(நாகேந்திரம் கருணாநிதி)
7. ஆலய விக்கிரகங்களின் தத்துவம்
5. முருகன்,
முருகு என்னும் சொல் அழகு, இளமை எனப் பொருள்படும். இறைவன் (சிவம்) உயிர்களுக்கு அருளும் பொருட்டு அறிவு வடிவாக, ஒளி வடிவாக எடுத்த ஒரு வடிவமே முருகன் ஆகும். இதனால்தான் அருவுருவமாக ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாக இருக்கின்ற வேலை முருகனாக வணங்குகின்றோம். இதன் காரணமாகத்தான் சிவாலயத்தைத் தவிர முருகனின் ஆலயகோபுரங்களில் மட்டும்தான் “சிவ சிவ” என்னும் மந்திரம் எழுதப்படுகின்றது. சிவமும் முருகனும் ஒன்றே என்பதை கந்தபுராணம் பின்வரும் பாடல்கள் மூலம் விளக்குகிறது. முருகனே கந்தபுராணம் பாட கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு காஞ்சி குமரகோட்டத்தில் “திகடச்சக்கர’ என அடிஎடுத்துக் கொடுத்துள்ளார்.
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பது ஓர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.”
மேலும் வேலைப்பற்றி
“அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த அன்பால்
எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்,”
சிவனுக்குள்ள ஈசானம், தட்புருடம், வாமம், அகோரம், சத்யோசாதம், அதோமுகம் என்ற ஆறு முகங்களே ஆறுமுகனாகத் தோன்றியதைக் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது. முருகனிடமுள்ள ஞானவேலை இறை சிந்தனையைத் தவிர வேறு ஒரு சிந்தனையும் அற்ற அகச்சுத்தத்துடன் வணங்கும் பொழுது மலம் நீங்கிவிடும். இதனால் சிவப்பரம்பொருளின் இறை அருள் பெற சிவத்திடம் கூறும் சூக்கும பஞ்சாட்சர மந்திரமான “சிவாயநம” வை முருகனிடமும் கூறலாம் எனக் கூறப்படுகின்றது.
முருகனை முழுமுதற் கடவுளாக ஏற்று கௌமாரம் என்னும் சமயம் தோன்றியது. பிற்காலத்தில் இது சைவசமயத்துடன் ஐக்கியமாகிவிட்டது.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் 5 வயதுவரை ஊமையாக இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகன் காட்டிய பூவைப் பார்த்து “பூமருங்கும் எனத் தொடங்கிப் பாடிய முருகன் வரலாறு கூறும் கந்தர் கலி வெண்பாவில் பின் வருமாறு கூறுகின்றார்
“சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
ஞானம் அருள ஒரு முகம்
அக்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.”
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் உயிரை துறக்க கோபுரத்திலிருந்து வீழ்ந்த அருணகிரிநாதரை ஏற்று “முத்தைத் தரு” என அடி எடுத்துக் கொடுத்த முருகனைப் பற்றி அருணகிரிநாதர் பின்வருமாறு பாடியுள்ளார்
“ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீஅருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.”
முருகனைப்பற்றி சிவப்பிரகாசம் பாடல் எண் 4 இல்
“வளநிலவு குலம்அமரர் அதிபதியாய் நீல
மயிலேறி வரும்ஈசன் அருள்ஞான மதலை
அளவில்பல கலைஅங்கம் ஆரணங்கள் உணர்ந்த
அகத்தியனுக்கு ஒத்துரைக்கும் அண்ணல் விறல்எண்ணா
உளமருவு சூரன்உரம் எனதிடும்பை ஓங்கல்
ஒன்றிரண்டு கூறுபட ஒளிதிகழ்வேல் உகந்த
களபமலி குறமகள்தன் மணிமுலைகள் கலந்த
கந்தன்மலர் அடியிணைகள் சிந்தை செய்வாம்.” எனக் கூறப்பட்டுள்ளது..
கி.பி.12 ஆம் நூற்றாண்டில் (ஔவையார் என்ற பெயரில் காலத்திற்குக் காலம் 5, 6 பேர் வாழ்ந்துள்ளார்கள்) வாழ்ந்த ஔவையாருக்குக் காட்சி கொடுத்த முருகன் கேட்ட உலகில் அரியது, பெரியது, இனியது, கொடியது எது என்ற கேள்விகளுக்குக் கூறிய பதில்கள் பாடல்களாக உள்ளன.
முருகனை ஆறுமுகனாகவும், வள்ளி, தெய்வானையுடனும், ஆண்டியாகவும் தத்துவார்த்தமாகச் சித்தரித்துள்ளார்கள். அதாவது ஆறுமுகம் மூலம் சிவம் தான் முருகன் எனவும், இச்சாசக்தியை (ஆசை) வள்ளியாகவும், ஞானாசக்தியை (அறிவு) முருகனாகவும், கிரியாசக்தியை (செயல்) தெய்வானையாகவும், ஞானத்தை வேலாகவும், இறைஅடி சேர்ந்த ஆன்மாவை மயிலாகவும், குண்டலினி சக்தியை பாம்பாகவும் உருவகப்படுத்தியுள்ளார்கள். மொத்தத்தில் உயிர்கள் இல்லறத்தில் போகங்களை அனுபவித்தும் ஞானம் பெறலாம் எனக்கூறப்பட்டுள்ளது. ஆண்டியாக உருவகப்படுத்தி துறவறத்தில் இருந்து தவம் இயற்றி ஞானம் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
புராணங்களில் முருகனை சிவன் பார்வதி ஆகியோரின் மகன் எனவும், பிள்ளையாருக்குத் தம்பி எனவும் கூறப்பட்டுள்ளது,
முருகன் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார், அவையாவன ஆறுமுகன், சரவணபவன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், குகன், குமரன், வேலன், குருபரன், காங்கேயன், கந்தன், கடம்பன், மயில்வாகனன், வேலவன், செவ்வேள், ஸ்வாமி, சுரேசன், சேந்தன், சேயோன், விசாகன், முத்தையன், சோமஸ்கந்தன் என்பனவாகும். இந்தியாவின் வட மாநிலங்களில் முருகனை கார்த்திகேயன் என்றே அழைக்கின்றனர். பௌத்தர்கள் ஸ்கந்த என அழைக்கின்றனர்.
முருகன் தமிழ்க் கடவுள் என அழைக்கப்படுகின்றான். அத்துடன் குறிஞ்சி நில (மலையும் மலை சார்ந்த இடமும்) கடவுளாக சேயோன் எனவும் போற்றப்படுகின்றான். “முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்” என அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
ஆறுபடை வீடுகள்:
1. திருப்பெரும் குன்றம் (தெய்வானையை மணந்த திருத்தலம்,
2.திருச்செந்தூர் (சூரபத்மனை போரில் வென்ற திருத்தலம்),
3.பழநி (மாங்கனிக்காக விநாயகரோடு போட்டியில்த் தோற்று தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலம்),
4.சுவாமிமலை (சிவனுக்குப் பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலம்),
5.திருத்தணி (வள்ளியை மணந்த திருத்தலம்),
6.பழமுதிர்ச்சோலை (ஔவைக்கு நாவல்ப்பழம் உதிர்த்துக் காட்சி கொடுத்த திருத்தலம்).