(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பக்தர்களுக்காக தெய்வம் செயல்ப்படும் செயல்களை நிரூபித்த நிகழ்ச்சிகளில் ஒன்றே அபிராமிப்பட்டர் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வாகும். அதாவது அம்பிகையானவள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமிப்பட்டரின் வேண்டுகோளை ஏற்று செயற்பட்ட வரலாற்றை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக இவ்விழா தை அமாவாசை அன்று சைவ ஆலயங்களில் முக்கியமாக அம்மன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. அபிராமி அந்தாதி பராசக்தியை வழிபட்ட அந்தணரான அபிராமிப்பட்டரால் பாடப்பட்டது. அந்தாதி (அந்தம் முடிவு, ஆதி துவக்கம்) என்பது ஒரு பாடல் முடியும் சொல்லிலிருந்து மறு பாடல் தொடங்குவதாகும்.
அக்காலத்தில் தெய்வபக்தியும், மதப்பற்றும் மிகுந்த முதலாம் சரபோஜி மன்னர் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரிப்பூம் பட்டினம் சென்று காவிரி சங்கமத்தில் நீராடினார். பின்பு திருக்கடவூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்வதற்காக அக் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குள் அபிராமிப்பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு எதுவும் இன்றி தியானத்தில் இருந்தார். மன்னர் வந்ததைக் கூடக் கவனிக்காமல் இருந்த இவரைப் பார்த்து வியந்த மன்னர் இவரைப்பற்றி விசாரித்தார். இவர் ஒரு பித்தர் என அருகிலிருந்தவர்கள் கூறியதை நம்பாத அரசர் வழிபாடு முடித்துத் திரும்பும் போது அபிராமிப்பட்டரிடம் இன்று என்ன திதி எனக் கேட்டார். அம்பிகையின் ஜோதிவடிவில் லயித்திருந்த அவர் இன்று பௌர்ணமி எனப் பதில் கூறினார். அரசரும் பரிவாரங்களும் சென்ற பின்பு தியானம் கலைந்த அபிராமிப்பட்டர் நடந்தவற்றை உணர்ந்து மனம் வருந்தினார். உலகம் தன்னை பித்தன் என கூறுவதை மெய்ப்பிப்பது போல தான் நடந்துகொண்டதை உணர்ந்த அவர் அம்பிகையே தன்னை காத்தருள வேண்டும் என அம்பிகையிடம் வேண்டிக் கொண்டார். பின்பு அம்மன் சந்நிதிக்கு முன்பாக ஒரு ஆழமான குழியை வெட்டி அதில் விறகை அடுக்கித் தீ மூட்டினார். குழிக்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி தந்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்துவிட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.
“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே”
எனத்தொடங்கும் பாடலை ஆரத்பித்து ஒவ்வொரு பாடலின் முடிவிலும் உறியின் கயிறுகளை ஒவ்வொன்றாக அறுத்துக் கொண்டே வந்தார். இவ்வாறு எழுபத்தொன்பதாவது பாடலாகிய
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
என்ற பாடலைப் பாடியவுடன், ஸ்ரீ அபிராமியம்பிகை வெளிப்பட்டுத் தோன்றி அபிராமிப்பட்டருக்கு காட்சி கொடுத்தருளினாள். அப்பொழுது தன் தாடங்கம் என்னும் தோட்டினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்தத் தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பௌர்ணமியைப் போலப் பிரகாசித்து ஜொலித்தது. அம்பிகை அபிராமிப்பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறியதையும் மெய்ப்பித்தேன். நீ தொடங்கிய அந்தாதியைத் தொடர்ந்து பாடு எனக் கூறி மறைந்தாள். அம்பிகை அருள் பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்று தன் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் நூறு பாடல்கள் அடங்கிய அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார். மன்னரும் மக்களும் அபிராமிப்பட்டரின் தெய்வீக நிலையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கோரினர். ஒரே இரவில் பாடப்பட்ட அபிராமி அந்தாதி உதிக்கின்ற எனத் தொடங்கி நூறாவதுபாடல் உதிக்கின்ற என முடிகிறது.