(நாகேந்திரம் கருணாநிதி)
சுத்தாத்துவிதம்
இறைவன் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில் ஆற்றுவதும், உயிர்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு உருவம் கொள்வதும் இறைவனின் பொது இயல்பாகும். பாலும் தண்ணீரும் போல உயிரும் உடலும் எவ்வாறு தனித் தனியானவையோ அவ்வாறே இறைவன் உயிர்களோடு ஒன்றாய் நின்றாலும் இறைவன் உயிராகவோ அல்லது உயிர் இறைவனாகவோ இருக்கமாட்டாது. இவ்வாறு இறைவன் உயிரோடு ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்பதைச் சைவ சித்தாந்தம் “சுத்தாத்துவிதம்” எனக் கூறுகிறது. இறைவன் உயிர்களொடு மட்டுமின்றி மற்ற அறிவற்ற பொருட்களுடனும் அத்துவிதமாய் நிற்கின்றான்.
சிவப்பிரகாசம் பாடல் எண் 7 இல்
புறச்சமயத் தவர்க்குஇருளாய் அகச்சமயத்து ஒளியாய்ப்
புகலளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப்
பிறப்பிலதாய் இருள்வெளிபோல் பேதமுஞ்சொற் பொருள்போல்
பேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய் உடல்உயிர்கண் அருக்கன்
அறவொளிபோல் பிறிவருமத் துவித மாகுஞ்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்த் திறனிங்கு தெரிக்கல் உற்றாம்.”
புறச்சமயத்தாரால் அறியப்படாததாய் அகச்சமயத்தவரால் அறியப்படுவதாய், கூறப்பட்ட காட்சி முதலிய பிரமாணங்களால் (அளவைகளால்) அறியப்படுவதாய், தங்கம் பல ஆபரணங்களாய் இருக்கும் தன்மை போலப் பிரமமாகிய இறைவனும் பல ஆன்மாக்களாய்த் தோன்றி நிற்கும் என்னும் அபேத வாதிகளின் கொள்கை இல்லாததாய், இருளும், ஒளியும் போல முதல்வனும் ஆன்மாக்களும் வேறாய் இருக்கும் என்னும் பேத வாதிகளின் கொள்கை இல்லாததாய், சொல்லும் பொருளும் போலப் பேதமும் அபேதமுமாய் இருக்கும் என பேதா பேதிகளின் கொள்கையும் இல்லாததாய், சிறப்பு நூலாகிய ஆகமங்கள் சொன்ன சரியை, கிரியை, யோகங்களைக் கடைப்பிடிப்பதால், உடலும் உயிரும் போல கலப்பால் ஒன்றாகினும், கண்ணும் சூரியனும் போலப் பொருள்த் தன்மையால் வேறாகியும், ஆன்மபோதமும், கண் ஒளியும் போல உயிருக்கு உயிராதல் தன்மையால் உடனாகியும் நிற்கின்றதைப் போன்று பிரித்தற்கு இயலாத அத்துவிதமாகும் சிறப்பினை உடையதாயும் உள்ள வேதாந்தத்தைத் தெளித்து உரைப்பது சைவ சித்தாந்தமாகும்.
இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை ஆற்றுகின்றான். அனாதியே ஆணவமலத்தைப் பற்றி அறியாமை வயப்பட்டுக் கிடக்கும் உயிர்களுக்கு அறிவு விளக்கம் ஏற்படும் பொருட்டு மாயையில் இருந்து தனு (உடம்பு), கரணம் (மனம் முதலிய உட் கருவிகள்), புவனம் (உயிர்கள் உலாவும் இடம்), போகம் (உயிர்கள் அனுபவிக்கும் போகப் பொருட்கள்) என்பனவற்றைத் தோற்றுவித்தல் படைத்தல் எனப்படும். தனு, கரண, புவன, போகங்களை ஒரு கால எல்லைவரை நிறுத்தி வைத்து உயிர்களுக்குப் பயன்படும்படி செய்தல் காத்தல்எனப்படும். ஒவ்வொரு பிறப்பிலும், இறப்பிலும் உழலும் நிலையிலிருந்து உயிர்களைச் செயலற்று இருக்குமாறு செய்து, தனு, கரண, புவன, போகங்களை உயிர்களிடம் இருந்து பிரித்து மாயையில் ஒடுக்குவது அழித்தல் எனப்படும். தனு, கரண, புவன, போகங்களைப் படைத்து அழித்தபின் உயிர்களை ஆணவமலம் பற்றி நிற்பதால் ஆணவமலம் உயிர்களின் அறிவை மறைத்து நிற்கின்றது. ஆணவமலத்தின் ஆற்றலை மிகுவித்து மாயை, கன்மங்களால் உயிர்களுக்கு உலக இன்பத்தைத் தோற்றுவித்துத் தன்னைக் காட்டாமல் உலகத்தையே உயிர்கள் நோக்கியிருக்குமாறு இறைவன் செய்தலே மறைத்தல் எனப்படும். பல் வேறு பிறப்புகளில் பிறந்து உழன்றதன் பயனாக உயிர்களுக்கு ஆணவமலப் பற்று சிறிது சிறிதாகக் குறைந்து இறை பற்று மிகுதியாகின்றது. இவ்வாறு உயிர்கள் இறைவனை நாடுவதால் இறைவன் உயிர்களுக்குத் தன்னைக் காட்டி மலத்தின் மறைப்பில் இருந்து உயிர்களைக் காத்துத் தன்னை அடையும்படி தன் திருவடியின் கீழ் இருந்து பேரின்பத்தை நுகரும் பொருட்டுச் செய்வதே அருளல் எனப்படும்.
