வினாவெண்பா உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். நூலாசிரியர் தனது குருவிடம் சைவசித்தாந்த மெய்ப்பொருளியலில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தெளிந்து கொள்ள எழுப்பப்பட்ட வினாக்களாகப் பாடல்களை அமைத்துள்ளார். இவற்றிற்கான விடை இப்புத்தகத்தில் இல்லை. ஆனால் சித்தாந்தப் பயிற்சி உடையோர், அல்லது ஆசிரியரின் மற்ற புத்தகங்களான சிவப்பிரகாசம், திருவருட்பயன் ஆகியவற்றைப் பயின்று இதற்கான விடைகளை உணரமுடியும். இந்நூலில் வெண்பா அமைப்பில் 12 பாடல்கள் வினாக்களாகவும், 13 ஆவது பாடல் நூற்பயனாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் மூன்று வினாக்கள் ஆணவமலத்தைப் பற்றியதாக அமைந்துள்ளன. தொடர்ந்து வரும் வினாக்கள் உயிர் எத்தகைய அறிவுகளைப் பெறுகின்றது, 36 தத்துவங்கள், உயிர் வினைப் பயனை நுகர்தல், சீவான்மா, பரமாத்மா, முத்திநிலை அடைதல் போன்ற விடையங்கள் பற்றிக் கேட்கப்படுகின்றன. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.
“நீடும் ஒளியும் நிறைஇருளும் ஓரிடத்துக்
கூடல் அரிது கொடுவினையேன் – பாடிதன்முன்
ஒன்றவார் சோலை உயர்மருதச் சம்பந்நா
நின்றவாறு எவ்வாறு நீ.”
இப்பாடலின் பொருள், பரந்திருக்கின்ற ஒளியும் நிறைந்திருக்கின்ற இருளும் ஓரிடத்தில் கூடமாட்டாது. கொடியவினைகளை உடைய நான் உம்மை அறிந்து கொள்வதற்கு முன்பு சோலைகள் சூழ்ந்த மருதூர் என்ற திருத்தலத்தில் வாழுகின்ற சம்பந்தப் பெருமானே, நீங்கள் என்னிடத்தில் பொருந்த நின்றது எவ்வாறு?
இப்பாடலுக்கான விடை சிவஞானபோதத்தில் 11 ஆம் சூத்திரம் 2ஆம் அதிகரணத்து 1 ஆம் உதாரணவெண்பாவில் கூறப்பட்டுள்ளது. (ஈரமுள்ள மரம் பற்றி எரிகிறதல்லவா, நோயுடையவனை நோயில்லா வைத்தியர் அணுகித் தீர்வு தருவதில்லையா? ஆணவ இருள் உள்ள ஆன்மாவில் சிவமாகிய ஒளி உடனாக உள்ளதல்லவா? அதுபோல)
பாடல் எண் 2.
“இருளில் ஒளிபுரையும் எய்தும் கலாதி
மருளின் நிலையருளும் மானுங் – கருவியிவை
நீங்கின் இருளாம் நிறைமருதச் சம்பந்தா
ஈங்குன் அருளால் என் பெற.”
இப்பாடலின் பொருள், நிறைந்த மருதூரில் வாழுகின்ற சம்பந்தப் பெருமானே, என்னிடத்தில் ஆணவ மலம் மேலிட்டு நிற்கும் பொழுது ஞான ஒளி என்னிடத்தில் இருப்பதில்லை. மேலும் கலை முதலிய தத்துவங்களைப் பொருத்தி உடம்பு எடுத்த காலத்திலும் உலக போக மயக்கத்தால் ஞான ஒளி கிடைப்பதில்லை. எனவே, இந்த உடல் பொருள் கருவிகளை நீக்கிக் கொள்ளலாம் என்றால் மீண்டும் ஆணவ மேலிருக்கின்ற பழய நிலைக்கே சென்றடைகின்றேன். இப்படிப்பட்ட நிலையில் உன் திருவருளால் எனக்கு என்ன பயன் கிடைக்கும்?
