“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின்றேனே”
“திருமந்திரம்” நூலின் காப்புச் செய்யுளாகிய மேல் உள்ள பாடலின் கருத்து ஐந்து திருக்கரங்கள், பிரணவத்தின் வடிவாக யானை முகம், வெண்ணிலாவின் மூன்றாம் பிறைச்சந்திரன் போன்ற ஒற்றைக்கொம்புடையவன், பரம்பொருளின் திருமகன், அறிவின் உச்சியாக இருப்பவனைச் சிந்தையில் வைத்துத் தியானித்து அவன் திருவடி போற்றி வணங்குகிறேன். (திருமந்திரத்தில் சிவனுக்கு நந்தி என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
என்னுள் இருந்து என்னை இயக்கும் பரம்பொருளின் அம்சமான ஞானமுதல்வனாகிய கணபதியை வணங்கிச் சரஸ்வதிதேவியின் அருளையும் வேண்டி இம்முயற்சியை ஆரம்பிக்கின்றேன்.
“பார்வை என மாக்களைப் பற்றிப் பிடித்தற்காம்
போர்வை எனக் காணார்”
“திருவருட்பயன்” நூலின் 45 ஆவதாக உள்ள மேல் உள்ள பாடலின் கருத்து அவ்வவ் இனத்துப் பழக்கப்பட்ட விலங்குகளின் துணையைக் கொண்டு அவ் இன விலங்குகளைப் பிடிப்பது போலப் பக்குவப்பட்ட ஆன்மாக்களைத் தன்வசப்படுத்துவதற்காக இறைவன் மானுடச் சட்டை தாங்கிக் குருவடிவாக வருவான்.
“குருவே சிவம்எனக் கூறினன் நந்தி . . . . . “ எனத்தொடங்கும்
“திருமந்திரம்” பாடல் எண் 1581 இலும் (சில புத்தகங்களில் பாடல் எண்கள் வேறுபட்டுள்ளன) சிவப்பரம்பொருள்தான் ஞான குருநாதன் எனக் கூறப்பட்டுள்ளது.
எனக்குக் குருவாக வந்த மதிப்பிற்குரிய ஆசான் “செந்நெறிச் செம்மல்” திருவாளர் சூ.யோ.பற்றிமாகரன் BA, Special Diploma(Oxford), BSC, PG Diploma, MA (Politics of Democracy), MA (Tamil) அவர்களின் பாதம் பணிந்து,
லண்டனில் சைவசித்தாந்தப் பயிற்சி மையத்தை ஆரம்பித்து எனக்குச் சந்தர்பத்தைத் தந்த லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்திற்கும், இதற்காக அயராது உழைத்த சைவப்பெரியார் திருவாளர் வ.இ.இராமநாதன் அவர்களுக்கும் நன்றி கூறி இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.
“நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”
“திருமந்திரம்” நூலின் 85 ஆவதாக உள்ள மேல் உள்ள பாடலின் கருத்து நான் பெற்றதான இறை அருள் – கருணையால் உணர்ந்தறிந்த, பேரின்ப ஞானப் பேற்றை, இவ்வுலக மக்களெல்லாம் பெற்றுய்ய வேண்டும் என்பதாகும்.
“தொல்காப்பியம்” 3 ஆம் பாகம் பொருளதிகாரம் 4 ஆம் பகுதி “கற்பியல்” 51 ஆவது பாடல்
“காமம் சான்ற . . . . . எனத் தொடங்கி . . . . சிறந்தது பயிற்றல் இறந்ததின் பயனே”
என முடியும் பாடல் நாம் கற்ற நல்ல விடையங்களை மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
இதற்கமய இறைவன் அருளால் கிடைத்த சிறு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.
ஆன்மா தன்னுள் இருக்கும் சிவத்தை அறிந்து, மல நீக்கம் பெற்றுச் சிவனடியைச் சேரும் வழியைக் காட்டுவதே சைவ சித்தாந்தத் தத்துவத்தின் நோக்கமாகும். சைவ சித்தாந்தத்தை விரிவாகப் பார்க்குமுன் சுருக்கமாக இதன் சாரத்தை முதலில்ப் பார்ப்போம்.
பின் வரும் விடையங்களைச் சைவ சித்தாந்தம் உறுதிபடக் கூறுகிறது.
1. பதி (இறைவன்), பசு (ஆன்மா), பாசம் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள்) இவை மூன்றும் அனாதியானவை. அதாவது என்றும் நிரந்தரமானவை. இவை தோண்றுவதுமில்லை அழிவதுமில்லை.
