
(நாகேந்திரம் கருணாநிதி)
7. ஆலய விக்கிரகங்களின் தத்துவம்
4. விநாயகர். இறைவன் (சிவம்) ஓசை வடிவமாக, பிரணவ வடிவமாக, “ஓம்” வடிவமாக வந்தபோது விநாயகர் என அழைக்கப்படுகின்றார். அவர் 1.கணபதி (பூதகணங்களுக்கெல்லாம் அதிபதி), 2.ஆனைமுகன் 3.கஜமுகன் (ஆனை முகத்தை உடையவர்), 4.விக்கினேஸ்வரன் (விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன்) 5.பிள்ளையார் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.
திருவடி – ஞானம் இதுவே ஆன்மாவைப் பொருந்தி நின்று மலங்களைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது.
பெருவயிறு – எல்லா உலகங்களும், உயிர்களும் இதற்குள் அடக்கம் எனக் குறிக்கிறது.
கொம்புகள் – மகாபாரதத்தை எழுதுவதற்காக கொம்பை உடைத்து வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பெரிய செவிகள் – எல்லாவற்றையும் கேட்டு நல்லனவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஐந்துகரங்கள் – 1. பாசத்தை ஏந்திய கரம் படைத்தலையும், 2. தந்தம் ஏந்திய கரம் காத்தலையும், 3. அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும், 4. மோதகம் ஏந்திய கரம் அருளலையும் 5. துதிக்கை அனுக்கிரகம் செய்வதையும் குறிக்கின்றன. இதன்மூலம் சிவம் செயல்படுத்துவது போல பிள்ளையாரும் பிரபஞ்ச இயக்கத்தை செய்வதாகக் கருதி பிள்ளையாரும் சிவமும் ஒன்று என்னும் தத்துவத்தை வலியுறுத்துகிறது. இத்தத்துவத்தின் அடிப்படையில் கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு காணாபத்தியம் என்னும் சமயம் உருவாகியது. பிற்காலத்தில் இச்சமயம் சைவசமயத்துடனும், வைஷ்ணவ சமயத்துடனும் ஐக்கியமாகிவிட்டது. புராணங்களில் பிள்ளையார் சிவன், பார்வதிதேவியின் மூத்த பிள்ளையாகவும், முருகனின் அண்ணனாகவும் கூறப்பட்டுள்ளது. மூஷிகம் இவரின் வாகனமாகக் கொள்ளப்படுகின்றது. கணேசபுராணம் இவரின் சரித்திரத்தைக் விரிவாகக் கூறுகிறது. விநாயகர் வழிபாடு சைவ சமயத்தில் மட்டுமல்லாமல் வைஷ்ணவம், பௌத்தம், சமண மதங்களிலும் உள்ளது.
“உ” என்னும் உகரம் பிள்ளையார் சுழியாக எழுதப்படுகின்றது. சைவசமயத்தவர்கள் எந்தவொரு விடையத்தையும் எழுதத்தொடங்கும் போதும் பிள்ளையார் சுழி போட்டே தொடங்குவது மரபாக இருந்தது. இவ்வாறே எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் போதும் மஞ்சள், குங்குமம், சந்தணம், வெல்லம், பசுவின் சாணம், புற்றுமண் போன்றவற்றால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து அவரை வணங்கியே அக்காரியம் தொடங்கப்படுகின்றது.
பிள்ளையார் பின்வரும் பல மூர்த்தங்களில் காட்சியளிக்கின்றார். 1.நர்த்தன கணபதி, 2.நடன கணபதி, 3.நரமுக கணபதி, 4.சித்தி புத்தி கணபதி, 5.வாதாபி கணபதி ஆகியவற்றுடன் மேலும் 32 மூர்த்தங்கள் உள்ளன, அவையாவன 1.உச்சிட்ட கணபதி, 2.உத்தண்ட கணபதி, 3.ஊர்த்துவ கணபதி, 4.ஏகதந்த கணபதி, 5.ஏகாட்சர கணபதி, 6.ஏரம்ப, கணபதி 7.சக்தி கணபதி, 8.சங்கடஹர கணபதி, 9.சிங்க கணபதி, 10.சித்தி கணபதி, 11.சிருஸ்டி கணபதி, 12.தருண கணபதி, 13.திரயாஷர கணபதி, 14.துண்டி கணபதி, 15.துர்க்கா கணபதி, 16.துவிமுக கணபதி, 17.துவிஜ கணபதி, 18.நிருத்த கணபதி, 19.பத்தி கணபதி, 20.பால கணபதி, 21.மஹா கணபதி, 22.மும்முக கணபதி, 23.யோக கணபதி, 24.ரணமோசன கணபதி, 25.லட்சுமி கணபதி, 26.வர கணபதி, 27.விக்ன கணபதி, 28.விஜய கணபதி, 29.வீர கணபதி, 30.ஹரித்திரா கணபதி, 31.க்ஷிப்ர கணபதி, 32.க்ஷிப்ரபிரசாத கணபதி.
ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது முதலில் பிள்ளையாரை வணங்கிய பின்பே மூலவரையும், மற்ற பரிவார மூர்த்தங்களையும் வணங்கவேண்டும்.
பிள்ளையாரை வணங்கி ஒரு செயலைத் தொடங்கினால் அச்செயல் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம். பின்வரும் பாடல்கள் போலப் பெரும்பாலான சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் காப்புச் செய்யுள் அல்லது கடவுள் வாழ்த்துக்கள் அமைந்துள்ளன.
திருமந்திரம் காப்புச் செய்யுளில்
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின்றேனே”
சிவஞானசித்தியார் காப்புச் செய்யுள் பரபக்கம் பாடல் இல. 1 இல்
“ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன்
நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான்
தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
இரவுபகல் உணரவோர் சிந்தைத்
திருகு ஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன்
றோஎன்னச் செய்யும் தேவே.”
திருவருட்பயன் காப்புச் செய்யுளில்
“நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்.”
சிவப்பிரகாசம் பாடல் எண் 3 இல்
“நலந்தரநூல் இருந்தமிழின் செய்யுட் குற்றம்
நண்ணாமை இடையூறு நலியாமை கருதி
இலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி
இணைவேல்கள் இகழ்ந்தகயல் கண்ணியொடும் இறைவன்
கலந்தருள வரும்ஆனை முகத்தான் மும்மைக்
கடமருவி எனநிலவு கணபதியின் அருளால்
அலந்துமது கரமுனிவர் பரவவளர் கமலம்
அனையதிரு அடியிணைகள் நினைதல் செய்வாம்.”
திருவிளையாடற் புராணம் காப்புச் செய்யுளில்
“சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே.”
14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் நல்வழியில் கடவுள் வாழ்த்தில் “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.”
தொடரும்......