
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 4. சிவஞான சித்தியார்
சிவஞான சித்தியார் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவரில் (2 ஆவது) ஒருவரும், சகலாகம பண்டிதரும், மெய்கண்ட தேவநாயனாரின் மாணவருமான திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது. அருணந்தி சிவாச்சாரியார் மெய்கண்ட தேவநாயனாரால் சிவஞானம் கைவரப்பெற்று அவரால் அருணந்தி சிவாச்சாரியார் என்ற திருநாமம் பெற்றவர். சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் விரிவானதும், சிவஞான போதத்திற்கு அடுத்துப் போற்றப் பெறுவதும் சிவஞான சித்தியார் ஆகும். இந்நூல் சிவஞான போதத்திற்கு உரை நூல் (வழி நூல்) ஆகும். இந்நூல் முதற் பாகம் பரபக்கம் எனவும் இரண்டாவது பாகம் சுபக்கம் எனவும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. பரபக்கம் 301 பாடல்களைக் கொண்டது. இப்பகுதியில் இந்தியச் சமயங்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் பொருந்தாத கொள்கைகளை எடுத்துரைத்துச் சைவசித்தாந்தக் கொள்கையை நிலை நாட்டுகிறது. சுபக்கம் 328 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்பகுதி சிவஞான போதத்தின் பன்னிரண்டு சூத்திரத்திற்கு விரிவுரையாக அமைந்துள்ளது. இந்நூல் பிற சாத்திரநூல்களில் இல்லாத அளவை இலக்கணத்தை வரையறுத்துக் காட்டுவதுடன் தீட்சை முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்நூலின் சுபக்கப் பகுதியில்ச் சில பாடல்களைப் பார்ப்போம்
“ஒருவனோடு ஒருத்திஒன்று என்று உரைத்திடும் உலகம் எல்லாம்
வருமுறை வந்து நின்று போவதும் ஆதலாலே
தருபவன் ஒருவன் வேண்டும் தான்முதல் ஈறும் ஆகி
மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே.”
இப்பாடலின் பொருள், அவன் அவள் அது என்று கூறப்பெறும் உலகம் எல்லாம் தோன்றும் முறையிலே தோன்றி நின்று, ஒடுங்குகின்றன. ஆதலால், அவற்றைத் தொற்றுவித்து, காத்து, ஒடுக்குகின்ற ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுகிறான். அவ் ஒருவன் தனக்கொரு முதல்வன் இன்றி, தானே எல்லாவற்றிற்கும் காரணனாய், இயல்பாகவே அநாதி காலந்தொட்டுப் பாசம் நீங்கிய அறிவே உருவமாய் நிலைத்து நிற்பவன் ஆவான்.
இரண்டாம் சூத்திரம் (சுபக்கம் பாடல் எண் 91.)
“உலகெலாம் ஆகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி
அலகிலா உயிர்கள் கன்மத்து ஆனையின் அமர்ந்து செல்லத்
தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கு எய்தல் இன்றித் தானே
நிலவுசீர் அமலனாகி நின்றனன் நீங்காது எங்கும்.”
இப்பாடலின் பொருள், இறைவன் உலகனைத்தும் தானேயாய் (“அகம் பிரம்மஸி” – நான் பிரம்மமாய் இருக்கின்றேன் “தத்வம்சி” – அது நீயாய் இருக்கின்றாய்) (கலந்து) வேறுமாய் (பொருள் தன்மையால்), உடனுமாய், சத்தி வடிவாய் விளங்கி எண்ணற்ற உயிர்கள் இருவினைகளுக்கு ஈடாக இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு மாயா காரியமான உடல் கரணங்களைப் பொருந்தி, பிறந்து இறந்து தன் ஆணையின்வழி அடங்கிச் செல்லுமாறு செய்து அவற்றை நடத்தும் தலைவனாக விளங்குவான். இவை அனைத்தும் உலக உயிர்களுக்காக அன்றித் தன்கண் பொருந்துதல் இல்லாதவன். தன்னுடைய தனித்தன்மையாம் சுயம்பிரகாச இயல்பினை உடையவன், நின்மலன் ஆவான். உயிர்களிடத்தில் அத்துவிதமாய்க் கலந்து பிரிவின்றி நிற்பான்.
மூன்றாம் சூத்திரம் (சுபக்கம் பாடல் எண் 187.)
“உயிரெனப் படுவது இந்த உடலின் வேறு உளதாய் உற்றுச்
செயிர் உறும் இச்சா ஞானச் செய்திகள் உடையதாகிப்
பயில்உறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில்
துயிலொடும் அஞ்சவத்தைப் படும் உண்மை துரியா தீதம்.”
