“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது பழமொழி. தைப்பொங்கல் தமிழர்களால் சமயங்கள் கடந்து தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தைமாதம் சூரியன் மகரராசிக்குள் (மகரசங்கிராந்தி) பிரவேசிக்கும் நாள் தைப்பொங்கலாகும். அதாவது தட்சணாயன காலத்தில் விலகிச் சென்ற சூரியன் உத்தராயன காலத்தின் தொடக்கமாக மகரத்தில் பிரவேசிக்கும் நாள். இது முழுக்க ழுழுக்க உழவர் சம்பந்தப்பட்ட விழாவாக இருந்தாலும் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. உழைக்கும் மக்கள் நாட்டில் மழைபெய்து பூமி நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காச் சூரியனுக்கும் (இயற்கைக்கும்), பூமியை உழுவதற்குப் பயன்படுத்திய மாட்டிற்கும் (மற்ற உயிரினத்திற்கும்) நன்றி தெரிவிக்கும் முகமாக அறுவடைக்கு முன்பாக சிறிது நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி சர்க்கரைப் பொங்கல் பொங்கிப், படைத்து வழிபட்ட விழாவே பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது,
பொங்கலுக்கான புராணக் கதையைப் பார்ப்போமானால் காலம் காலமாக ஆயர்கள் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திர விழா என்ற பெயரில் இந்திரனை வழிபட்டு வந்தனர். கிருஷ்ணபகவானின் அவதாரத்தின் பின் அவரின் அறிவுரைப்படி ஆயர்கள் ஆநிரைகளுக்கும், தங்களுக்கும் வளம்தரும் கோவர்த்தன மலைக்கு மரியாதை செய்தனர். இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும், மழையாலும் ஆயர்களைத் துன்புறுத்தினான். கிருஷ்ணபகவான் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்றினார். தவறை உணர்ந்த இந்திரன் கிருஷ்ணபகவானிடம் மன்னிப்புக் கோரி, தன்னையும் மக்கள் வழிபடவேண்டும் என வேண்டினான். அன்று தொடக்கம் மக்கள் பொங்கலுக்கு முதல் நாள் இந்திர வழிபாட்டை (போகிப் பண்டிகை) கொண்டாடினர். தை முதலாம் நாள் சூரியபகவானை சூரியநாராயணனாகப் பாவித்து வழிபட்டனர். மறுநாள் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப் பொங்கல்) எடுத்தனர். இலக்கிய காலத்திலிருந்தே இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திர விழா இருபத்தி எட்டு நாட்கள் நடந்ததற்கான சான்றுகளும் உள்ளன. இந்நாட்களில் ஆலயங்கள், வீடுகள், ஊர்களைச் சுத்தம்செய்து சிவன் முதலான தெய்வங்களுடன் காவல்தெய்வங்கள் உட்பட முதலில் இந்திரனையும் பின்பு சூரியனையும், மக்கள் வழிபாடு செய்தனர் எனக் கூறப்படுகின்றது.
தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்பதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. 1921 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறீஸ்த்தவம், முகமதியம் ஆகிய எல்லாச் சமயத்தைச் சேர்ந்த 500 தமிழ் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில்
1. தை முதல்நாளே தமிழ் ஆண்டுப் பிறப்பு.
2.திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டைப் பின்பற்றுதல்.
3.ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டித் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிடவேண்டும். என்னும் மூன்று முக்கிய முடிவுகளை அறிவித்தனர்.
இதற்கு ஆதாரமாகவும், சித்திரைப் புத்தாண்டு இடையில் வந்தது என்பதற்கு பின் வரும் சங்ககால நூல்களில் வரும் பாடல் வரிகளையும் கூறலாம்.
1. ”தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
2. “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்று குறுந்தொகை
3. “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநாநூறு
4. “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
5. “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை