(நாகேந்திரம் கருணாநிதி)
7.ஆலய விக்கிரகங்களின் தத்துவம்
6. தட்சணாமூர்த்தி இறைவன் ஞானாசிரியனாகக் கல் ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து அகச்சந்தான குரவர்களாகிய 1.சனகர், 2.சனந்தனர், 3.சனாதனர், 4.சன்ற்குமாரர். ஆகிய நான்கு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் தோற்றமாகும். தட்சிணம் என்ற சொல் தெற்கு, ஞானம், சாமர்த்தியம் எனப் பொருள்படும். ஆலயங்களில் தட்சணாமூர்த்தி விக்கிரகம் தெற்கு நோக்கியே இருக்கும்.
“கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்”
தட்சணாமூர்த்தியை நாம் ஞானத்தால் தொழ வேண்டும். அவர் எங்களை எல்லாம் தனது மோனத்தால் அழைத்து சிவஞானத்தைத் திருநோக்காலே தந்தருளுகின்றார் இவரது வடிவமே தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது.
1. திருமேனி பளிங்கு போன்ற வெண்ணிறம் - தூய்மையை உணர்த்துகின்றது.
2. திருக்கரத்தில் உள்ள நூல் - இது சிவஞானபோதமாகும். ஞானங்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம் எனக் கூறி அந்த ஞானத்தாலேயே வீடு பேறு கிடைக்கும் என உணர்த்துகின்றது.
3. சின்முத்திரை - உயிரானது (சுட்டுவிரல்) மும்மலங்களிலிருந்து (நடுவிரல் – ஆணவம், மோதிரவிரல் – கன்மம்,சின்னவிரல் – மாயை) நீங்கி இறைவன் திருவடியை (பெருவிரலின் அடிப்பாகம்) அடைவதை உணர்துகின்றது.
4. வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல் - அனைத்துத் தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமையை உணர்த்துகின்றது.
5. புலித்தோல் – தீயசக்தியளை அடக்கி ஆளும் பேராற்றலை உணர்த்துகின்றது.
6. ஆலமரமும் அதன் நிழலும் – மாயையையும், அதன் காரியமாகிய உலகத்தையும் உணர்த்துகின்றது.
7. திருக்கரத்தில் உருத்திராக்க மாலை - 36 அல்லது 96 தத்துவங்களையும் உணர்த்துவதுடன், இதைக்கொண்டு திருவைந்தெழுத்தைப் பலமுறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம் பெறும் நெறி என உணர்த்துகின்றது.
8. நெற்றிக்கண் – ஞானமும் வீடுபேறும் பெற விரும்புவோர் புலனடக்கம் உடையவராக இருத்தல் வேண்டும் அல்லது நெற்றிக்கண் திறந்து காமன் எரியுண்ட கதைபோலாகிவிடும் என்பதை உணர்த்துகின்றது.
7. அர்த்தநாரீசுவரர். அர்த்த – பாதி, நாரி – பெண், ஈஸ்வரர்– இறைவன். அதாவது இறைவன் சிவசக்தியாகத் தோன்றும் காட்சி, அதாவது சிவன் பாதியாகவும் சக்தி பாதியாகவும் ஆணும் பெண்ணும் சமம் என்னும் தத்துவத்தைக் கூறும் வடிவம். இதில் சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்னும் தத்துவமும் அடங்குகிறது, இத்துடன் இடதுபக்கத்தை (இருதயம் உள்ள பக்கம்) சக்திக்குக் கொடுத்து இல்லறத்தில் பெண்ணின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் தோற்றமாக அமைகிறது.
8. விஷ்ணு இறைவன் (சிவம்) சக்திக்கூடாக காத்தல் தொழிலைச் செய்வதற்காக எடுத்த வடிவமாகும். இவர் திருமால், பெருமாள், கேசவன், கிருஸ்ணர், கோவிந்தன் எனவும் அழைக்கப்படுகின்றார். தமிழரின் முல்லை நிலக் கடவுளாக மாயோன் என அழைக்கப்படுவதைப் பின் வரும் தொல்காப்பியரின் பாடல் கூறுகிறது,
“மாயோன் மேய மன் பெறுஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்.”
விஷ்ணுவின் அருவ வடிவமாகச் சாலக்கிராமம் போற்றப்படுகிறது. இந்துக் கோவில்களில் மூலஸ்தானத்தில் சயனக் கோலத்தில் உள்ள ஒரே ஒரு தெய்வம் இவரே. அனேக ஆலயங்களில் விஷ்ணு அவருடைய சக்தியாகிய இலட்சுமியுடன் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கின்றார். விஷ்ணுவை பார்வதியின் அண்ணனாகவும், பிள்ளையார், முருகனின் மாமனாகவும் புராணங்கள் கூறுகின்றன.
வைஷ்ணவமதம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ளது. 12 ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் நூல் திராவிட வேதம் என அழைக்கப்படுகின்றது. மச்சபுராணம், வாமணபுராணம் என 12 புராணங்கள் இவரின் பெருமையைக் கூறுகின்றன. புராணங்கள் திருமால் 1.மச்ச அவதாரம், 2.கூர்ம அவதாரம், 3.வராக அவதாரம், 4.நரசிம்ம அவதாரம், 5.வாமண அவதாரம், 6.பரசுராம அவதாரம், 7.இராம அவதாரம், 8.பலராம அவதாரம், 9.கிருஷ்ண அவதாரம் ஆகிய 9 அவதாரங்களையும் (சிலர் கௌதமபுத்தரையும் சேர்க்கின்றனர்) எடுத்ததாகவும், வரும்காலத்தில் 10.கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும் கூறுகின்றன.
9. ஐயப்பன் புராணத்தில் இவர் சிவனின் புத்திரன் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் அரிஹரபுத்திரன், மணிகண்டன், சபரி, தர்மசாஸ்த்தா, வீரமணி என அழைக்கப்படுகிறார். புலி இவரின் வாகனமாகக் கூறப்படுகிறது.
10. துர்க்கை பராசக்தியின் ஒரு வடிவமாகும். துர்க்கை என்றால் தீய எண்ணங்களை அழிப்பவள் எனப் பொருள்படும். இவள் வீரத்திற்கு அதிபதியாக வணங்கப்படுகிறாள். இவள் மகிஷாசுரமர்த்தினி எனவும் அழைக்கப்படுகின்றாள். சிங்கம் இவளின் வாகனமாகக் கூறப்படுகிறது.
11. இலட்சுமி பராசக்தியின் ஒரு வடிவமாகும். இவள் செல்வத்திற்கு அதிபதியாக வணங்கப்படுகிறாள். இவள் விஷ்ணுவின் சக்தியாக விளங்குகின்றாள். இவள் லட்சுமி, லஷ்சுமி, மகாலட்சுமி, திருமகள், அலைமகள் ஸ்ரீதேவி, எனவும் 1.தனலட்சுமி, 2.தானியலட்சுமி, 3.தைரியலட்சுமி, 4.சந்தானலட்சுமி, 5.விஜயலட்சுமி, 6.வித்தியாலட்சுமி, 7.ஆதிலட்சுமி 8.கஜலட்சிமி என அட்ட இலட்சுமியாகவும் காட்சி அளிக்கின்றாள். இவள் செந்தாமரையில் வீற்றிருப்பாள்.
12. சரஸ்வதி பராசக்தியின் ஒரு வடிவமாகும். இவள் கல்விக்கு அதிபதியாக வணங்கப்படுகிறாள். இவள் பிரம்மாவின் சக்தியாக விளங்குகின்றாள். இவள் வாணி, கலைவாணி எனவும் அழைக்கப்படுகிறாள். இவள் வெண்தாமரையில் வீற்றிருப்பாள்.
13. நவக்கிரகங்கள் நவ என்றால் 9 கிரகங்கள் (கோள்கள்). அவையாவன 1.சூரியன், 2.சந்திரன், 3.செவ்வாய், 4.புதன், 5.வியாழன், 6.வெள்ளி, 7.சனி, 8.ராகு, 9.கேது. நாங்கள் பூமியில் பிறக்கும் போது இவற்றின் நிலைகளை வைத்து எமது ஜாதகம் எழுதப்படுகின்றது.
14. வைரவர் (பைரவர் எனவும் அழைக்கப்படுகின்றார்) இறைவனின் (சிவம்) மகேஸ்வர வடிவங்களில் ஒருவர். இவரைக் காவல் தெய்வம் எனக் கூறுவர். இவருக்கு நாய் வாகனமாகக் கொள்ளப்படுகிறது. இவர் காலபைரவர் (காசியில் இவருக்கு மதிப்பளிக்கப்படுகிறது), க்ஷேத்திரபாலர், வடுகர், உக்ரபைரவர், சட்டைநாதர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.