இப்பாடலின் பொருள், உயிர் என்று சொல்லப்படுவது இந்த உடம்பிற்கு வேறாகும். அவ்வுயிர் உடம்புகளைப் பொருந்தி, குற்றம் பொருந்திய இச்சை, ஞானக் கிரியைகளை உடையதாய், புண்ணிய பாவங்களைச் செய்யும், இன்ப துன்பங்களை அனுபவிக்கும். ஆராயுமிடத்து அறிவு சேர்தலோடு சாக்கிரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்), துரியம் (பேருறக்கம்), துரியாதீதம் (உயிர்ப்பு அடங்கல்) என்னும் ஐந்து அவத்தைகளை அடையும். துரியாதீதம் என்பது உயிர் மட்டும் உளதாய் இருக்கும் கேவல நிலையாம்.
நான்காம் சூத்திரம் (சுபக்கம் பாடல் எண் 191.)
“உணர்வன கரணம் என்னில் ஒன்றை ஒன்று உணரா வெவ்வேறு
அணைதரும் செயல்கள் நான்கும் அறிந்து அவை அடக்கி ஆக்கிப்
புணரும் உட்கருவி ஆக்கி புறக்கருவியினும் போக்கி
இணைதரும் இவற்றின் வேறாய் யான் எனது என்பது ஆன்மா.”
இப்பாடலின் பொருள், மனம் முதலாகிய அந்தக்கரணங்கள் ஒரு பொருளை அறியும் உயிர் தேவையில்லை என்றால் அந்தக்கரணங்கள் ஒன்றை ஒன்று அறியா. மேலும் ஒன்று அறிந்ததை மற்றொன்று அறியாது. ஆதலால் அந்தக்கரணங்கள் நான்கினையும் அடக்கி, வேண்டும்போது கரணங்களாக ஆக்கி, புறக்கருவிகளிலும் (மெய், வாய் முதலியன) செலுத்தி, தன்னோடு இணைந்திருக்கும் இக்கரணங்களுக்கு வேறாய் நான் எனது என்னும் ஒரு ஆன்மா உண்டு.
ஐந்தாம் சூத்திரம் (சுபக்கம் பாடல் எண் 231.)
“பொறி புலன் கரணம் எல்லாம் புருடனால் அறிந்தான்
அறிதரா அவையே போல ஆன்மாக்கள் அனைத்தும் எங்கும்
செறிதரும் சிவன் தனாலே அறிந்திடும் சிவனைக் காணா
அறிதரும் சிவனே எல்லாம் அறிந்து அறிவித்தும் நிற்பன்.”
இப்பாடலின் பொருள், ஐம்பொறிகளும் புலன்களும் அந்தக்கரணங்கள் ஆகியன எல்லாமே உயிரால் அறிவன ஆகும். ஆனால், அவைகள் தன்னை இயக்கும் உயிரை அறியாது. அதுபோல உயிர்களை இயக்கும் ஆன்மாக்கள் எல்லாம் இறைவனது துணையால் பொருள்களை அறியும். ஆனால், தான் அறிவதற்குக் காரணமான இறைவனை அறியாது. உயிரை அறியச் செய்கின்ற இறைவனே எல்லாவற்றையும் ஆன்மாக்களுக்கு அறிவித்து உடன் நிற்கின்றான்.
ஆறாம் சூத்திரம் (சுபக்கம் பாடல் எண் 240.)
“அறிவுறும் பொருளோ ஈசன் அறிவுறாதவனோ என்னின்
அறிபொருள் அசித்து அசத்தாம் அறியாதது இன்றாம் எங்கும்
செறி சிவம் இரண்டும் இன்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்
நெறிதரு சத்தின் முன்னர் அசத்தெல்லாம் நின்றிடாவே.”
இப்பாடலின் பொருள், சிவன் சுட்டி அறியப்படும் பொருளோ அல்லது அறியப்படாத பொருளோ என்று கேட்டால் அறியப்படும் பொருள் சடப்பொருளாய் அழிந்து போகும். ஒருவராலும் அறியப்படாத பொருள் சூனியமாகும் (இல் பொருள் ஆகும்). எனவே, எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கும் சிவபெருமான் சுட்டி அறியப்படுதல், அறியப்படாதல் ஆகிய இரண்டு தன்மையும் இன்றி, சிவத்தோடு சத்தாய் நின்று அவனருளால் அறியப்படும் நிலையை உடையதாம். அந்தச் சிவத்தின் முன்னர் உயிரைத் தவிர அசத்துப் பொருள்கள் நிற்கா.