
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என திருமூலநாயனார் திருமந்திரத்தில் கூறியுள்ளார். காலத்திற்குக் காலம் இறைவன் சில ஆன்மாக்களைக் கொண்டு சில விடையங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான். “எண்ணமே வடிவம் எண்ணுவது நானல்ல” என்பது சைவசித்தாந்த தத்துவங்களில் ஒன்றாகும். இறைவன் சம்பந்தமாக நாம் அழுக்கற்ற தூயமனத்துடன் சிவசிந்தனையுடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியமும் இறைவனால்ச் செய்யப்படுகின்றது என்ற எமது முன்னோரின் கருத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும். இறைவன் எனக்கு சைவசித்தாந்தம், திருமந்திரம் ஆகிய இரு பெரும் கடலில் சில துளிகளை படிக்க வைத்து பின்வரும் மூன்று புத்தகங்களை எழுதவைத்துள்ளான். “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமூலநாயனாரின் கூற்றுக்கு அமையவும், “சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” எனக் கூறும் தொல்காப்பியரின் கூற்றுக்கு அமையவும் இப்புத்தங்களை நீங்களும் படித்துப் பயனடைய வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் என நான் கருதுகின்றேன்.
புத்தகங்களைப் பற்றி நான் கூறுவதை விட இப்புத்தங்களை வாசித்து அதற்கு ஆசியுரை, அணிந்துரைகளைத் தந்த எனது குரு மதிப்பிற்குரிய திரு பற்றிமாகரன், மதிப்புக்குரிய சிவாச்சாரியார்களான மகேஸ்வரக் குருக்கள், வசந்தன் குருக்கள், கமலநாதக் குருக்கள் ஆகியோருடன் சிவயோகம் இந்து கலாச்சார மையம், சைவமுன்னேற்றச் சங்கம் ஆகிய அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் கூறியுள்ளவற்றுடன் எனது உரையையும் புத்தகங்களின் ஆரம்பத்தில் நீங்கள் வாசித்து அறிந்துகொள்ளலாம். இப் புத்தகங்களை வாசித்துப் பயன் பெற விரும்புபவர்கள் 07-07-2017 வெள்ளிக்கிழமை MANOR PARK (EASTHAM) இல் சைவ முன்னேற்றச் சங்கத்தின் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் (நடேசர்) ஆலயத்தில் இரவு 8.00 மணி பூசை நிறைவிற்குப் பின் இலவசமாக இப்புத்தகங்களை பெற்றுச் செல்லலாம்.
நன்றி