(நாகேந்திரம் கருணாநிதி)
சைவசித்தாந்தத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போமானால்
முப்பொருள் உண்மைகள்
சைவ சித்தாந்தம் 1. பதி (இறைவன்), 2. பசு (ஆன்மா) (உயிர்கள்) 3. பாசம் (மலம்) (தளை) என்னும் மூன்றையுமே முப்பொருள் அல்லது உள்ப்பொருள் எனக் கூறி, அவற்றின் தன்மைகளை முப்பொருள் உண்மை எனக்கூறுகிறது. இவை மூன்றும் அனாதி என்றும் ஆதி அற்றது அதாவது முதல் முதலாகத் தோன்றாதது, தோற்றமும் இறுதியும் இல்லாதது, ஆக்கமும் அழிவும் இல்லாதது, யாராலும் ஆக்கப்படாததும் அழிக்கப்படாததும் ஆகிய என்றும் உள்ள பொருட்கள் எனக் கூறுகிறது. இதைச் சைவ சித்தாந்தம் இல்லது தோன்றாது, உள்ளது அழியாது என்ற“சற்காரியவாதம்” என்னும் விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கிறது. சத் – என்றும் உள்ள பொருள், காரியம் –செயற்படுவது, வாதம் – கொள்கை. இதன் விளக்கம் என்றும் உள்ள பொருள் எதுவோ அதுவே செயற்படும், இல்லாத பொருள் செயற்படாது. இலகுவாகச் “ சட்டியில் இருந்தால்த்தானே அகப்பையில் வரும் “ என்னும் பழமொழியை எடுத்துக்காட்டலாம்.
“நிலவுல காய ஆதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துத்
குலவினர் அளவ ளாவா கொள்கைய தாகி வேதத்
தலைதரு பொருளாய் இன்பாய் தாவில்சற் காரி யத்தாய்
மலைவறும் உணர்வால் பெத்த முத்திகள் மகித்தா மன்றே”
எனச் சற்காரிய வாதத்தை உறுதிபடக் கூறப்பட்டுள்ளது.
திருமந்திரம் பாடல் எண் 115 இல்
“பதிபசு பாசம் எனப்பகர் மூண்றில்
பதியினைப் போல்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதிஅணுகில் பசு பாசம் நிலாவே”
எனப் பதி, பசு, பாசம் மூன்றுமே அனாதியானவை எனக் கூறப்பட்டுள்ளது.
கந்தபுராணத்தில்
“சான்றவர் ஆய்ந்திடத் தக்கவரம்பொருள் மூண்றுள
மறையெல்லாம் மொழிய நின்றன ஆன்றதோர் தொழில்பதி
ஆர் உயிர்த்தொகை வான் திகழ் தளை என வகுப்பர் அன்னவே”
எனவும் இக்கூற்றிற்கு அணி சேர்க்கப்பட்டுள்ளது.
முப்பொருள் உண்மையை அறிவதற்குப் “பிரமாணம்“ (அளவை அல்லது அளத்தல்க் கருவி) மூலம் அளக்கப்படுகிறது. அளவைகள் பல இருந்தாலும் முக்கியமாக 1. காட்சி அளவை, 2. கருதல் அளவை, 3. உரை அளவை என்னும் 3 உம் பயன்படுத்தப்படுகின்றன.
1. காட்சி அளவை. காட்சி அளவை என்பது எந்த ஒரு பொருளையும் கண்ணால்க் கண்டு அப்பொருளின் உண்மையை ஏற்றுக்கொள்வதாகும்.
2. கருதல் அளவை. கருதல் அளவை என்பது ஒரு பொருளின் உண்மையை அப்பொருளைக் காணாமலேயே அப்பொருளில் உள்ள இயல்பைக்கொண்டு அப்பொருள் இருக்கவேண்டும் எனக் கருதி ஏற்றுக்கொள்வதாகும். மலைமேல்ப் புகை வருவதைக் கண்ட ஒருவன் அம்மலையில் நெருப்பைப் பார்க்காமலேயே நெருப்பு இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்வதை உதாரணமாகக் கொள்ளலாம்.
3. உரை அளவை. உரை அளவை என்பது காட்சி அளவையாலும், கருதல் அளவையாலும் அளந்து அறிய முடியாத பொருள் உண்மையை அனுபவமுடைய அருளாளர்களின் வாக்கைக்கொண்டு ஏற்றுக் கொள்வதாகும்.
காட்சி அளவை கண்ணால் நேரடியாகப் பார்ப்பதால் அதற்கு மேலதிக விளக்கம் தேவையில்லை எனக்கருதி கருதல் அளவைக்கு
சிவஞான சித்தியார் பரபக்கம் பாடல் எண் 33 இல்
“உள்ளதாவது கண்டது என்றுஉரை கொண்டதுஎன் உலகத்து நீ?
பிள்ளை யாய்வளர் கின்றநாள் உனைப் பெற்ற தாயொடு தந்தையைக்
கள்ளமேபுரி காலன் ஆருயிர் உண்ண இன்றுஒரு காளையாய்
கொள்ளவே உளர் என்று கொண்டு விளம்பு மாறுவிளம்பிடே”
அதாவது தாய், தந்தையரை இழந்த குழந்தை வளர்ந்த பின்பு தாய், தந்தையர் இன்னார் என உணர்தலும்,
சிவஞான சித்தியார் பரபக்கம் பாடல் எண் 34 இல்
“இடித்து மின்னி இருண்டு மேகம் எழுந்த போதுஇது பெய்யும்என்று
அடுத்த தும்அகில்சந்தம் உந்தி அலைத்து வார்புனல் ஆறுகொண்டு
எடுத்துவந்திட மால்வ ரைக்கண் இருந்து கொண்டல் சொரிந்தது என்று
முடித்ததும் இவை காட்சி அன்றுஅனு மானம் என்று மோழிந்திடே”
அதாவது இடி இடித்தால் மழை பெய்யும் என்பதும், சந்தணக் கட்டைகள் மிதந்து வந்தால் காட்டில் மழை பெய்தது என்பதை உணர்தலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
உரை அளவைக்கு
சிவஞான சித்தியார் பரபக்கம் பாடல் எண் 36 இல்
“பழுதிலா மறைகண்ட நூல்பழுது இன்றி உண்டது பாரின்மேல்
மொழிவர் சோதிடம் முன்னி இன்னது முடியும் என்பது முன்னமே
அழிவி லாததுகண்ட னம்அவை அன்றியும் சில ஆக மங்களின்
எழுதியோர்படி ஏன்றுகொண்டு இருநிதி எடுப்பதும் எண்ணிடே”
அதாவது முறையான வகையில் வேதமும், சோதிடமும் கற்றவர்கள் நடக்கும் என்பன நடப்பதையும் நிலத்தில்ப் புதையல் இன்ன இடத்தில் உள்ளது என்ற இடத்தில் அவை கிடைப்பதையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறிய முப்பொருள் ஒவ்வொன்றிற்கும் இரு இயல்புகள் உள்ளன அவையாவன
1. பொது இயல்பு (தடத்த இலக்கணம் அல்லது தூல நிலை) அதாவது அப்பொருள் பிறபொருளோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலை.
2. சிறப்பியல்பு (சொரூப இலக்கணம் அல்லது சூட்சும நிலை) அதாவது அப்பொருள் பிறபொருளோடு சம்பந்தப்படாமல்த் தனித்து நிற்கும் நிலை.
இம்மூன்று பொருட்களையும் பற்றித் தனித்தனியாகப் பார்ப்போமானால்
தொடரும்.....