2. பதி (இறைவன்) ஒருவரே. அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். அவர் அருவமும் உருவமும் அல்லாத, குணமும் குறிகளும் இல்லாத, விருப்பு வெறுப்பு இல்லாதவர். அவர் சிவம் என அழைக்கப்படுகிறார். சிவம் ஆன்மாவின் மேல் உள்ள கருணையினால் ஆன்மாவை ஈடேற்றும் பொருட்டுச் சிவன், சக்தி, நாதம், விந்து (அருவத்திருமேனி), சதாசிவம் (இலிங்கத்திருமேனி) (அருவுருவத்திருமேனி), 25 மகேஸ்வர வடிவங்கள் ஆகவும், பிரம்மா, விஸ்ணு, உருத்திரன், சதாசிவன், மகேஸ்வரன் ஆக முறையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய தொழில்களைச் செய்வதற்கும், அவர்களின் சத்திகளாக இயங்கச் சரஸ்வதி, இலட்சுமி, உமையவள், மனோன்மணி, மகேஸ்வரி ஆகவும், வைரவர் (மகேஸ்வர வடிவங்களில் ஒண்று), வீரபத்திரர், கணபதி, முருகன், ஐயப்பன் போன்ற பல திருமேனிகளைத் தாங்கி நிற்கின்றார்.
3. பசு (ஆன்மா) ஒரு பொழுதும் தனித்து நிற்காமல் ஒன்றைச் சார்ந்து (மலத்தை அல்லது இறைவனை) நிற்கும். தானாக ஒன்றும் அறியாது. அறிவித்தால் அறியும் தன்மையுள்ளது. ஆன்மா தான் சேர்த்து வைத்த வினையின் (சஞ்சிதம்) ஒரு பகுதியை (பிராரப்தம்) இறைவன் ஆணைப்படி இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால்த் தேர்ந்தெடுத்த உடலுக்கு அனுப்பப்படுகிறது. ஆன்மா வினையை அனுபவித்து முடிப்பதுடன், இப்பிறவியில்ச் செய்த வினையின் ஒரு பகுதியை இறைவன் ஆணைப்படி இப்பிறவியில் அனுபவிப்பதுடன் மறு பகுதியை (ஆகாமியம்) சஞ்சித வினையுடன் சேர்ப்பதற்காக எடுத்துக்கொண்டு இவ்வுலக வாழ்வை விட்டு நீங்குகின்றது. இறைவன் ஆன்மாவுடன் சேர்ந்து இருந்தாலும் ஆன்மா ஆணவ மலத்தால்க் கட்டுண்டு இருப்பதால் இதை அறியாது. அத்துடன் இப்பிறவியில் ஆன்மா செய்யும் நல்வினை, தீவினைகளுக்கு இறைவன் பொறுப்பாகமாட்டான். ஆன்மா இப்பிறவி எடுத்த நோக்கமான பிராரர்த்தவினையை அனுபவிக்கும் செயலை இப்பிறவியிலேயே முடிக்கவேண்டும். இதிலிருந்து ஆன்மாவால் விடுபடமுடியாது. ஆனால் ஆன்மா இறைவனை நாடி இவ்வினையைச் சுலபமாகக் கழிக்கமுடியும்.
4. பாசம் (மும்மலங்கள்).
1. ஆணவம். ஆன்மாவிற்கு அறியாமையைச் செய்யும். இது தன்னையும் காட்டாது, பிறபொருளையும் காட்டாது. ஆன்மாவுடன் பிறப்பிற்கு முன்பும், பின்பும் சேர்ந்திருக்கும்.
2. கன்மம். இது இரு வகைப்படும்.
அ) மூலகன்மம் (காரணகன்மம்) (சஞ்சிதவினை) (தொல்வினை) ஆன்மா உடல் எடுக்குமுன் ஆன்மாவுடன் இருப்பது. ஆன்மா உடல் எடுக்கும் போது இறைவனால் இதில் ஒரு பகுதியை ஆன்மாவிற்கு வழங்கும் போது பிராரப்தவினை (ஊழ்வினை) (விதி) எனக்கூறப்படும்.
ஆ). காரியகன்மம் (ஆகாமியம்). ஆன்மா இப்பிறவியில்ச் செய்யும் வினை. இது நல்வினை, தீவினை என இருவகைப்படும்.
3. மாயை. இது சடப்பொருள் அனைத்தின் ஆற்றல்களும் ஒன்றாகத் திரண்டு நிற்பது. இவ்வுலகம், மற்றும் இங்குள்ள அனைத்துப் பொருட்களும் மாயையாகும். இது சுத்தமாயை, அசுத்தமாயை என இரு வகைப்படும். இறைவன் ஆன்மாவின் மலத்தை நீக்குவதற்காக மாயையை உபயோகிக்கின்றான்.