இப்பாடலுக்கான விடை சிவப்பிரகாசம் பாடல் எண் 68 (ஞானம் வரும் முறை) இல் கூறப்பட்டுள்ளது. (இருள் பரவும் பொழுது ஒளி மறைந்து நிற்கும். ஆணவம் மேலிட்டால் ஞானம் மறையும். ஆன்மாவில் இருள் பரவுதல் என்பது வினைப்பயன் படர்தல். அவ்வாறே ஞானம் கிட்டுதல் என்பதும் வினைப்பயன் நீங்குதல். வினைப்பயனை நீக்குதல் தந்தருள வந்தருளும் இறைவனின் ஆட்கொள்ளுதல் என்னும் கருணைச் செயலால் மட்டுமே சாத்தியமாகும். இதனைச் செய்வதற்கேற்ப சகலத்தில் ஞானாசிரியனாக இறைவனே மானிடச் சட்டை தாங்கி எழுந்தருளிக் கிடைக்கச் செய்வான். எனவே உயிர் குருவருளால் இறைவனின் திருவருளைப் பெறுகிறது)
பாடல் எண் 3.
“புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞானம்
அல்லதில துள்ளதெனில் அந்நியமாம் – தொல்லையிருள்
ஊனமலை யாவா றுயர்மருதச் சம்பந்தா
ஞானமலை யாவாய் நவில்”.
இப்பாடலின் பொருள், உயர்ந்த மருதநகரத்தில் வாழும் சம்பந்தப் பெருமானே, ஞானமலையாய் விளங்குகின்றவரே – என்னுடைய சிற்றறிவு பேரறிவு ஆகாது. மேலும் என்னுடைய கருவிகளாகிய உடல், பொருள் மூலமாகப் பெறுகின்ற அறிவு ஏகதேச அறிவாக இருக்கின்றது. இந்த அறிவும் ஞான அறிவாம் பேரறிவு ஆகாது. எனவே என்னுடைய ஆணவமலம் துன்புறுத்தாத வண்ணம் பேரறிவு எப்பொழுது கிடைக்கும்?. ஏனென்றால் உள்ளது தோன்றும் இல்லது வாராது என்ற அடிப்படைத் தத்துவத்தின்படி என்னிடத்தில் இல்லாத ஞான அறிவு எங்ஙனம் தோன்றும்? கூறுவாயாக.
இப்பாடலுக்கான விடை சிவப்பிரகாசம் பாடல் எண் 73 இலும் சிவஞானசித்தியார் சுபபக்கம் 8 ஆம் சூத்திரம் பாடல் எண் 280 இலும் கூறப்பட்டுள்ளது. (பசு, பாச, பதி மூன்று ஞானங்களும் உயிருள் உள்ளனவே)
பாடல் எண் 7.
“உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்கால் ஒண்கருவி
தன்னளவும் நண்ணரிது தானாகும் – என்னறிவு
தானறிய வாரா தடமருதச் சம்பந்தா
யானறிவ தெவ்வா றினி.”
இப்பாடலின் பொருள், குளங்கள் பொருந்திய மருதநகரில் வாழுகின்ற சம்பந்தப் பெருமானே, நினைத்தற்கு அரிதாகிய இறைவன் திருவருள் கிடைக்கின்ற காலத்து முப்பத்தாறு தத்துவங்களாம் சடப் பொருளால் பொருந்தி அத்திருவருளை அறிய முடிவதில்லை. இந்தத் திருவருளாகிய பதி அறிவை உயிரும் தன் பசு அறிவால் அறிய முடியாது. ஆகவே, எப்படிப் பேரருளை அறிவது?
இப்பாடலுக்கான விடை சிவப்பிரகாசம் பாடல் எண் 70 இல் கூறப்பட்டுள்ளது. (பசுகரணம் சிவகரணமாகி ஆன்மா திருவருளில் பொருந்துவதால் அடையலாம்)
பாடல் எண் 8. (இறைவனின் திருமேனி எது?)
அருவேல் உருவன் றுருவேல் அருவன்று
இருவேறும் ஒன்றிற் கிசையா – உருஓரிற்
காணில் உயர்கடந்தைச் சம்பந்தா கண்ட உடல்
பூணும்இறைக் கென்னாம் புகல்.”