். பொறிகள் அவற்றிற்கு உரிய ஒன்றையே அறிதலால் ஐந்து புலன்களையும் அறிகின்ற பொருளாக உயிர் என்ற ஒன்று உள்ளது அறியப்படும். அவத்தைகளில் ஒடுங்கி சூக்கும தேகத்தில் கண்ட கனவை தூல தேகத்தில் (நனவில்) அறிகின்ற பொருள் ஒன்று இருத்தலால் சூக்கும தேகம் உயிர் ஆகாது. அதற்கு வேறாகிய உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது அறியப்படும். உறக்க நிலையில் பிராணவாயு இருந்தும் இன்ப துன்ப நுகர்வு உடலுக்கு இல்லை. ஆனால் நனவு நிலையில் பிராணவாயு இருக்கும் பொழுது உடலுக்கு இன்ப துன்ப நுகர்வு உண்டு என்பதால் பிராணவாயுவிற்கு வேறான உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது பெறப்படும். உயிர் சிற்றறிவு உடையது. பிரமமோ பேரறிவு உடையது. எனவே, பிரமத்திற்கு வேறான உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது பெறப்படும். மாயையின் காரியமான உடம்பு தத்துவங்களின் கூட்டமாக அதாவது சமுதாயமாக இருந்தாலும் ஒவ்வொரு தத்துவமும் தனித்தனிப் பெயர் பெறுகிறதே தவிர உயிர் என்ற ஒட்டுமொத்தப் பெயரைப் பெறுவதில்லை. எனவே, அவற்றிற்கெல்லாம் வேறாகிய உயிர் என்ற ஒன்று உள்ளது என்பது பெறப்படும். அத்தகைய உயிர் மாயையால் உண்டாகிய தனுவாகிய உடம்பில் உள்ளது என்பது பெறப்படுகிறது.
உயிரின் பொது இயல்பானது உயிர் தனித்து நிற்காது ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி நிற்கும். இறைவனைத் தவிர வேறு பொருளைப் பற்றி நிற்பதும், கருவி கரணங்களுடன் நின்று ஐந்தவத்தைப்படுவதும், அறிவித்தால் இன்றி அறியமாட்டாததாயும் இருக்கும். உயிர்கள் ஆணவ மல மறைப்புக்கு உட்பட்டு ஆணவம் (தூலமாக), கன்மம், மாயை ஆகிய மும் மலக் கட்டுடையவர்கள் சகலர் எனவும், ஆணவம் (தூலமாக), கன்மம் ஆகிய இரு மலக் கட்டுடையவர்கள்பிரளயாகலர் எனவும், ஆணவ மலக்கட்டு மட்டும் (சூக்குமமாக) உள்ளவர்கள் விஞ்ஞானகலர் எனவும் மூன்று வகைப்படும். இவ்வுண்மையை
திருவருட்பயன் பாடல் எண் 12 இல்
“திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயு முளர்.”
ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலத்தை உடையவர் என்றும், மும்மலங்களில் ஒன்றாகிய மாயை நீங்கி மற்ற இரு மலங்களை உடையவர் என்றும், இவர்கள் தவிர ஆணவமலம் மட்டும் உடையவர் என்றும் மூவகையான ஆன்மாக்கள் உளர்.
சகல நிலையில் உயிர் உடலைப் பெற்று போகப் பொருட்களை அனுபவிக்கின்றது. மனம், வாக்கு, காரியங்களினால் செய்யப்படும் வினைகளுக்கேற்ப பல பிறவிகளை எடுத்து பல உடல்களைப் பெறுகின்றது. இதனை
சிவஞானசித்தியார் சுபபக்கம் பாடல் எண் 229 இல்
“உருவினைக் கொண்டு போக போக்கியத்து உன்னல் செப்பல்
வரு செயல் மருவிச் சத்தம் ஆதியாம் விடையம் தன்னில்
புரிவதும் செய்து இங்கு எல்லா யோனியும் புக்கு உழன்று
திரிதரும் சகலமான அவத்தையில் சீவன் சென்றே.”
கேவல அவத்தையில் நின்ற உயிர் சகல அவத்தையை அடையும். அச்சகலத்தில் உடம்பைப் பெற்றுப் போகத்திற்கு உரிய பொருள்களை மனம், வாக்கு, காயங்களால் நினைத்தல், உரைத்தல், இயற்றல் ஆகிய வினைகளைப் பொருத்தி, சத்தாதி விஷயங்களை விரும்பி நுகர்ந்து, எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி (உடம்பு) களை எடுத்துச் சுழன்று திரியும்.
உயிர் சகல நிலை மாறி அனாதி கேவல நிலையில் (பிறப்பிற்கு உட்படாத நிலை) உடலற்று ஆணவ மலம் ஒன்றையன்றி வேறு ஒன்றையும் பற்றாமல் எதனையும் செய்யவோ, அறியவோ இயலாமல், ஆணவத்தை விட்டு நீங்கும் வழி அறியாமல் நிற்கும் உயிருக்கு நல்வினை, தீவினைகளில் சம புத்தி ஏற்பட்டு இறை அருளில் அழுந்தி ஞானகுருவின் அருளைப் பெற்று மும்மலம் நீங்கப் பெற்று ஆன்ம போதம் நீங்கி நிறைவான அறிவைப் பெற்று இறைவன் திருவடியை அடைவதை சுத்த நிலை எனக் கூறுவர்.
உயிர்கள் தம்மிடமுள்ள சஞ்சித வினையின் ஒரு பகுதியை (பிராரப்த வினை) அனுபவிப்பதற்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு, அவ்வினை அனுபவித்து முடிந்த பின் அப்பிறப்பில்ச் செய்த வினையையும் (ஆகாமிய வினை) இறைவனால் சஞ்சித வினையுடன் சேர்த்து பின் இறைவனால் மறைக்கப்படுகின்றது. பசுவைப்பற்றிய மேலும் பல விளக்கங்களைப் பின் வரும் பாடல்கள் கூறுகின்றன.
திருவருட்பயன் பாடல் எண் 11 இல்
“பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந்
துறந்தோர் துறப்போர் தொகை.”
ஆன்மாக்களுள் முத்தி அடைந்தோர் தொகை ஆன்மாக்கள் வாழ்ந்த நாட்களுக்குச் சமமாகும். முத்தி அடையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாக்களின் தொகை இனிப் பிறந்து வாழும் நாட்களுக்குச் சமமாகும்.
திருவுந்தியார் பாடல் எண் 3 இல் கண்ணாலே காணப்பெற்ற திருவருளாகிய ஆசாரியரைக் கொண்டு தங்களுடைய வினைத் தொடர்பை அறுத்துக் கொண்டவர்கள் பிறப்பிற்கு உட்படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடரும் . . .