இறைவன் ஆன்மாக்களின் மல நோயை நீக்கும் பொருட்டுச் சுத்தமாயையில் தொழில் செய்யத் திருவுளம் கொண்ட தறுவாயில் சிவம் எனவும், துன்பத்தை நீக்குவதற்கு எவ்வாறு தோழில் செய்ய வேண்டும் என எண்ணியபோது சக்திஎனவும், இவ்வுலகில் ஆன்மா இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் காலம் முடிவுற்றதும் ஆன்மாவை இருக்கும் உடலிலிருந்து வெளியேற்றும் போது உருத்திரன் எனவும், ஆன்மா இன்ப, துன்பங்களை அனுபவிப்பதற்காக நிலைக்கச் செய்யும் போது விட்டுணு எனவும், ஆன்மா அனுபவிப்பதற்கு உரிய உடல், கருவி, உலகம், பொருட்கள் ஆகியவற்றை தோற்றுவிக்கும் போது பிரமன் எனவும் கூறப்படுகிறான்.
இறைவன் மேற்கொள்ளும் திருமேனிகள் மூன்று வகைப்படும்
1. அருவத்திருமேனி – சிவம், சக்தி, நாதம், விந்து.
2. அருவுருவத்திருமேனி – சதாசிவம்
3. உருவத்திருமேனி – 25 மகேஸ்வர வடிவங்கள் (1.லிங்கோற்பவர், 2.சுகாசனர், 3.கலியாணசுந்தரமூர்த்தி, 4.அர்த்தநாரீஸ்வரர், 5.சோமாஸ்கந்தர், 6.சக்ரவாதர், 7.திரிமூர்த்தி, 8.அரிஅத்தர், 9.தஷிணாமூர்த்தி, 10.பிஷாடனர், 11.கங்காளர், 12.காலசம்காரமூர்த்தி, 13.காமசங்காரமூர்த்தி, 14.சலந்தரசம்காரமூர்த்தி, 15. திரிபுரசம்காரமூர்த்தி, 16.சரபமூர்த்தி, 17.நீலகண்டர், 18.திரிபாதமூர்த்தி, 19.ஏகபாதமூர்த்தி, 20.பயிரவர், 21.இடபாரூடர், 22.சந்திரசேகரர், 23.நடராசர், 24.கங்காதரர், 25.கசமுகாநுக்கிரகமூர்த்தி.
சிவஞானசித்தியார் சுப்பக்கம் பாடல் எண் 164 இல்
“சிவம் சக்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்து அருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றின்ஒன்றாய்ப்
பவந் தரும் அருவம் நாலு இங்கு உருவ நால் உபாயம் ஒன்றாம்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்”
சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேஸ்வரன், உருத்திரன், திருமால், அயன் ஆகிய இவ்வடிவங்கள் ஒன்பதும் ஒன்றிலிருந்து ஒன்றாய்த் தோன்றும். இதனை நவதரு பேதம் என்பர். சிவம், சக்தி, நாதம், விந்து இவை நான்கும் அருவத்திருமேனிகள், சதாசிவம் அருவுருவத்திருமேனி, மகேஸ்வரன், உருத்திரன், திருமால், அயன் ஆகிய நான்கும் உருவத்திருமேனிகள். இத்தகையவடிவங்களைக் கொண்டு இறைவன் ஐந்து தொழில்களையும் செய்பவன் ஆவான். அவனே ஏகநாதன் ஆவான்.
தொடரும்....