(நாகேந்திரம் கருணாநிதி)
“மருத்துவம் பிழைத்தால் வாகடத்தைப் பார்
சாத்திரம் பிழைத்தால் கிரகணத்தைப் பார்”
மேற்கூறிய முதியோர் வாக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள ஆத்ம வாக்கியம் போன்றது. எமது முன்னோர் சமயக் கோட்பாடுகளுக்கூடாக வாழ்க்கை நெறியை மட்டுமல்ல நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறைகளையும் கூறிவைத்துள்ளார்கள். லண்டனில் ஏற்பட்டுள்ள 1.லண்டன் நேரத்திற்குக் கணித்த கலண்டரைப் பாவிப்பதா ? அல்லது இலங்கை இந்தியாவில் கணித்த கலண்டரைப் பாவிப்பதா ? 2.வாக்கிய பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா ? அல்லது திருக்கணித பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா ? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் வழியை மேற்படி முதியோர் வாக்கு கூறியுள்ளது.
1. இன்று லண்டனில் காலை 9.30 இற்கு முழுமையான சூரியகிரகணம் நடைபெற்றதை நாம் காணக்கூடியதாக இருந்தது.
2. லண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்டதாக எழுதியுள்ள மெய்கண்டான் கலண்டரில் இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
3. லண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்டதாக எழுதியுள்ள லீலாபஞ்சாங்கக் கலண்டரில் இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
4. லண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்டதாக எழுதியுள்ள தமிழ்த்தாய் நாட்காட்டியில் இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
5. வாக்கிய பஞ்சாங்க முறைப்படி லண்டன் நேரத்திற்குக் கணித்த ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் வெளியிடப்பட்ட கலண்டரில் இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
6. ஒரு வியாபார ஸ்தாபனத்தால் இலவசமாகக் கொடுக்கப்பட்ட மாதக் கலண்டரிலும் இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
7. திருக்கணித பஞ்சாங்க முறைப்படி லண்டன் நேரத்திற்குக் கணித்த ஸ்ரீ சிவசக்தி திருக்கணித கலண்டரில் “ - - - மத்யம் மு.ப. 09.31 - - - “ இல் சூரியகிரகணம் நடைபெற இருப்பதாகப் போடப்பட்டுள்ளது.
1.லண்டனில் சூரியகிரகணம் தோன்றியபோது இலங்கை, இந்தியாவில் கிரகணம் தோன்றாத படியால் இலங்கை, இந்தியாவில் கணித்த கலண்டரை லண்டனில் பாவிக்கமுடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியக்கலண்டரைப் பின்பற்றும் ஈஸ்ற்காம் முருகன் ஆலயமும், லஷ்சுமி நாராயணன் (மகாலஷ்சுமி கோவில்) ஆலயமும் இன்று கிரகணத்தின் போது பூட்டப்பட்டிருந்தன. ஆகவே இவ்விடையத்தில் இந்தியாவில் கணித்த கலண்டரை இவ் ஆலயங்கள் பின்பற்றவில்லை எனத்தெரிகிறது.
7. இவற்றிலிருந்து பார்க்கும் போது திருக்கணித பஞ்சாங்க முறைப்படி லண்டன் நேரத்திற்குக் கணித்த ஸ்ரீ சிவசக்தி திருக்கணித கலண்டர் தான் லண்டனுக்குப் பொருத்தமானது என்னும் முடிவுக்கு வரவேண்டியுள்ளது..
8. எனவே நான் கலண்டர் பற்றி எழுதிய முன் கட்டுரையில் கூறிய “இங்கு இருக்கும் எல்லாச் சைவ சமயத்தவர்களும் எமது சமய விழாக்கள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் நடத்தச் சம்பந்தப்பட்ட எல்லோரும் முக்கியமாக ஆலயங்களின் நிர்வாகிகள், குருமார்கள், கலண்டர்களை இறக்குமதி செய்யும், விற்கும் வர்த்தகர்கள் ஆகியோர் முயற்சித்து, வரும் காலச் சந்ததியினர் நம்பிக்கையுடன் எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் எவ்வித ஐயப்பாடுமின்றிக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை வகுப்பது சம்பந்தப்பட்ட எல்லோரினதும் கடமையாகும்.” என்ற கூற்றைத் திரும்பவும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.