(நாகேந்திரம் கருணாநிதி)
சைவசித்தாந்தத்தை விரிவாகப் பார்ப்பதற்கு முன் சில விடையங்களைப் பற்றிப் பார்க்கலாம் என எண்ணுகின்றேன். முதலாவதாக
1. எமது சமயவிழாக்கள், கொண்டாட்டங்கள் இரு வேறு வேறு நாட்களில் நடப்பது ஏன் ?
1.நாம் காலம் காலமாகப் பாவிப்பது “வாக்கிய பஞ்சாங்கம்” ஆகும் இது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ரிசிகளால் அருளப்பட்ட சுலோகங்களின் அடிப்படையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அவர்களின் பழய கணித முறைப்படி கணிக்கப்படுவதாகும். இதையே பெரும்பாலான தமிழர்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் பாவிக்கின்றனர்
2.எமது பஞ்சாங்கக் கணிப்புகள் யாவும் சூரியன் உதயமாகும், அஸ்த்தமனமாகும் நேரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படுகின்றன.
3.சூரிய உதயம், அஸ்த்தமனம் இடத்திற்கிடம் மாறுபடுவதாலும், தற்கால விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக (சந்திரனின் வட்டப்பாதையில் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்து) பல வருடங்களுக்கு முன்பு “திருக்கணித பஞ்சாங்கம்” உருவாகியது.
4. இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பலகாலாக இரண்டு பஞ்சாங்கங்களும் பாவனையில் இருக்கின்றன. இரண்டு கணிப்புகளுக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடு பௌர்ணமி, அமாவாசை இல் குறைவாகவும், அஸ்டமி, நவமியில் கூடுதலாகவும் (அதிகபட்சம் 6 மணி 48 நிமிடம்) இருக்கின்றன. ஒரே நாட்டு நேரத்திற்குக் கணிக்கப்பட்டாலும் இவ் வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும்.
5. இந்தியாவில் திரு ஜவகர்லால் நேரு பிரதம மந்திரியாக இருந்தகாலத்தில் அவரால் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட பல அறிஞர்கள் கொண்ட குழு “திருக்கணிதம்” தான் தற்காலத்திற்குப் பொருத்தமானது என முடிவு செய்தது. ஆனால் இலங்கையிலும், இந்தியாவிலும் பலர் இப்பொழுதும் வாக்கிய பஞ்சாங்கத்தையே பாவிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனிப் பஞ்சாங்கங்கள் உள்ளன.
6. இலண்டனில் சூரியன் உதயமாகும், அஸ்த்தமனமாகும் நேரங்கள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் போன்றதல்ல. அங்கு சூரியஉதயம் சராசரி காலை 6.00 மணி இங்கு காலை 4.45 (கோடைகாலத்தில்) இலிருந்து, 8.00 (குளிர்காலத்தில்) மணிவரைக்கும் நடைபெறும். அதுமட்டுமல்ல சராசரி 4.5 அல்லது 5.5 மணி நேர வித்தியாசமும் உள்ளது. இதனால் இலண்டனில் இலண்டன் நேரத்திற்குக் திருக்கணித முறைப்படி கணிக்கப்பட்ட கலண்டர்தான் சரியானது. இதை இங்குள்ள ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் பெரும்பாலான ஆலயங்களும், குருமாரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மற்ற வெளிநாடுகளும் இம்முறையைப் பின்பற்றுவதுதான் சரியாகும்.
7. சூரியன் மகரராசிக்குள் (மகரசங்கிராந்தி) பிரவேசிக்கும் நாள் (நேரம்) தைப்பொங்கலாகும். 14 – 01 – 2015 அன்று இலண்டன் நேரத்திற்குப் பி.ப. 01.58 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.28 ஆகும். சூரியஅஸ்த்தமனத்திற்குப் பின்பாகையால் அங்கு மறுநாள் 15 – 01 – 2015 இல் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. உதாரணமாக லண்டனில் காலை 11.00 க்கு இந்நிகழ்வு நடைபெற்றிருந்தால் இலங்கை, இந்தியாவில் மாலை 5.30 மணியாகையால் அங்கும் 14 – 01 – 2015 இல் கொண்டாடப்பட்டிருக்கும். சூரியஅஸ்த்தமனத்திற்குப்பின்பு நடைபெறும் நிகழ்வுகளை மறு நாள் எடுப்பது மரபாகும். 14 ஆம் திகதி இலண்டன் நேரத்திற்குப் பி.ப. 01.58 மணிக்கு சூரியன் மகரராசிக்குள் பிரவேசிக்கும் போது 15 ஆம் திகதி இலண்டனில் பொங்கல் கொண்டாடுவது தவறாகும்,
8. இலண்டனில் ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றியம் ஆரம்பித்த முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்களில் ஒன்று “இலண்டனில் இலண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்ட ஒரே கலண்டரை எல்லோரும் பாவிப்பது” என்பதாகும். இவ்வருடம் பிரித்தானியச் சைவத் திருக்கோயில் ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் 9 ஆலயங்களும் , அங்கம்வகிக்காத பெரும்பாலான சைவஆலயங்களும் சேர்ந்து 30 இற்கு மேற்பட்ட ஆலயங்கள் இலண்டன் நேரத்திற்குத் திருக்கணித முறைப்படி கணிக்கப்பட்ட கலண்டரைப் பாவித்தபடியால் 14 – 01 – 2015 இல் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். ஆனால் ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோயில் மட்டும் வாக்கிய முறைப்படி கணிக்கப்பட்ட கலண்டரைப் பாவிப்பதால் 15 – 01 – 2015 இலும், இந்திய மக்களால் நடாத்தப்படும் ஈஸ்ற் காமில் உள்ள இலண்டன் ஸ்ரீ முருகன் ஆலயமும், இலண்டன் ஸ்ரீ மஹலக்சுமி ஆலயமும் இந்தியக் கலண்டரைப் பாவிப்பதால் 15 – 01 – 2015 இலும் கொண்டாடினார்கள். சில வர்த்தகர்களும் தைப்பொங்கல் 15 - 01 - 2015 என அச்சிட்ட மாதக்கலண்டர்களை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்ததாலும், சண் தொலைக்காட்சி போன்ற இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தியாவில் 15 – 01 – 2015 இல் நடக்க இருக்கும் பொங்கல் நிகழ்ச்சிகள் பற்றி முன்கூட்டியே லண்டனில் தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருந்ததாலும் மக்களிடையே தடுமாற்றம் ஏற்பட்டது.
9. இங்கு இருக்கும் எல்லாச் சைவ சமயத்தவர்களும் எமது சமய விழாக்கள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் நடத்தச் சம்பந்தப்பட்ட எல்லோரும் முக்கியமாக ஆலயங்களின் நிர்வாகிகள், குருமார்கள், கலண்டர்களை இறக்குமதி செய்யும், விற்கும் வர்த்தகர்கள் ஆகியோர் முயற்சித்து வரும் காலச் சந்ததியினர் நம்பிக்கையுடன் எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் எவ்வித ஐயப்பாடுமின்றிக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை வகுப்பது சம்பந்தப்பட்ட எல்லோரினதும் கடமையாகும்.